Published:Updated:

காப்பி அடிக்காதீங்க!

'டிஸ்கோ கிங்' பப்பி!ஆர்.சரண்

காப்பி அடிக்காதீங்க!

'டிஸ்கோ கிங்' பப்பி!ஆர்.சரண்

Published:Updated:
##~##

'ஐயம் எ டிஸ்கோ டான்ஸர்...’, 'கொய் யஹான் அஹா நாசே... ஹொவ்வ ஹொவ்வா...’, - இந்த இந்திப் பாடல்களைக் கேட்டதும் தன்னால் தாளம் போடுகிறீர்களா? அப்போ 'டிஸ்கோ கிங்’ பப்பி லஹிரியின் தீவிர ரசிகர் நீங்கள். 80-களில் இந்திய இசையை டிஸ்கோவால் அதிரடித்தவர். இந்த 59 வயது இசைஞரின் இசை தமிழக 'பெல்பாட்டம்’ இளசுகளை ஈர்த்தது நிஜம். இப்போதும் அமெரிக்க 'அடிக்டிவ்’ வகை ரீ-மிக்ஸ் ஆல்பங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரே இந்தியர் இவர்.

''உங்க கேரியர்ல பெரிய ஹீரோக்களுக்கு மட்டுமே மியூஸிக் பண்ணியிருக்கீங்களே... ஏன்?''

''உண்மைதான். அமிதாப் ஜி, ஜிதேந்திரா, மிதுன் சக்ரபர்த்தி, ரஜினிகாந்தா பாய் படங்களுக்குத்தான் ஜாஸ்தி மியூஸிக் பண்ணியிருக்கேன். அதை ஒரு பாலிஸியாவே வெச்சிருந்தேன். பெங்காலி படங்களில் மட்டும் நடிச்சுட்டு இருந்த மிதுனை இந்தியா வின் ஸ்டார் டிஸ்கோ டான்ஸரா மாத்தினது என் இசைதான். ஹீரோக் கள் படத்துக்கு நான் போட்ட ஒவ்வொரு டியூனும் டபுள் மடங்கு அங்கீகாரம் வாங்குச்சு. 'மவாளி’ படத்தில் என் ஹிட் டியூன் 'ஒய்யம்மா... ஒய்யம்மா’தான் 'டர்ட்டி பிக்சர்’ல 'ஊ...லலல்லா’னு ரீ-மிக்ஸ் ஆகியிருக்கு. அந்த என் பாலிஸியால்தான் காலம் கடந்தும் என் மியூஸிக் லைவ்ல இருக்கு!''

காப்பி அடிக்காதீங்க!

'' 'நடமாடும் நகைக் கடை’, 'பல்க்கி’ லஹிரி, 'கில்லர் டிரெஸ்ஸர்’னு உங்களை ஏகமா கிண்டல் அடிக்கிறாங்களே?''

''எனக்குத் தங்கம்னா பைத்தியம். என் கழுத்துல எப்பவும் இருக்கும் இந்த ரெண்டு பெரிய செயின்களை சென்னையில் ஒண்ணு, மதுரையில் ஒண்ணுனு வாங்கினேன். இது என் ஸ்டைல். எல்விஸ் ப்ரஸ்லீ, எல்டன் ஜான் மாதிரி எனக்குன்னு ஸ்பெஷல் டிசைன் காஸ்ட்யூம் வெச்சுக்க ஆசைப்பட்டேன். அதான் இந்த ஜிகுஜிகு காஸ்ட்யூம். 40 வருஷமா மியூஸிக் பண்ணிட்டு இருக்கேன். தேசிய விருது வாங்கியிருக்கேன். ரஹ்மானுக்கு முன்னாடியே வெளிநாட்டு புராஜெக்ட்களில் வேலை பார்த்திருக்கேன். மைக்கேல் ஜாக்சனே என் டிஸ்கோ பாடல்களுக்கு டான்ஸ் பண்ணியிருக்கான். இது எதையும் கண்டுக்காம, என் உடம்பையும் தங்க நகைகளையும் கிண்டல் பண்றவங்களுக்கு... என் நன்றிகள் மட்டுமே பதில்!''  

''இளையராஜா, ரஹ்மான் மியூஸிக் எல்லாம் கேட்பீங்களா?''

''நிறைய! இளையராஜா அப்பவும் இப்பவும் எப்பவும் 'கிங் ஆஃப் மெலடி’தான். என்னால் சவுத்ல பெரிய இடம் பிடிக்க முடியாமப்போனதுக்கு இளையராஜாவின் இசை ஆளுமையும் ஒரு காரணம். தமிழ்நாட்டில் அவரைக் கடவுளா கொண்டாடுறாங்க. ஒரு தடவை சென்னையில் அவர்கிட்ட பேசினப்போ மியூஸிக்பத்திப் பேசாம ஆன்மிகம்பத்தி ரொம்ப ஆழமாப் பேசினார். ரஹ்மான், 'திலீப்’பா இருந்தப்பவே எனக்குத் தெரியும். 'ஹிம்மத்வாலா’னு நான் மியூஸிக் பண்ண படத்துக்கு கீ-போர்டு வாசிக்க ரஹ்மான் மும்பை வந்திருந்தார். அப்பவே அவர் சம்திங் ஸ்பெஷல்னு எனக்குத் தெரிஞ்சது. இப்போ ரெண்டு ஆஸ்கரோட அதை நிரூபிச்சுட்டார். 'குரு’ படத்தில் டைட்டில் பாட்டுப் பாட என்னைக் கூப்பிட்டு இருந்தார். சந்தோஷமாகப் போய் பாடினேன். அப்பவும் அதே பணிவான திலீப்பைத்தான் பார்த்தேன்!''

''ரஜினிக்கு நீங்க ரொம்ப ஃப்ரெண்ட். இப்பவும் டச்ல இருக்கீங்களா?''

''என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? ரஜினிகாந்தா பாய் என் க்ளோஸ் தோஸ்த். அவர் நடிச்ச 'தாய் வீடு’ படத்துல நான் மியூஸிக் பண்ண 'அன்னை என்னும் ஆலயம்’ பாடல் அவருக்கும் எனக்கும் ரொம்பப் பிடிக்கும். சென்னை வந்தா ரஜினி வீட்டுக்குப் போவேன். இப்பவும் திடீர் திடீர்னு ரஜினி போன்ல பேசுவார். ஹலோகூடச் சொல்லாம இடிஇடினு சிரிச்சுட்டு, 'தாதா... ஹவ் ஆர் யூ? ஹவ் இஸ் லைஃப்?’னு பாசமா விசாரிப்பார். நைஸ் பெர்சன்!''

காப்பி அடிக்காதீங்க!

''இப்போ மியூஸிக் டிரெண்டே மாறிருச்சே... இப்போ டிரெண்டுக்கு உங்களால இசையமைக்க முடியுமா?''

''19 வயதில் இண்டஸ்ட்ரிக்கு வந்த எனக்கு இப்போ வயசு 59. இன்னும் 20 வருஷம்கூட மியூஸிக் பண்ணுவேன். உடம்புதான் வெயிட் போட்டுருச்சே தவிர, இன்னும் நான் இளைஞன்தான். எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன், லக்ஷ்மிகாந்த்-பியாரிலால், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் தவிர, வேற யார்கிட்ட ஒரிஜினாலிட்டி இருக்கு சொல்லுங்க. ரீ-மிக்ஸ் பண்றது மட்டுமே ஒரு இசையமைப்பாளர் வேலை கிடையாது. இளைஞர்கள்  இந்தியாவின் ஆன்மாவை வெளிப்படுத்தும் இசையை உலகத்துக்கு எடுத்துட்டுப் போகணும். அங்கே இருந்து இங்கே எடுத்துட்டு வரக் கூடாது. அவ்வளவு ஏன்... என் மகன் பப்பா லஹிரி இப்போ ராம்கோபால் வர்மாவின் 'டிபார்ட்மென்ட்’ படத்துக்கு மியூஸிக் போட்டிருக்கான். அவன்கிட்ட, 'உனக்குள் இருக்கும் இசையை மட்டுமே வெளிப்படுத்து... யாரையும் காப்பி அடிக்காதே’னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லியிருக்கேன். அதுதான் எல்லாருக்கும்!''