என் விகடன் - திருச்சி
என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
சினிமா
Published:Updated:

சினிமா விமர்சனம் : கிருஷ்ணவேணி பஞ்சாலை

விகடன் விமர்சனக் குழு

##~##

தொழிலாளிகள் - முதலாளிகளின் வாழ்வியலைக் கொஞ்சம் அழகியலோடு பேசும் ஆலையே... கிருஷ்ணவேணி பஞ்சாலை.  

 ஆலை நிர்வாகத்தில் மோசடி செய்ததற் காகத் தனது நெருங்கிய உறவினரைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்கிறார் முதலாளி. அவரின் மகன் பொறுப்பு ஏற்கிறார். கேட்கின்ற போனஸைவிடவும் அதிகமாகவே கொடுத்து தொழிலாளர்களைச் சந்தோஷப்படுத்துகிறார். இன்னொரு பக்கம், அதே ஆலையில் வேலை செய்யும் ஹேமச்சந்திரனும் நந்தனாவும் காதலிக்கிறார்கள். நந்தனாவின் அக்கா வேறு சாதிக்காரரைக் காதலித்து மணம் செய்துகொள்ள... இதனால் குடும்ப மானம் பறிபோய்விட்டதாகச் சொல்லி, மகளைப் பெற்ற தாயே விஷம் வைத்துக் கொல்கிறாள். ஹேமச்சந்திரன் - நந்தனா காதல் அந்தரத்தில் நிற்கிறது. அதே கட்டத் தில், கூடுதல் போனஸ் கேட்டுப் போராடும் தொழிலாளர்கள் பிரச்னையால் ஆலை மூடப்படுகிறது. அதன் பிறகு, இந்த வாழ்வாதாரத்தை

சினிமா விமர்சனம் : கிருஷ்ணவேணி பஞ்சாலை

நம்பியிருந்த மக்களின் வாழ்க்கையும் அந்த ஆலையும் என்ன ஆனது என்பது தான் க்ளைமாக்ஸ்!

இப்படி ஒரு களத்தை எடுத்துக்கொண்டதற்காக இயக்குநர் தனபால் பத்மநாபனைப் பாராட்டலாம்.  அறுபதுகள், எழுபதுகள், எண்பதுகள் என மாறும் கால கட்டத்தை அப்படியே திரையில் பிரதி பலிக்கின்றன சுரேஷ் பார்கவ், அதிசயராஜின் ஒளிப்பதிவும் ஜே.பி-யின் கலை இயக்கமும். ஹீரோ ஹேமச்சந்திரன் ஆலைத் தொழிலாளிப் பாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். ஹீரோயின் நந்தனாவின் பெரிய விழிகள் க்ளோசப் காட்சிகளில் 'படபட’க்கின்றன. 'ஆஹா’ என நடிப்பில் ஆச்சர்யப்படுத்துகிறார் 'ஆஹா’ ராஜீவ் கிருஷ்ணா. மார்க்சிய சிந்தனையாளராக வரும் அஜயன் பாலா, பார்ப்போர் எல்லோ ரிடமும் சாக்லேட் நீட்டும் சண்முகராஜ், கேன்டீன் கான்ட்ராக்டராக வரும் எம்.எஸ்.பாஸ்கர், மைனர் லுக் பாலாசிங், ஹீரோயினின் அம்மா ரேணுகா எனப் பாத்திரத் தேர்வு கவனம் ஈர்க்கிறது. சின்னச் சின்ன கேரக்டர்களையும் மனதில் பதியவைக்கிறார் இயக்குநர். என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் வைரமுத்துவின் பாடல்கள் படத்துக்குப் பெரிய ப்ளஸ். 'ஆத்தாடி ஒரு பறவை பறக்குதா...’, 'ஆலைக் காரியும்...’ மனசைக் கரைக்கின்றன.

சினிமா விமர்சனம் : கிருஷ்ணவேணி பஞ்சாலை

படத்தின் மிகப் பெரிய குறை... இழுக்கும்ம்ம்ம்ம் திரைக்கதை. இதனாலேயே நம்மால் படத்தோடு ஒன்ற முடியவில்லை.   படம் லோ-பட்ஜெட்டாக இருக்கலாம். அதற்காக இப்படியா? அட்மாஸ்பியரில்கூட யாரும் வர மாட்டேன் என்கிறார்கள். அதேபோல, தொடர்ச்சியாக மில்லுக்குள்ளே மொத்தப் படமும் சுற்றி வருவதால்... கொஞ்சம் அயர்ச்சி.

சாதிப் பிரச்னை, அதனால் நிகழும் கௌரவக் கொலை, தொழிலாளர்கள்-முதலாளிக்கு இடையேயான உறவு, அழகான காதல், அதை விரசமே இல்லாமல் ஒரு கால இயந்திரத்தில் ஏற்றியது... எல்லாம் ஓ.கே. கதை சொல்லியவர்கள் திரைக்கதையிலும் தீவிரக் கவனம் செலுத்தியிருந்தால், இந்தப் பஞ்சாலை இயந்திரம் இன்னும் பர பரப்பாகி இருக்கும்.