Published:Updated:

சிங்கம் போலீஸ்... சிறுத்தை திருடன்!

பாரதி தம்பிபடங்கள் : வீ.நாகமணி, சொ.பாலசுப்பிரமணியன்

சிங்கம் போலீஸ்... சிறுத்தை திருடன்!

பாரதி தம்பிபடங்கள் : வீ.நாகமணி, சொ.பாலசுப்பிரமணியன்

Published:Updated:
##~##

2012-13-ம் ஆண்டுக்கான விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்ட முகாம். தேர்ந் தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி அளித்த கையோடு, அவர்கள் முன் 'இவரைப் பேட்டி எடுங்கள்!’ என்று நாம் நிறுத்திய பிரபலம்... நடிகர் கார்த்தி!

 அரங்கெங்கும் ஆரவாரம் கிளம்ப நுழைந்த கார்த்தியை, ''என்னா மாமா... சௌக்கியமா?'' என்று வரவேற்றார்கள் மாணவ நிருபர்கள்! தொடர்ந்த ஒரு மணி நேரம் அவர்களும் கேள்வி கேட்கச் சளைக்கவில்லை... அவரும் பதில் அளிக்க மலைக்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அப்பாவைப் பார்த்துக் கற்றுக்கொண்டது அதிகமா... அண்ணனைப் பார்த்துக் கற்றுக்கொண்டது அதிகமா?''

''தனிப்பட்ட வாழ்க்கைல அப்பாகிட்டதான் நிறையக் கத்துக்கிட்டேன். இப்பவும் தினமும் கத்துட்டு இருக்கேன். இப்பகூட ஒரு டி.வி. நிகழ்ச்சியில் இரண்டரை மணி நேரத்துக்குத் தன் வாழ்க்கையைப் பத்தி எந்த ஒளிவுமறைவும் இல்லாம அப்பா பேசினார். அப்படி எதையும் மறைக்காமல், 'இப்படித்தான் நான் இருந்தேன்’னு ஓப்பனா சொல்ற அளவுக்கு நானும் வாழணும். இதுதான் என் ஆசை. சினிமாவைப் பொறுத்த அளவில் அப்பாவைவிட அண்ணனைப் பார்த்துக் கத்துக்கிட்டதுதான் அதிகம். அவர் எந்த ஸ்டேஜ் லயும் திருப்தி அடையாம, 'அடுத்து... அடுத்து’னு போய்க்கிட்டே இருப்பார்.  சின்ன விஷயத்துக்குக்கூட பிரமாண்ட உழைப்பைக் கொடுப்பார். அது எப்பவும் என்னை மிரளவைக்குது!''

சிங்கம் போலீஸ்... சிறுத்தை திருடன்!

''நீங்களும் சூர்யாவும் ஏன் இன்னும் சேர்ந்து நடிக்கலை?''

''நடிக்கக் கூடாதுனு இல்லைங்க. ரெண்டு பேருக்கும் வேலை வைக்கிற மாதிரி கதை அமையணும்.''

''ஏன்... 'சிங்கம்’ போலீஸ் துரைசிங்கம், 'சிறுத்தை’ திருடன் ராக்கெட் ராஜாவைத் தேடிப் பிடிக்கிற மாதிரி ஒரு கதை பண்ணலாமே?''

''அட... சூப்பருங்க! லைன் கேட்கும்போதே நச்னு இருக்கு! நிச்சயமா நான் இதைப் பத்தி அண்ணன்கிட்ட பேசுறேன். நன்றிங்க.''

சிங்கம் போலீஸ்... சிறுத்தை திருடன்!

''போன வருஷம் சினிமா விருதுகளில் 'சிறந்த நடிகர்’ பட்டத்துக்கு 'தெய்வத் திருமகள்’ விக்ரம், '7-ம் அறிவு’ சூர்யா, 'அவன் இவன்’ விஷால்... இந்த மூணு பேருக்கும்தான் கடும் போட்டி. இதுல உங்க சாய்ஸ் யாரு?''  

(சின்னதாக யோசிக்கிறார்) ''ம்... நிச்சயமா அண்ணனுக்குத் தான். அவர் என் அண்ணன்ங்கிறதால இல்லை. '7-ம் அறிவு’க்காக அவர் கொடுத்த உழைப்பை நான் பக்கத்துல இருந்து பார்த்திருக்கேன். நாம யாருமே போதி தர்மரை நேர்ல பார்த்தது இல்லை. ஆனா, ஸ்க்ரீன்ல போதி தர்மரை அச்சு அசலா அப்படியே கொண்டுவந்தார் அண்ணன். போதி தர்மன் இப்படித்தான் இருப்பார்னு நம்பவெச்சார். அந்த உழைப்பு எனக்குப் பிடிச்சிருக்கு. ஸோ, தி அவார்டு கோஸ் டு சூர்யா.''

'' 'சகுனி’ சரியாப் போகலையே... ஏன்?''

''அப்படிச் சொல்ல முடியாது. ஆனா, மிக்ஸ்டு ரியாக்ஷன் வந்தது உண்மை. அரசியல் கதைன்னதும் பெரிய எதிர்பார்ப்பு உருவாகிடுச்சு. ஆனா, நாங்க பழைய அரசியல் படங்களின் சாயல் எதுவும் இல்லாம ஃப்ரெஷ்ஷா இருக்கணும்னு நினைச்சோம். கலெக்ஷன் முன்னபின்ன இருக்கலாம். ஆனா, என் மத்த படங்கள்போலவே அதுவும் மக்கள்கிட்ட ரீச் ஆகியிருக்கு. அதுல எதுவும் தப்புன்னா, அதுல என் பங்கும் இருக்கு.''  

''அப்பாவைப் போல நீங்களும் மேடைப்பேச்சு, வாசிப்புனு அறிவுத் தேடல்ல இறங்குவீங்களா?''

''நீங்க எப்ப புத்தகம்லாம் படிக்க ஆரம்பிச்சீங்கனு அப்பாகிட்ட கேட்டேன்... 40 வயசுக்குப் பிறகுனு சொன்னார். ஸோ, எனக்கு இன்னும் வயசு இருக்குங்க. அப்போதைக்குப் பார்த்துக்கலாம்!''  

''சூர்யா நடிச்ச படங்களை ரீ  மேக் செஞ்சு நடிக்கலாம்னா, எந்தப் படங்கள் உங்க சாய்ஸ்?''

'' 'காக்க காக்க’, 'பிதாமகன்’.''

''ஒருவேளை 'பிதாமகன்’ல நடிச்சா, விக்ரம் கேரக்டருக்கு யாரைத் தேர்ந்தெடுப்பீங்க?''

''அதை டைரக்டர் முடிவு பண்ணுவாருங்க. சரி... ஏன் விக்ரம் சாரே நடிச்சா என்ன? அவர் பிரமாதமா பண்ணியிருந்தாரே?''

''நீங்க சிக்ஸ்பேக் ட்ரை பண்ணலையா?''

''ஏங்க... இதுவரைக்கும் நல்லாத்தானே போயிட்டு இருக்கு. சிக்ஸ்பேக் அவ்வளவு ஆரோக்கியமான விஷயம் இல்லீங்க. அண்ணனே, 'தயவுசெஞ்சு அதெல்லாம் பண்ணாதே’னு சொன்னார். சின்ன வயசுல இருந்தே மூட்டை தூக்குறவங்க, மீனவர்களுக்கு இயல்பாவே சிக்ஸ் பேக் இருக்கும். அந்த சிக்ஸ்பேக் ஆரோக்கியம். ஆனா, ஜிம்முக்குப் போய் ஆறு மாசத்துல சிக்ஸ்பேக் வெச்சா, உடம்பில் இருக்கிற விட்டமின்ஸ், மினரல்ஸ் எல்லாம் போயிடும். அது செயற்கையானது, நல்லது கிடையாது. நமக்கு எதுக்குங்க அதெல்லாம்?''

சிங்கம் போலீஸ்... சிறுத்தை திருடன்!

''சினிமாவுக்கு வந்தது கருத்து சொல்லவா... பணம் சம்பாதிக்கவா?''

''நிச்சயமா கருத்து சொல்ல இல்லை. ஆனா, பணம் சம்பாதிக்க மட்டும் இல்லை. சினிமாவில் கிளாப் அடிக்கிற வேலை கிடைச்சாக்கூடப் போதும்னு சொல்லிட்டுதான் அமெரிக்கா வேலையை விட்டுட்டு வந்தேன். சினிமா மேல அவ்வளவு க்ரேஸ். அண்ணன், அப்பா தோள் மேல உட்கார்ந்து நான் வந்திருக்கலாம். ஆனா, அது அறிமுகத்துக்குத்தான் உதவும். இங்கே சக்சஸ் ரேட் ரொம்பக் கம்மி. இதுல தொடர்ந்து நிலைச்சு நிக்கணும்னா, அது பெரிய விஷயம்.''

''வேற்று மொழிப் படங்களை உரிய கிரெடிட் கொடுக்காமல் தழுவிப் படம் எடுக்கிறவங்களுக்கு, 'பைரஸியில் படம் பார்க்காதீர்கள்’னு சொல்ல என்ன தகுதி இருக்கு?''

''கிரெடிட் கொடுக்காமல் படம் எடுக்கிறது தப்பு. அதுபோலவே பைரஸியில் படம் பார்க்கிறதும் தப்புதான். உங்களுக்குப் படம் பார்க்கணும்... ஆனா, திருட்டு டி.வி.டி-யில்தான் பார்ப்பேன்னு சொன்னா என்ன நியாயம்? ஒரு படத்தின் மொத்த வருவாயில் 40 பெர்சன்ட் பைரஸியில் போயிடுது. அது எவ்வளவு பெரிய தொகை? வீடு, வாசலை வித்து பணத்தைக் கொட்டிப் படம் எடுக்குற தயாரிப்பாளருக்குத் திரும்பவும் பணம் கிடைக்கலேன்னா, அது எவ்வளவு பெரிய கொடுமை?''

''விளம்பரப் படங்கள்ல நடிக்க அதிகமா சம்பளம் கொடுக்கிறாங்கன்னுதான் நடிக்கிறீங்களா?''

''ஆமா... விளம்பரங்கள்ல நடிக்க நிறையப் பணம் தர்றாங்கதான். ஆனா, எல்லாருக் குமா தர்றாங்க? அப்படி நமக்குச் சம்பளம் கொடுக்கிற நிலைமையை அடைய எவ்வளவு போராடி இருப்போம்? அது போக, தப்பான பொருள் எதையும் நான் புரொமோட் பண்றதில்லையே. நான் காபி குடிக்கிறேன். காபி விளம்பரத்தில் நடிக்கிறேன். செல்போன் யூஸ் பண்றேன். செல்போன் விளம்பரங்கள்ல நடிக்கிறேன். அதைத் தப்புனு எப்படிச் சொல்ல முடியும்? நடிகர், நடிகைகள் அதிகமா சம்பாதிக்கிறாங்கனு சொல்றவங்க எல்லாம் ஒரு உண்மையை வசதியா மறந்துடுறாங்க. எங்களுக்கு ரிட்டயர்மென்ட் பெனிஃபிட், பென்ஷன் எதுவும் கிடையாதுங்க. புகழ் இருக்கும்போதே சம்பாதிச்சுக்கணும். தொடர்ந்து மூணு, நாலு படம் ஓடலைன்னா, அப்புறம் யாரும் எங்களை விசாரிக்கக்கூட மாட்டீங்க. கொஞ்ச வருஷத்துலயே அப்பா ரோலுக்குக் கூப்பிடுவாங்க. இதுதான் யதார்த்தம். ஒரு நடிகனா புகழையும் பணத்தையும் மட்டும் சம்பாதிக்கலை. அதுக்காக தனிப்பட்ட வாழ்க்கை உட்பட பல விஷயங்களை இழக்கிறோம். அதுதான் உண்மை!''

வாருங்கள்... வருங்காலமே!

முதல் நாள் முகாமில் 'நேற்று... இன்று... நாளை’ என்ற தலைப்பில் தங்கள் வாழ்வில் இருந்து அனுபவம் பகிர்ந்துகொண்டு மாணவ நிருபர்களை வாழ்த்தினார்கள் ஐந்து ஆளுமைகள்!

சிங்கம் போலீஸ்... சிறுத்தை திருடன்!

சிரிக்கச் சிரிக்கப் பேசி சிக்கலான தருணங்களைச் சமாளிக்கும் வித்தையை விதைத்தார் சிவகார்த்திகேயன். தமிழின் அருமையையும் அதைப் பொறியியலுடன் தான் இணை சேர்க்கும் 'லிரிக் இன்ஜினீயரிங்’ முயற்சிகளையும் விவரித்தார் கவிஞர் மதன் கார்க்கி. ஒரு பத்திரிகையாளன் எப்படி இருக்க வேண்டும், குறிப்பாக 'போட்டோ ஜர்னலிஸ்ட்’ன் பார்வை எதில் மையம் கொண்டு இருக்க வேண்டும் என்பதை நச் உதாரணங்களுடன் விளக்கினார் 'காதல்’, 'வழக்கு எண் 18/9’ படங்களின் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். ஒரு பத்திரிகையாளராக திருநங்கைச் சமூகத்தின் மீது எத்தகைய கரிசனம் செலுத்த வேண்டும் என்பதை நயம்பட எடுத்துச் சொன்னார் லிவிங் ஸ்மைல் வித்யா. விகடனின் முன்னாள் நிருபராகத் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட 'வட்டியும் முதலும்’ ராஜு முருகன், எளிய மனிதர்களிடம் இருந்தும் சுவாரஸ்யமான செய்திகள் சேகரிக்கும் லாகவத்தை, அது கொடுக்கும் பரவசத்தைப் பளிச்செனப் புரியவைத்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism