Published:Updated:

அரசியலுக்கு வருகிறேன்!

அமீரின் புதிய 'ஜிகாத்'கி.கார்த்திகேயன்

அரசியலுக்கு வருகிறேன்!

அமீரின் புதிய 'ஜிகாத்'கி.கார்த்திகேயன்

Published:Updated:
##~##

ச்சர்யமான ஆள்... அமீர்!

 25,000 தொழிலாளர்களின்... 23 சங்கங்களின் தாய்க் கழகம் ஃபெப்சி. திருமங்கலம், சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பாணி பரபரப்புகள், சச்சரவுகளுக்குக் கொஞ்சமும் குறையாத அதிரடிகளுடன் அரங்கேறிய ஃபெப்சி சங்கத் தேர்தலில், ஒரு நிமிடம்கூடப் பிரசாரத்திலோ, வாக்கு சேகரிப்பிலோ

ஈடுபடாத அமீர், அதன் தலைவர் பதவியை வென்றது... அட்டகாசமான ஆச்சர்யம்!  

''ஃபெப்சி சங்கத் தேர்தலில் உங்கள் வெற்றி யைத் தவிர்க்க, சங்கத்தையே பிளவுபடுத்தும் முயற்சிகள்கூட நடந்ததாகச் சொல்கிறார்கள். ஆனாலும், எப்படிச் சாத்தியமானது இந்த வெற்றி?''

''என்னை யார் இந்தத் தேர்தல்ல போட்டியிடவைத்தார்களோ, அவர்களேதான் என்னை வெற்றி யும் பெறவைத்தார்கள். அடித்துப் பிடித்து அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பது என் எண்ணம் அல்ல. 'இவரால்தான் தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்கும்’ என்று 25,000 தொழிலாளர்கள் நம்பினார்கள். இத்தனைக்கும், 'என்னைவிட சினிமா மீது அக்கறைகொண்டவர்கள், வயதில் மூத்த அனுபவசாலிகள் இருக்காங்க. அவங்க இருக்கும்போது நான் போட்டியிட்டால் நல்லா இருக்காது’ என்று தெளிவாகச் சொன்னேன். 'தொழிலாளர்களுக்கு ஒரு பிரச்னை வரும்போது அவங்க வேடிக்கைதானே பார்த்துட்டு இருந்தாங்க. அதிலும் சிலர் ஃபெப்சியை உடைப்பேன்னு கிளம்புனாங்களே... அவங்களை நம்பி எங்க வாழ்க்கையை ஒப்படைக்கச் சொல்றீங்களா?’ என்று அவர்கள் கேட்ட கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.

அரசியலுக்கு வருகிறேன்!

'சுயநலத்துக்காகவோ, சுயலாபத்துக்காகவோ நான் இந்தத் தேர்தலில் நிற்கவில்லை. அதை உணர்ந்தால் நீங்க யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது உங்களுக்கே புரியும்’ என்று சொல்லி, நான் பிரசாரம் செய்யவில்லை. 'ஆனா, அவங்க பணம் கொடுத்து ஆட்களை விலைக்கு வாங்குறாங்க. எதுக்கும் ஒரே ஒரு தடவை கேன்வாஸ் பண்ணிட்டுப் போயிருங்க. இல்லைன்னா, நாம தோத்துருவோம்’னு கடைசி நேரத்தில்கூடக் கேட்டார்கள். 'அப்படித் தோத்தா, அந்தத் தோல்வியால் பாதிக் கப்படப்போறது நாம இல்லை’ என்று சொல்லிவிட்டேன். உண்மையை உணர்ந் தவர்கள், என் தன்மையை உணர்ந்தவர் கள்... தக்க தீர்ப்பை எழுதி இருக்கிறார்கள். என்னை எதிர்ப்பவர்கள் எனக்கு எதிராகச் சுமத்திய குற்றச்சாட்டு ஒன்றே ஒன்றுதான்... 'இந்த அமீர் எல்லாரையும் முறைச்சுக்கிட்டு நிப்பார்... யாருக்கும் அடங்க மாட்டார். நம்ம கைக்குள்ள வர மாட்டார்!’

நான் ஏன் உங்க கைக்குள்ள வரணும்? கை கோத்து நடப்போமே... என்னை எதிர்ப்பவர்களையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எனக்கு இருக்கிறது!''

''ஃபெப்சி தொழிலாளர் நலன் பாதுகாக்கப்பட வேண்டியது, நிச்சயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால், அதற்காக படப்பிடிப்புக்கு ஒத்துழைக்காமல், தொழிலையே முடக்கிப்போடுவதுபோல தொழிலாளர்கள் செயல் படுவதாகச் சொல்கிறார்களே, இது நியாயம்தானா?''

''இதை நான் மிகவும் வருத்தத்துடன் சொல்கிறேன், 'ஃபெப்சி தொழிலாளர்கள் அடாவடியாகச் செயல்படுகிறார்கள்’ என்று பொத்தாம்பொதுவாக யாரும் குற்றம் சொல்லாதீர்கள். தொழிலாளர்களின் போராட்டத்தைத் தயவுசெய்து 'அட்ராசிட்டி’ என்ற வார்த்தையால் கொச்சைப்படுத்தாதீர்கள். அவர்களின் அதிகபட்சக் கோரிக்கை, அன்றைய ஊதியத்துக்கான உத்தரவாதம்தான். அடாவடி வழிப்பறிக் கொள்ளையில் அவர்கள் ஈடுபடவில்லை. தாங்கள் பார்க்காத வேலைக்கான ஊதியத்தையும் அவர்கள் கேட்கவில்லை. பார்த்த வேலைக்கு ஊதியம் கேட்கிறார்கள். அப்படிப் போராடி வாங்கும் ஊதியத்தை அவர்கள் ஒரு கோடி ரூபாய் காரிலோ, போட் கிளப் வீட்டிலோ, செங்கல்பட்டு தாண்டிய நிலத்திலோ முதலீடு செய்யப்போவது இல்லை. தன் குழந்தையின் அடுத்த வேளை பசிக்குப் பால் வாங்குவார்கள், வாசலிலேயே காத்திருக்கும் வீட்டுக்காரருக்கு வாடகை பாக்கியைக் கொடுப்பார்கள், தங்கையின் கல்யாணத்துக்கு ஒரு கிராம், அரை கிராமாக நகை சேர்ப்பார்கள். அவர்கள் தட்டில் விழும் சோற்றுப் பருக்கைகளை அளந்து நஷ்டக் கணக்கு காட்ட வேண்டாம் என்றுதான் நாங்கள் தயாரிப்பாளர்களைத் தாயுள்ளத்தோடு கேட்டுக்கொள்கிறோம். தயாரிப்பாளர்களும் கஷ்டப்படுகிறார்கள்தான்... நஷ்டப்படுகிறார்கள்தான். ஆனால், அவர்கள் தங்களிடம் ஆகக் குறைந்த ஊதியம் பெறும்

அரசியலுக்கு வருகிறேன்!

தொழிலாளியிடம் மல்லுக்கு நிற்க வேண்டாம் என்றுதான் கேட்கிறோம். இந்த இடத்தில் நான் ஒரு உத்தரவாதமும் தருகிறேன்... இதற்கு முன் எப்படியோ... போனது போகட்டும். இனிமேல், ஃபெப்சி தொழிலாளர்களால் படப்பிடிப்புக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படாது. இதற்கான முழுப் பொறுப்பும் எங்களுடையது. இது என் உத்தரவாதம்!'

''நீங்களே நடித்து இயக்கும் அடுத்த படத்துக்கு 'ஜிகாத்’ என்று தலைப்பாமே. படத்தின் தலைப்பிலேயே பரபரப்பைப் பற்றவைக்கிறீர்களே?''

''இந்தியாவில்தான் ஒரு பழக்கம் இருக்கிறது. எங்கு குண்டு வெடித்தாலும், உடனே அதை வைத்தவர்கள் யார் என்று சில இயக்கங்களின் பெயர்களை அறிவித்துவிட்டு, பிறகு அதற்கு ஏதுவான ஆதாரங்களைத் தேடத் தொடங்குவார்கள். 'எந்தவித நியாயமான காரணமும் இன்றி ஒரு உயிரைக் கொல்பவன், இந்த மொத்த உலகத்தையும் அழித்த பாவத்துக்கு ஆளாவான்’ என்கிறது குரான். சம்பந்தமே இல்லாத அப்பாவிகளைக் கோயில்களில், பள்ளிவாசல்களில் குண்டுவைத்துக் கொல்வது புனிதப் போர் அல்ல. உண்மையிலேயே 'புனிதப் போர்’ என்றால் என்ன என்பதை என் 'ஜிகாத்’ மூலம் சொல்லவிருக்கிறேன். கல்லூரிப் பருவம் முடிந்த பிறகு, காதல் வழிமறிக்கும்போது, வேலை தேட வேண்டிய நிர்ப்பந்தம் துரத்தும்போது... ஏன் ஒருவன் தீவிரவாதி ஆகிறான்... எது ஒருவனைத் தீவிரவாதி ஆக்குகிறது என்பதை எந்தச் சமரசமும் இல்லாமல் படமாக்கத் திட்டம். அமீர் படம் என்பதால், இது ஒரு சாராருக்கு ஆதரவான படமாக இருக்கும் என்ற அச்சம் யாருக்கும் வேண்டாம். நான் தீவிரவாதத்தை ஆதரிக்கவும் இல்லை... எதிர்க்கவும் இல்லை. உண்மை எவ்வழியோ அவ்வழியில் பயணிப்பேன்.

ஆனால், இதற்கிடையில் என் நண்பர் இயக்குநர் கரு.பழனியப்பன் என்னை நடிக்கச் சொல்லி ஒரு கதை சொன்னார். குறைந்த காலம் மட்டும் தேவைப்படும் படம். அதில் நடித்த பிறகு 'ஜிகாத்’ வேலைகள் தொடரும்.''

''இயக்குநராக, நடிகராகப் பரபரப்பாகி விட்டீர்கள்... 'ஜெயம்’ ரவியை வைத்து நீங்கள் இயக்கிக்கொண்டு இருக்கும் 'ஆதிபகவன்’ படத்தின் ஸ்டேட்டஸ்?''

''படத்தின் படப்பிடிப்பு 97 சதவிகிதம் முடிந்துவிட்டது. இன்னும் ஒரே ஒரு சண்டைக் காட்சி மட்டுமே பாக்கி. அதுவும் அடுத்த வாரம் தொடங்கிவிடும். விரைவில் படம் திரையைத் தொடும்!''

''ஆனால், படப்பிடிப்பில் உங்களுக்கும் 'ஜெயம்’ ரவிக்கும் பிரச்னை. 'இன்னொரு முறை அமீர் இயக்கத்தில் நடிக்கவே மாட்டேன்!’ என்று 'ஜெயம்’ ரவி வருத்தத்தில் இருக்கிறார் என்றெல்லாம் செய்தி கள் இறக்கை அடிக்கின்றனவே?''

அரசியலுக்கு வருகிறேன்!

''நீங்கள் குறிப்பிடும் செய்தியே எனக்கு 'ஜெயம்’ ரவி சொல்லித்தான் தெரியும். நான் அதைப் படித்துக்கூடப் பார்க்கவில்லை. 'நான் அப்படிலாம் சொல்லவே இல்லை... தவறான தகவல்’ என்று அவரே என்னிடம் சொன்னார். நான் இதுவரை இயக்கிய ஹீரோக்களிலேயே 'ஜெயம்’ ரவியுடன்தான் எந்த இடத்திலும் நான் முரண்பாடுகொண்டது இல்லை. அவர் அப்படிச் சொல்லியிருக்க மாட்டார் என்றுதான் நான் நம்புகிறேன். ஒருவேளை பட வேலைகள் முடிந்தவுடன் இதே பிரச்னை வெடித்தால், அதற்கான எனது பதிலை அப்போது சொல்கிறேன்!''

'' 'வழக்கு எண் 18/9’ படம் பாராட்டுகளை வாரிக் குவிக்குது... 'ஓ.கே. ஓ.கே.’ வசூலை வாரிக் குவிக் குது... எதை டிரெண்ட் என்று புரிந்துகொள்வது?''

''இப்போது சினிமாவில் என்டர்டெயின்மென்ட்தான் டிரெண்ட். 'குடும்பத்தோடு காண வேண்டிய காவியம்’ எல்லாம் இப்போது செல்லுபடியாகாது. குடும்பத்தோடு குளிக்கப்போவோமா... இல்லையே? அப்புறம் ஏன் குடும்பத்துடன் ஒரே படத்துக்குப் போக வேண்டும்? வேலை அழுத்தம், அக்னி நட்சத்திர அனல், மின்வெட்டுப் புழுக்கம்... இவற்றுக்கு எல்லாம் இடையில் காசு கொடுத்துத் தியேட்டருக்கு வந்தால், அங்கே பொறுப்பில்லாத அப்பா, பொறுமை  யின் சிகரம் அம்மா, விதவைத் தங்கை, நொண்டி தம்பி, வேலை இல்லா ஹீரோ, மனநலம் பாதித்த ஹீரோயின் என்று படம் ஓட்டினால், ரசிகன் வெள்ளித்திரையைக் கிழிப்பான். ஒவ்வொரு படமும் ஃபெஸ்டிவல் மூட் எனப்படும் திருவிழா மனநிலையைத் தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்டால் தான், இப்போது தப்பிக்கும். நான் எல்லாம் ஜோக்குக்குக்கூட வாய்விட்டுச் சிரிக்காத 'தயாரிப்புக் குறைபாட்டு’டன் பிறந்த ஆள். தியேட்டரே வெடிச்சுச் சிரிக்கும்போது, 'பெட்ரோல் விலை உயர்வு’ செய்தியைக் கவனிப்பதுபோல உர்ரென்று இருப்பேன். ஆனால், என்னையும் 'ஓ.கே. ஓ.கே.’ படத் தின் க்ளைமாக்ஸ் பிரசங்க மொழிபெயர்ப்புக் காட்சி வாய்விட்டுச் சிரிக்கவைத்தது. அப்படியான படங்களுக்கு இடையில் 'வழக்கு எண்’ போன்ற படங்களும் நிச்சயம் தேவை. உணவுப் பழக்கவழக்கம் மாதிரிதான் சினிமாவும். பிரியாணி, பானி பூரி, பாவ் பாஜி, பீட்ஸாக்களுக்கு இடையில்... கொள்ளுத் துவையல், கம்பு தோசை, அரைக் கீரை சாதத்தையும் சாப்பிடுவது அவசியம்தான்!''

அரசியலுக்கு வருகிறேன்!

''உங்க படங்கள் மூலமா பளிச் அடையாளத்துக்கு வந்த ஜீவா, கார்த்தியின் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''அவர்களோட இப்போதைய உயரத்தைப் பார்த்து நான் பிரமிக்கிறேன், வியக்கிறேன் என்றெல்லாம் சொல்வதற்கு எதுவும் இல்லை. ஏனென்றால்,  அவர்களால் இந்த உயரத்தைத் தொட முடியும் என்று எனக்குள்ளே நம்பிக்கை இருந்ததால்தான் அவர்களை என் படங்களிலேயே நடிக்கவைத்தேன். அவர்கள் இன்னும் ரொம்ப உயரம் போவாங்க. அதுக்கான தகுதியும் திறமையும் அவர்களுக்கு இருக்கு.''

''ஃபெப்சி தேர்தல் வெற்றி ஒரு முன்னோட்டப் பயிற்சி மாதிரி அமைந்து இருக்கும். இது உங்களை அரசியலிலும் களம் இறக்குமா?''

''களம் இறக்கினால் என்ன தப்பு? எப்போது ஓட்டு போட வாக்குச்சாவடிக்குப் போறோமோ, அப்போதே அதில் பங்கு பெறவும் நமக்குத் தகுதி இருக்கிறதுதானே? 'ம்க்கும்... நீங்களும் அரசியலுக்கு வந்துட்டீங்களா?’ என்று சலிப்புக் கேள்வியை எதிர்கொள்ளும் நிலையில் என் அரசியல் பிரவேசம் இருக்காது. சும்மா குற்றம் சொல்லிவிட்டு மட்டும் இருக்காமல், ஏதாவது நல்ல காரியம் செய்யும் நிலைமையில் இருக்கும்போது... நிச்சயம் அரசியலுக்கு வருவேன்!''