Published:Updated:

மீன் வேணும்... நண்டு வேணும்... மீனவன் வேணாமா?

க.நாகப்பன்

மீன் வேணும்... நண்டு வேணும்... மீனவன் வேணாமா?

க.நாகப்பன்

Published:Updated:
##~##

''சீனி... சம்பாரிக்க முடியாமப் போயி கெட்டும் போயிடாதடா’னு எங்கம்மா சொன்னது இன்னும் நெனவுல இருக்கு. சம்பாரிக்க முடியாம கெட்டுப்போனவனை இந்தச் சமூகமும், நட்பும், குடும்பமும் பெருங்கருணையோடு கைப்பிடித்துக் கரையேற்றிய நெகிழ்வான ஒரு கதைதான் 'நீர்ப்பறவை’. அதுக்கு நானே ஒரு உதாரணம்!'' - அனுபவத்தோடு பேசுகிறார் சீனு ராமசாமி. 'தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தின் மூலம் மூன்று தேசிய விருதுகள் பெற்று  கவனம் ஈர்த்த இயக்குநர்.  

 '' 'தென்மேற்குப் பருவக்காற்று’ வறண்ட பகுதியின் வாழ்வைச் சொன்னது. நீர்ப்பறவை, பிரமாண்டமான கடலை நம்பி வாழும் மீனவ சமூகத்தைப் பற்றிப் பேசும் கதை. 'உன்னைத் தோற்ற இடத்திலேயே ஜெயிக்கப்பண்ணுவேன்’னு பைபிள்சொல் லுது. அப்படி கிறிஸ்துவம் தழைச்ச கடற் கரையில் வாழ்ற மக்களோட அன்பை நேர்மையாகப் பதிவுசெஞ்சிருக்கேன். கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் இந்துக்களும் கூடி வாழ்ற ராமேஸ்வரத்தை ஒட்டின ஒரு சின்ன கடற்கரைக் கிராமத்தோட கதை இது.

மீன் வேணும்... நண்டு வேணும்... மீனவன் வேணாமா?

உதயநிதி ஆதரவு கிடைச்சது பெரிய ஆறுதல். 'தரமா, சுவாரஸ்யமா படம் இருந்தாப் போதும். எதுக்காகவும் காம்ப்ரமைஸ் பண்ணிக்க வேணாம்’னு அவர் சொன்னது என்னோட சுதந்திரத்தை உணர்த்துச்சு.

அடிப்படையில் காதல் கதைதான். அருளப்பா சாமி கேரக்டரில் விஷ்ணுவும் எஸ்தர் கேரக்டரில் சுனைனாவும் நடிக்கிறாங்க. தண்ணியில இருந்து தரையில தவறி விழுந்த மீன் மாதிரி துடிதுடிப்பா இவங்க காதல் இருக்கும். அதே நேரம் சமூகத்து மேல இருக்குற கோபத்தையும் படம் பேசும். மீன் வேணும்... நண்டு வேணும். ஆனா, மீனவன் செத்தா யாருக்கும் கவலை இல்லையானு கேட்கும் என் படம்.''

''டீம் ஸ்பிரிட் எப்படி இருக்கு?''

''படத்தோட கதையைச் சொன்னதும் தன் ரெண்டு கைகளையும் தூக்கி சரண் அடைஞ்சுட்டார் விஷ்ணு. விடியக் காலை 4  மணிக்கு எந்திரிச்சு கடல்ல மீன் பிடிச்சு கத்திரி வெயில்ல பழியாக்கிடந்தாரு. வேலை முடிஞ்சாலும் ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டுப் போகாம மீனவ மக்களின் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து பார்க்கிற சுனைனாவின் ஆர்வமும் ஆச்சர்யம்தான். உதுமான் கனி கேரக்டரில் நடிக்கும் இயக்குநர் சமுத்திரக்கனி, இந்தியாவோட சிறந்த நடிகைகள்ல ஒருத்தரா அறியப்படுற சரண்யா பொன்வண்ணன், தன் மகனோடு ஸ்பாட்டுக்கு வந்து நடிச்சுக் கொடுத்து என் தோழியாக மாறிப்போன நந்திதாதாஸ், இயக்குநர்கள் அழகம் பெருமாள், தம்பி ராமையா, பிளாக் பாண்டி, அனு, அருள் தாஸ், 'பூ’ ராம்னு தெரிந்த முகங்கள் மீனவ முகங்களா வர்றாங்க.

மீன் வேணும்... நண்டு வேணும்... மீனவன் வேணாமா?

கடலின் நீலத்தோடு நீளத்தையும் கண் முன்னே கொண்டுவந்திருக்கார் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியெம். கரையில் சிப்பி பொறுக்காம, ஆழ்கடலுக்குப் போய் முத்துகளை மூழ்கி எடுத்துட்டு வந்திருக்கார் கவிப்பேரரசு வைரமுத்து. பைபிள் சொற் களால் ஒரு மலைச் சொற்பொழிவைப் போல கடல் புற வாழ்வைப் பாடல் வரிகளில் பதிவுசெஞ்சிருக்கார். சுதந்திரமா

மீன் வேணும்... நண்டு வேணும்... மீனவன் வேணாமா?

இசையமைத்த ரகுநந்தன், ஒரு முக்கியமான பாடலைப் பாடி இருக்குற ஜி.வி.பிரகாஷ், எடிட்டர் காசிவிஸ்வநாதன், 'மதராசபட்டினம்’ கலை இயக்குநர் செல்வகுமார்னு எனக்கே எனக்குனு பிடிச்ச டீம். ஆடிப் பாடி அலுப்புத் தெரியாம வேலை செஞ்சிருக்கோம். நிச்சயம் அதுக்கான பலன் கிடைக்கும்.''

''தேசிய விருது பெற்ற இயக்குநர் நீங்கள். அந்தப் பேரை அடுத்தடுத்த படங்கள்ல தக்கவைக்க நிறையப் போராட வேண்டி இருக்குமே?''

''எதிர்க் காற்றுனு தெரியுது... அதுக்காக சைக்கிள் மிதிக்காம இருக்கிறோமா என்ன? மாட்டுவண்டிகூட போற போக்குல, தான் போனதுக்கு அடையாளமாத் தடம் பதிச்சிடுது. நாம மனுஷங்க... சும்மா சாகலாமா? மிகப் பெரிய சந்தையில கண்ணு தெரியாத ஒரு கிழவியும் பூ வித்துப் பொழைக்குதுதானே... அந்த மாதிரி எனக்கும் நல்லதா அமையும்!''