Published:Updated:

உலகம் ஒற்றை ரசிகர்களால் நிரம்பியது!

ஆர்.சரண்

பிரீமியம் ஸ்டோரி
##~##

மியூஸிக்கல் க்ரீட்டிங் கார்டுபோல படம் பண்ணுவது இயக்குநர் வஸந்த் ஸ்பெஷல். அவருடைய அடுத்த வாழ்த்து அட்டை...  'மூன்று பேர்... மூன்று காதல்’. சேரன், அர்ஜுன், விமல் என்று மூன்று பேர்... அவர்களின் மூன்று காதல்கள்.  

 ''நிச்சயம் இந்தத் தலைப்பு சொல்ற விஷயம், படம் பார்க்கும்போது நீங்க எதிர்பார்க்காத தொனியில் இருக்கும். ஆனா, அது பெரிய அதிர்ச்சியோ, மனசைப் பிசையுற சோகமோ இல்லை. இது காதல் கதையும் இல்லை. காதலைப் பற்றிய கதை. மூணு காதலுக்கும் என்ன சம்பந்தம், மூணு கேரக்டர்களுக்கும் என்ன லிங்க்னு அழகா ஸ்க்ரீன்ல பார்க்கிறப்போ, ஆச்சர்யமா இருக்கும்!''

''மூணு ஹீரோக்களை இயக்கிய அனுபவம்?''

''சேரன் என் சிறந்த நண்பர். அவரோட 'ஆட்டோகிராஃப்’ என் ஆல்டைம் ஃபேவரைட். என்னோட 'ரிதம்’, 'சத்தம் போடாதே’ அவருக்கு ரொம்பப் பிடிக்கும். 2005-ல தேசிய விருது தேர்ந்தெடுக்கும் கமிட்டியில் நானும் இருந்தேன். 'ஆட்டோகிராஃப்’ படத்தை ஏனோ வடக்கத் திய நடுவர்கள் கண்டுக்கவே இல்லை. முதல் ரவுண்டில் இடம்பெறக்கூட முடியாமத் தத்தளிச்ச படத்தை விருதுப் பட்டியலில் இடம்பெறவெச்சதில் என்னோட பங்களிப்பும் உண்டு. இந்தப் படத்தில் குணசேகர் என்கிற கேரக்டர்ல வர்றார். கடலுக்குப் பக்கத்துல சின்ன ஊர்ல நடக்குற அவரோட போர்ஷன் ஒரு க்யூட் கவிதை மாதிரி இருக்கும். அர்ஜுன் செம ஸ்மார்ட் ஆக்டர். 12 வருஷத்துக்கு முன்னாடி 'ரிதம்’ படத்துல பார்த்த அதே துறுதுறு அர்ஜுனை இப்பவும் நீங்க பார்க்கலாம். நாகேஷ் எப்படி... தான் சிரிக்காம மத்தவங்களைச் சிரிக்கவெச்சாரோ, அதே மாதிரி பண்றார் விமல். அவரோட போர்ஷன் மட்டும் கொஞ்சம் பாக்கி. அது முடிஞ்சா, படம் ரெடி.

உலகம் ஒற்றை ரசிகர்களால் நிரம்பியது!

அப்புறம் ஹீரோயின்ஸ்... 'தாமிரபரணி’ பானு மறுபடியும் வர்றாங்க.  சுர்வீன்னு ஒரு பஞ்சாபிப் பொண்ணு, ஸ்ருதி மோகன்னு ஒரு மும்பைப் பொண்ணுனு ரெண்டு பேரை அறிமுகப்படுத்துறேன். எனக்கு ஒரு ராசி இருக்கு. அவங்க இன்னொரு சிம்ரன், ஜோதிகாவா உருவாகலாம்னு அந்த ராசி இப்பவே சொல்ற மாதிரி இருக்கு.''    

''யுவன்ஷங்கர் மீது அப்படி என்ன ஸ்பெஷல் காதல்?''

'' 'பூவெல்லாம் கேட்டுப் பார்’ பண்ணும் போது, டென்த் படிச்சிட்டு இருந்தார் யுவன். மொபைல் போன்ல வீடியோ கேம் விளையாடிட்டு இருந்தவரை, 'ஏ கண்ணா... ப்ளீஸ்ப்பா... அப்புறம் விளையாடுப்பா’னு தாஜா பண்ணி கம்போஸிங் குக்கு இழுத்துட்டு வருவேன். ஆனா, அப்ப போட்டுக் கொடுத்த 'இரவா பகலா...’ பாட்டு இப்பவும் மனசுக்குள் குளிரடிக்கவைக்குதுல்ல... அதான் யுவன். இந்தப் படத்துக்கு அஞ்சு பாட்டும் சான்ஸே இல்லை... இந்தப் படத்தின் யுவன் - நா.முத்துக்குமார் கூட்டணிதான் இந்த வருஷ மெஹா ஹிட். பாலிவுட்டின் நம்பர் ஒன் பாடகர் சோனு நிகாம் 'ழ’வை அவ்வளவு அழகா உச்சரிச்சு, 'மழை மழை மழையோ மழை உன்னை நினைத்தாலே மழை’னு பாடி இருக்கார். 'ரா 1’ படத்தின் சம்மக் சலோ பாட்டு பாடின நந்தினியை, 'ஆஹா! காதல் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுதே...’னு தமிழைக் கொஞ்ச வெச்சிருக்கோம்!''

உலகம் ஒற்றை ரசிகர்களால் நிரம்பியது!

''நீங்க அறிமுகப்படுத்திய அல்லது உங்களால் பிரேக் கிடைச்சவங்க இப்போ மெகா ஸ்டார்களா இருக்காங்க. அவங்களோட படம் பண்ணலாமே?''

''சூர்யா என்னோட பெருமைனு சொல்வேன். 'ஆசை’க்கு நடிக்கக் கேட்டு, 'எனக்கு நடிப்பு வராது’னு சொன்னவரை, காத்திருந்து 'நேருக்கு நேர்’ல நடிக்கவெச்சேன். எல்லாருக்கும் இப்போ பிரேக் கொடுக்கும் அஜீத்துக்கே, அப்போ 'ஆசை’ மூலமா பிரேக் கொடுத்தேன். பிரகாஷ்ராஜை இன்னொரு கட்டத் துக்கு எடுத்துட்டுப் போனேன். இவங்க எல்லாரும் என் பசங்க மாதிரி. எனக்கு அந்த அளவுக்கு வயசு ஆகலைன்னாலும், அவங்க இவ்வளவு உச்சம் தொட்டது, எனக்குள் ஒரு தகப்பன் ஸ்தானத்துக்கான பூரிப்பைக் கொடுக்குது. அவங்களுக்குத் தகுந்த கதை அமைஞ்சு, அவங்கதான் நடிக்கணும்னு இருந்தா, நிச்சயம் அது நடக்கும். ஆனா, அதற்கான தேவையை அந்தச் சூழல்தான் தீர்மானிக்கணும்.''

''ரொம்ப மெனக்கெட்டு செதுக்கிச் செதுக்கி நீங்கள் இயக்கிய படங்கள் தோல்வி அடையும்போது எப்படி எடுத்துக்குவீங்க?''

''நல்ல கேள்வி. ஆனா, என் பத்து படங்களிலும் நான் ஏதோ ஒரு விஷயத்தைப் புதுசா முயற்சி பண்ணி

உலகம் ஒற்றை ரசிகர்களால் நிரம்பியது!

இருக்கேன். கமர்ஷியல் வெற்றி கிடைக்காத 'ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே’ படத்துல நாலு இசைஅமைப்பாளர்களை அறிமுகப்படுத்தினேன். 'ரிதம்’ படத்துக்கான அங்கீகாரம் அப்போ கிடைக்கலைன்னாலும், இப்பவும் எங்கேயோ யாரோ நெகிழ்ச்சியில் என் கையைப் பிடிச்சுப் பாராட்டுறாங்க. ஏ.ஆர்.ரஹ்மான் அவரோட பெஸ்ட் கம்போசிஷன்ல 'ரிதம்’க்கு இடம் இருக்குனு சொல்றார். 'கேளடி கண்மணி’ பார்த்துட்டு 'எப்படி இவ்ளோ சின்ன வயசுல இப்படி ஒரு படம் எடுத்தே’னு எல்லோரும் கேட்டாங்க. சுஜாதா சார் 'ஒற்றை ரசிகன்’னு அழகா ஒரு விஷயம் சொல்வார். அதாவது, ஒரே ஒரு ரசிகன் எங்கேயோ ஒரு இடத்துல ஒரே ஒரு முறை பாராட்டினாக்கூட கிடைக்கிற சந்தோஷத்துக்கு நிகரா வேற எதுவும் இருக்காது. போன வாரம் கே.எஸ்.ரவிகுமார் பொண்ணு கல்யாணத்துலகூட ஒரு பொண்ணு எங்கிட்ட வந்து, 'உங்க படங்களைப் பார்த்துப் பல முறை அழுதிருக்கேன் சார்’னு சொன்னாங்க. அப்படியான அந்த ஒரு ரசிகரை நான் திருப்திப்படுத்தினாக்கூடப் போதும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு