Published:Updated:

சினிமா விமர்சனம் : கலகலப்பு

விகடன் விமர்சனக் குழு

பிரீமியம் ஸ்டோரி
##~##

லகல கிளுகிளு மசாலா போட்டுக் கிளறிய கலர் உப்புமா. இரண்டு தலைமுறைகளாகக் கொடி கட்டிப் பறந்து, இப்போது 'ஆளில்லா டீக்கடை’யாக மாறிவிட்ட மசாலா கஃபேவைச் சகோதரர்கள் விமல் - சிவா இருவரும் மீண்டும் பரபரக்கவைப்பதே கதை!

 அதில், சோழர் காலக் கத்தி, செல்போனில் வைரம், ஆள் மாறாட்டத் துயரம், உருட்டுக்கட்டை மிரட்டல், அத்தைப் பெண் கடத்தல், தாத்தா பேரன் உருக்கம் போன்ற அனைத்து சுந்தர்.சி சமாசாரங்களும் 'உள்ளேன் ஐயா’ சொல்கின்றன.    

சீனியர்களுடன் பயணித்த அதே காமெடி ரூட்... இப்போது ஜூனியர்களுடன் ஜாலி டிரிப். காமெடிப் படங்களில் லாஜிக் பார்க்க வேண்டாம் என்பது என்ன லாஜிக்? என்னதான் கிச்சுகிச்சு மூட்டினாலும், இஷ்டத்துக்குப் பயணிக்கும் திரைக்கதை பல இடங்களில் கடுப்பேற்றுகிறது யுவர் ஆனர்!  

சினிமா விமர்சனம் : கலகலப்பு

விமல் 'ரொம்ப நல்லவனாக’ப் படம் முழுக்கப் போங்கு வாங்கிக்கொண்டே இருப்பதைத் தவிர, வேறு ஒன்றும் விசேஷம் இல்லை. திருட்டுத் தம்பி சிவா ஆங்காங்கே அசரடிக்கிறார். 'எங்க அமிதாப் மாமாவுக் குக் கோபம் வந்திருச்சு...’ என்று இளவரசு வைக் கோத்துவிடும்போதும் முட்டைக் கண் ஜான் விஜயிடம் 'தப்பு செஞ்சவங் களை சாமி கண்ணைக் குத்தும். உன் கண்ணு பெருசா வேற இருக்கு. அதனால சாமிக்கு ரொம்ப ஈசி’ என்று 'மிரட்டும்’ போதும் சிரிசிரிக்கவைக்கிறார்.

இரண்டாம் பாதியில்தான் தலைகாட்டுகிறார். ஆனால், அதன் பிறகு சார்தான் 'தல’! வேறு யார்... சந்தானமேதான்! 'சுத்தி நின்னு எட்டிப் பார்க்கிறதால சுடுகாடுன்னு நினைச்சிருப்பாரு’, 'நம்ம வீட்டுல புகுந்து நம்ம பொண்ணைத் தூக்காம... பின்ன பக்கத்து வீட்ல புகுந்தா நம்ம பொண்ணைத் தூக்குவாங்க?’ என்று ரைமிங் பஞ்ச் அடித்தும் அஞ்சலியைக் கடத்தும் சேஸிங் காட்சிகளில் 'கவுண்டர்’ டயலாக்ஸ் தூவியும் ஜவ்வுத் திரைக்கதையை ஜிவ்வென்று க்ளைமாக்ஸ் வரை கொண்டுவந்து விடுகிறார்.  

விமல், சிவாவின் காதலிகளாக வரும் அஞ்சலி, ஓவியா இருவரும் கதைப்படி தோழிகள். ஆனால், படத்தில் 'உரித்த கோழிகள்’ என்பது இன்னும் பொருத்தம். காதல் தோல்வியில் சகோதரர் கள் டாஸ்மாக்கில் சலம்பும்போதுகூட, ட்ரீம் சீக்வென்ஸில் சம்பந்தமே இல்லாமல் அழகு காட்டி ஆடுகிறார்கள். அட, போங்கப்பு!

சினிமா விமர்சனம் : கலகலப்பு

சின்சியர் ஸ்ட்ரிக்ட் ஆபீஸராக அறிமுகமாகும் அஞ்சலி, சடாரென்று ஜாக்கெட் பாவாடை கட்டி விமலுடன் ஆடிவிட்டு, திடீரென்று தாத்தா மேல் அதீத பாசத்தைப் பொழிந்து அவரைக் கழட்டிவிடுகிறார். 'களி தின்னவன்தானே!’ என்ற கமென்ட்டில் காலியாகிறது சிவா - ஓவியாவின் அமர காதல். இரு ஜோடிகளின் பிரியத்தில் எந்த ஈர்ப்பும் இல்லாததாலேயே அவர்கள் பிரியும்போதும் நமக்கு எந்த ஃபீலிங்ஸும் இல்லை. விஜய் எபிநேசரின் இசையும் யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் தேமே என்று கடந்து செல்கின்றன.  

தசாவதார கெட்டப்களில் தலை மறைந்து வாழும் இளவரசு ஒரு பக்கம் திரும்பிய கழுத்தோடு அடிக்கும் லூட்டி, கடத்தல் கார் சேஸிங் காட்சிகளில் கலக்கும் மனோபாலாவின் அப்பாவி கமென்ட்டுகள், அண்டர்வேரில் வைரங்களைப் பறிகொடுக்கும் ஜான் விஜய், 'போலீஸ் மேனியா’வாக 'மிஸ்டர் அலெக்ஸ் பாண்டியன் டிபார்ட்மென்ட்ல இன்னுமா உங்களுக்கு பேன்ட் கொடுக்கலை?!’ என்று ஜார்ஜ் லந்து கொடுக்கும் இடங்கள் என ஆங்காங்கே... ரிலாக்ஸ் கஃபே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு