இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படும் பெயர்களும் சம்பவங்களும் உண்மையே. கற்பனை அல்ல!

##~##

'ஜடா முடி’,    'இரு கோணம்’, 'அஷத்யா’,  'பயபுள்ள’, 'யோக்கியன்’, 'மெய்யழகி’, 'அழகு மகன்’, 'நிலவே நெருங்காதே’, 'என் மனதைக் கொள்ளையடித்தால்...’  'தொட்டுவிடத் தொட்டுவிட மரணம்’, 'மஞ்ச மாக்கான்’, 'சமர்’ (ஆம்... டைட்டில் பஞ்சாயத்து வேறு இருக்கிறது!), 'பரமக்குடி 1-வது வார்டு’, 'கண்களால் களவு செய்,’ 'மகேஷ்வரன் என்ற மகேசு’.... இவை எல்லாம் தெக்கத்திப் பக்கம் பக்காவாக ஷூட்டிங் நடந்துவரும் படங்களின் கோக்குமாக்குப் பட்டியல். இதில் பல படங்கள் வெளியாகுமோ.... ஆகாதோ; ஆனால், இப்போதைக்கு அந்த ஏரியாவின் பரபரப்பு  பப்ளிக்குட்டி டாக் இந்தப் படங்கள்தான். உள்ளூரில் பிரமாண்ட ஹோர்டிங்ஸ்... லோக்கல் சேனல் விளம்பரங்கள் என இந்தப் படங்களின் இயக்குநர்கள் கொடுக்கும் அலப்பறைக்கு அளவே இல்லை.

முல்லையாற்றுப் படுகையான தேனியில் விவ சாயம் பார்க்க, விவசாயம் சம்பந்தப்பட்ட வேலைகள் பார்க்க ஆட்கள் எடுக்கிறார்களோ, இல்லையோ திமுதிமுவென வளர்ந்த இளைஞர்களை 'அட்மாஸ்

எ ஃபிலிம் பை 'அக்வாஸ் ரே'!

பியருக்கு’ என அழைத்துச் செல்கிறார்கள். தேனி சாலைகளில் ஓடிக்கொண்டு இருக்கும் மினி பஸ் களில்... 'ஆட்கள் தேவை’ என்ற கையடக்க நோட்டீஸ் ஒட்டி, ஐந்தாறு செல்போன் நம்பர்கள் கொடுத்து ஆள் பிடிக்கிறார்கள். 'கிழக்கு பார்த்த வீடு’, 'அழகு மகன்’, 'மெய்யழகி’, 'வெள்ளைக் காகிதம்’ என ஒரே நேரத்தில் அங்கு ஏக களேபரம்.  தேனி பேருந்து நிலையம் அருகே உள்ள சலூனில் கும்பல் கும்பலாக மொட்டையடித்துக்கொண்டு இருந்தார்கள் மீனாட்சிபுரத்து இளைஞர்கள். ''நம்ம  பங்காளி  படத்துக்கு 15  மொட்டைங்க  வேணுமாம்.  அதான் அலேக்கா அள்ளியாந்துட்டேன்!'' என்று கூவிக்கொண்டு இருந்தார் அவர்களை அழைத்துவந்த மேஸ்திரி. ஏரியாவில் அள்ளையைக் கொடுக்கும் சில படங்களின் மேக்கிங் பற்றி இங்கே சில பதிவுகள்...

குறிப்பு:  இந்தப் படங்களின் இயக்குநர்கள் யாரும் யாரிடமும் உதவி இயக்குநராக... அவ்வளவு ஏன், சினிமா கம்பெனி ஆபீஸ் பையனாகக் கூட வேலை பார்த்தது இல்லை!

எ ஃபிலிம் பை 'அக்வாஸ் ரே'!

''சார்... மணிரத்னம் யார்கிட்ட சார் அசிஸ்டென்டா இருந்தார்? அட... நம்ம செல்வராகவன் எப்படிங்க உருவானார்? ஸ்பீல் பெர்க்லாம் சினிமா பார்த்துதான் சினிமா கத்துக்கிட்டதா ஞாயிறு மலர்ல படிச்சிருக்கேன் சார்.  நானும் அப்படித்தான். சுயம்பு! சினிமா என் ரத்தத்துல, ஆன்மாவுல கலந்துகிடக்கு. பாலாவையும் அமீரையும்  கலந்து கட்டின ஆளா வருவேன். என் படங்கள்ல அவங்க தாக்கம் இருக்கலாம். ஆனா, சாமி சத்தியமா பாலா அண்ணனையோ, அமீர் அண்ணனையோ காப்பி அடிக்க மாட்டேன். 'அஷத்யா’ ஒரு சாமானியன் எப்படி இந்த லௌகீக வாழ்க் கையால சாமியாரா மாறுறான்னு சொல் லும்.  நரபலி கொடுக்கிறதையும் போற போக்குல பொடனியில அடிச்சு 'அதெல்லாம் தப்புடா’னு மெசேஜ் சொல்றோம். இந்தப் படம் ஜெயிச்சதுன்னா அடுத்த படம் பிரமாண்டத்தின் உச்சம்... அழிவுகளின் மிச்சமா அமையும். ஆமா, 'தனுஷ்கோடி’னு ஒரு புராஜெக்ட். கடல் புயல்ல  அழிஞ்ச தனுஷ்கோடி இப்போ இருந்தா எப்படி இருக்கும்? அது சுனாமியில அழிஞ்சா எப்படி இருக்கும்னு காதலோட சேர்ந்து மிரட்டலா சொல்லப் போறேன். 50 சி பட்ஜெட் ஆவும். 'தனுஷ்கோடி’யில் நடிக்க தமிழ் சினிமாவின்  மாஸ் ஹீரோ  ஒருத்தரை  மனசுல வெச்சிருக்கேன்.  அவர்கிட்ட காட்ட ஒரு விசிட்டிங் கார்டுதான் இந்த 'அஷத்யா’! என்று பில்ட்-அப்  பிளிறுகிறார் பகுர்தீன். பாலா- அமீர் ராமநாதபுரம் பக்கம் வந்தால் வான்டட்டாக அவர்களுடன் படம் எடுத்துக்கொள்வது இவருடைய பழக்கம்.

பெரியகுளம் கைலாசநாதர் மலைக் கோயில்  பகுதியில்  'அழகு மகன்’  ஷூட் டிங்  பரபரப்பாக போய்க்கொண்டு இருந் தது. உடல் முழுக்க பேண்டேஜ்களுடன் கதாநாயகன்,  கதாநாயகியிடம் தன் காதலை வெளிப்படுத்திக்கொண்டு இருந்தார்.

''இன்னும் கொஞ்சநாள்தாண்டி எல் லாம் சரியாகிரும். இப்ப புதுசாக் கறிக் கடை போடப் போறேன்... கடை நல்லா போனதும் முறைப்படி உன்னை வந்து உங்க வீட்ல பொண்ணு கேட்கிறேன்'' என்று   நாயகன் டயலாக் பேச, கதாநாயகி... ''உன்க்கு எதுன்னாலும் நான் சத்துருவ்வேன்....'' என்று அழத் துவங்கினார். ''கட்... கட்... கட்...!'' என்ற டைரக்டர், ''அம்மா  தாயே... அது சத்துருவேன் இல்லை...  செத்துருவேன். உன் வாய்ல வசம்பு வெச்சித்தான் தேய்க்கணும்...  படுத்துறியே!'' எனப் பத்தாவது முறை யாக ரீ-டேக்குக்குப் போனார் அந்தக் கோடாங்கிப்பட்டிக்காரர். ''என் ஊரு மக்களையே நடிக்கவெச்சிருக்கேன். நண்பர் ஒருத்தர்தான் ஃபைனான்ஸ் பண்றார். அவர் தலையில துண்டு போடாம தோள்ல மாலை போடுற அளவுக்கு பக்கா ஸ்க்ரிப்ட்டு. படத்தை ஃபுல் ஜாலியா எடுத்திருக்கேன். நிச்சயம் படம் பி, சி-யில 50 நாள் பிச்சிக்கும்!'' என்று நம்பிக்கையாகப் பேசுகிறார் படத்தின் இயக்குநர் அழகன் செல்வா.

எ ஃபிலிம் பை 'அக்வாஸ் ரே'!

'இரு கோணம்’ படத்துக்கு ராம் கிஷோர்- உமா செல்வம் என்று இரட்டை இயக்குநர்கள்!

''மதுரதான் எங்க படத்துல சென்டர். ஆனா, இது தமிழ் சினிமாவுல புது டிரெண்ட்டை உருவாக்கும். படத்துல ரெண்டு ஹீரோஸ். ஒரு ஹீரோயின். ஆனா, இது முக்கோணக் காதல்  இல்லை. படத்துல ஒரு ஹீரோ பலரை வதைக்கி றான். ஆனா, அவன் ஆன்ட்டி ஹீரோ இல்லை. இன்னொருத்தன் நல்லதை மட்டுமே நினைக்கிறான். ஆனா, அவன் வாழ்க்கைல நல்லதே நடக்க மாட்டேங்குது.  வாழ்க்கை வாழ்வதற்கேனு வாழ்றவ ஹீரோயின். நல்லவனா வாழ்றவனை பொண்ணுங்க வெறுக்குறாங்க. கெட்டவனா வாழ்றவனைப் பொண்ணுங்க காதலிக்கிறாங்க. சீரியல் பல்பை மொய்க்கிற விட்டிலாட்டம் இந்த டீன் ஏஜ் வயசு எதை மொய்க்குதுனு டீப் அனலைஸ் ஸ்க்ரிப்ட் பண்ணியிருக்கோம்.  காதல் எப்படி இளைய சமுதாயத்தைச் சீரழிக்குதுன்னு சொல்ற அதேசமயம் ஆதிக்க வர்க்கம் எப்படி சாமானிய மக்களை வதைக்கிறதுன்னும் ஒரு ட்ராக். நாங்களே சொல்லக் கூடாது.... ஆனா, நாங்கதான் சொல்லணும். அநேகமா உலக சினிமா வர லாற்றிலேயே இப்படி ஒரு கதையோட வந்த முதல் சினிமா இதுவாத்தான் இருக்கும்!'' இந்த இரட்டை இயக்குநர் களின் மிரட்டலுக்குச் சற்றும் குறைவு இல்லாத உறுமல்... படத்தின் ஹீரோ சுப்பு என்கிற சுப்ரமணியனுடையது. இப்போதே ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டம் முழுக்க கட்-அவுட், ஃப்ளெக்ஸ்களால் சிரித்துக்கொண்டு இருக்கிறார். இந்தப் படம் முடிந்த கையோடு அரசியல் என்ட்ரி கொடுக்கும் எண்ணமும் உண்டாம் ரியல் ஸ்டார் சுப்புவுக்கு! (அது ரசிகர்கள் கொடுத்த பட்டமாம்!)

'அரவான்’ ஷூட்டிங் ஸ்பாட்டான அரிட்டாபட்டியில் வளர்ந்துவருகிறார் 'சமர்’. இந்தப் படத்தின் இயக்குநர் சக்திமோஹன் தன் சினிமா கம்பெனிக்கு வைத்திருக்கும் பெயர்.... 'அக்வாஸ் ரே’! ''அகிரா குரோசவா வையும் சத்யஜித் ரேயையும் கலந்து வெச்சி ருக்கோம்!'' எனச் சிரிக்கிறார் மனிதர்.

எ ஃபிலிம் பை 'அக்வாஸ் ரே'!

இந்தத் தெக்கத்தி டெர்மினேட்டர்களின் ஷூட்டிங் ஸ்பாட் எப்படி இருக்கிறது? ஒரு உலா வந்தோம்... கேரவனுக்குப் பதில் ஸ்கூல் வேன், அவரவர் டூ வீலர்... இதுதான் வாகன வசதி. கொஞ்சம் காஸ்ட்லி பேனர் படங்கள் என்றால் யூனிட் சாப்பாட்டில் 'சிங்கிள் லெக்பீஸ் பிரியாணி நிச்சயம். லோ பட்ஜெட் என்றால் கண்டிப்பாக புளி சாதம்தான். ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் ஆகியோர் அவரவர் வசிக்கும் ஏரியாக்களிலேயே தங்களுக்கான காட்சிகளை வைத்துக்கொள்கிறார்கள். காரைக்குடி, தேனி, போடி ஏரியாக்கள் பெரும் இயக்குநர்களின் கோட்டையாகிவிட்டதால், அலங்காநல்லூர், நாகமலை, மானாமதுரை, ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், தூத்துக்குடி, விருதுநகர் என எளிமையான லொகேஷனுக்கு மாறி விட்டார்கள். ஷூட்டிங் ஸ்பாட் காமெடிகள் தனி ரகம்! 'கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் தனுஷ்கோடியின் கடைக்கோடியில் சிம்ரனை வைத்து 'நெஞ்சில் ஜில் ஜில்’ என்று மணிரத்னம் எடுத்த காட்சிகள் பிரபலமான நினைப்பில் தனுஷ்கோடிக்குக் கிளம்பிப் போவார்கள். அங்கு உச்சிவெயில் வெளுத்துக் கட்டும்.... கடல் அனல் அள்ளிக் கொட்டும். மணிரத்னம் அண்ட் கோ ஏ.சி. கேரவன், ஜிம்மி ஜிப் சகிதம் படம்பிடித்த ரகசியம் எல்லாம்  இந்த யூனிட்டுக்குத் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. பாவம்.  வியர்வையில் நனைந்து பேக்-அப் சொல்லி, புளி சாதம் சாப்பிடக்கூட நிழல் இல்லாமல் அரண்டு மிரண்டு ஓடி வருவார்கள்.

ஹீரோயின் மேக்-அப்புக்கு ஃபேர் அண்ட் லவ்லி, ரோஸ் கலர் ஹீரோவை கறுப்பு ஆக்க க்ரீஸ் டப்பா, அச்சு மை.

திருத்தணியைச் சேர்ந்த ஜெய் எடுப்பது மல்ட்டி லெவல் சினிமா. 20 நண்பர்களுடன் தலைக்கு ஐந்து லட்சம் போட்டு ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படம் இயக்கிக்கொண்டு இருக்கிறார். டைட்டில் 'என் மனதைக் கொள்ளையடித்தாள்’! (தலைப்பே ஏதோ 'விஷயம்’ சொல்லுதே)

''நான் எம்.ஆர்.எஃப். வேலையை விட்டுட்டு   சினிமால குதிச்சேன். முழுக்கவே புதுமுகங்கள் தான். நிறையப் பிரச்னை... சின்ன வயசுல இருந்தே சூப்பரா கதை சொல்வேன். பாட்டி வடை சுட்ட கதையில இருந்து ஸ்டார் வார்ஸ் வரை பொளந்து கட்டுவேன். ஆனா, சென்னைக்கு வந்தப்ப யாரும் என்னை அசிஸ்டென்ட்டா ஏத்துக்கலை. அதான் நானே களம் இறங்கிட்டேன். வெறி பிடிச்ச மாதிரி நிறைய சினிமா பார்த்தேன். சினிமா கத்துக்கிட்டேன். இப்ப வெறி பிடிச்ச மாதிரி சினிமா எடுத்துட்டு இருக்கேன். என் முதல் படம் தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்கவைக்கும்!''

இவ்வளவு பேர் இவ்வளவு ஆர்வமாக உழைத்துக்கொண்டு இருக்கிறார்களே... சரி, டெக்னிக்கலாக என்னதான் சரக்கு வைத்திருக்கிறார்கள் இவர்கள்..?

''எங்கே ஒரு சீன் சொல்லுங்க?'' என்று சாம்பிளுக்கு ஒருவரிடம் கேட்டோம்...

எ ஃபிலிம் பை 'அக்வாஸ் ரே'!

''படம்  ஓப்பனிங்ல க்ளவுட் பாஸ் ஆகுது... ஊட்டியில ஒரு அதிகாலை... ரோட்டை லாங் ஷாட்ல காட்டுறோம். கேமரா ரோட்டோட நடுவுல தரையை ஒட்டி இருக்கு. ஒருத்தர் தூரத்துல ஜாக்கிங் டிரெஸ்ல கேமரா நோக்கி வந்துட்டு இருக்கார். அவர் காலுக்கு ஜூம் போகுது. கட்! மிட் ஆங்கிள்ல ஒரு கார் வர்றதைக் காட்டுறோம். க்ரீச்! கார் அந்த ஆள்கிட்டே ஸ்லோ ஆகுது. லாங் மிட் ஆன்... எகைன் டாப் ஆங்கிள்... ஆண்டனி எடிட்டிங் மாதிரி ஸிக் ஸிக் ஸிக்னு எல்லா ஷாட்டும் ஃபாஸ்ட் கட்ல வருது. அப்படியே கார் பாஸ் ஆகுது. கட் பண்ணா, க்ளோஸ்-அப்ல முகத்துல ரத்தம் வடிய ஓடிட்டு இருக்கார்.

அடுத்த லாங் ஷாட்லதான் தெரியுது... அவ ரோட ஒரு கையைக் காணோம்! அது கீழே கிடக்கு. திரும்ப, கார் யூ டர்ன் போட்டு அவர்கிட்டே போறதை லாங் ஷாட்ல காட்டுறோம்.  எகெய்ன்  அந்த கார் அவரோட இன்னொரு பக்கம் பாஸ் ஆகுது. இப்போ அவரோட இன்னொரு கையும் காணோம். அப்படியும் கொஞ்ச தூரம் ஓடி கேமரா முன்னாடி போய் நிக்கிறாரு... ரத்தம் ரெண்டு கையில இருந்தும் பீச்சி அடிக்குது. டைட் க்ளோஸ்-அப்ல அவர் முகத்தைக் காட்டுறோம். அப்படியே கேமரா முன்னாடி விழுந்து செத்துடுறார். அங்கே இருட்டாக்கி... அந்த பேக் ட்ராப்ல டைட்டில் போடுறோம். எப்படி சார் இருக்கு?''

பேக் அப்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு