Published:Updated:

"நான் கடவுளை முழுசா நம்புறேன்!"

க.நாகப்பன்படங்கள் : இஷான் நாயர்

##~##

ஸ்ருதிஹாசன்... மும்பை, சென்னை, ஐதராபாத் என்று பறந்து பறந்து படங்களில் நடிப்பார் என்று பார்த் தால், திருப்பதி, திருவனந்தபுரம் என்று கோயில் கோயிலாக ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறார்!  

 ''என்ன வரிசையா கோயில்களுக்கு விசிட்... கடவுள் நம்பிக்கை ஜாஸ்தியா?''

''வீட்ல பூஜை ரூம் இல்லை. அப்பாவும் சாமி கும்பிட சொல்லித் தரலை. ஆனா, கடவுள் இருக்காருனு நான் முழுசா நம்புறேன். திருப்பதி, திருவனந்தபுரம் கோயில்களுக்கு மட்டும் இல்லை... இன்னும் நிறையக் கோயில்களுக்குச் சத்தம் இல்லாமல் போயிட்டுதான் இருக்கேன். அது கடவுளுக்கும் எனக்குமான ரிலேஷன்ஷிப். இந்த சாமி மட்டும்தான் பிடிக்கும்னு கிடையாது. எப்பப்ப எந்த சாமி பிடிக்குதோ, அப்பப்ப அவங்களைக் கும்பிட்டுக்குவேன். அப்பா இதைப் பத்தி எதுவும் கேட்டது இல்லை. நானும் சொன்னது இல்லை!''

'' 'கப்பார் சிங்’ ஹிட் ராசியா... அடுத்தும் ரீமேக் படத்துலயே நடிக்கிறீங்களே?''

"நான் கடவுளை முழுசா நம்புறேன்!"

''ம்ம்ம்... நான் அப்படி யோசிக்கலை. பிரபுதேவா அவரே தெலுங்கில் இயக்கிய, 'உனக்கும் எனக்கும்’ படத்தை இந்தியில் ரீமேக் பண்றார். அதுல நான்தான் ஹீரோயின். ஒரிஜினல் படம் வந்து நாலஞ்சு வருஷம் இருக்கும். அந்த கேப்பை நிரப்புற மாதிரி ரீமேக்ல விஷயம் சேர்ப்பாங்க. இந்தி ரீமேக் மியூஸிக்கலா இருக்கும். 'தபாங்’ ரீமேக்தான் 'கப்பார் சிங்’. ஆனா, அந்தப் படத்துல நான் சோனாக்ஷிசின்ஹா மாதிரி நடிச்சிருக்கேன்னு யாருமே சொல்லலையே! நல்லபடமா இருந்தா, எந்தப் படமும் ஓ.கே. எனக்கு.''

''ஹீரோயினா கேரியர் ஹிட் அடிக்கிற சமயம், இசை ஆல்பம், டி.வி. ஷோனு இறங்கிட்டீங்க... அது உங்க சினிமா கேரியரைப் பாதிக்காதா?''

''சினிமா ஒரு கேரியர். அதுக்கு உண்டான நேரம், வொர்க் எல்லாம் கொடுத்துட்டுதான் இருக்கேன். ஆனா, இசை என் ஆன்மா. அதை எப்பவும் எதுக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது. என் டியூனுக்கு நானே மியூஸிக் பண்ற எம். டி.வி. ரஷ் ஷோ ஐடியா எனக்கு ரொம்பப் பிடிச்சது. பத்து வருஷம் கழிச்சு 'ஹீரோயின்’ ஸ்ருதி என்ன பண்ணிட்டு இருப்பானு தெரியாது. ஆனா, மியூஸீஷியன் ஸ்ருதி நிச்சயம் பெர்ஃபார்ம் பண்ணிட்டு இருப்பா!''

''இப்பவும் கமல் பொண்ணுங்கிற இமேஜ் இன்னும் உங்களைச் சுத்தி இருக்கே?''

''அது எனக்குப் பெருமைதானே? அதை நான் நினைச்சாலும் மறைக்க முடியாது. இப்பவும் எப்பவும் ரசிகர்கள் என்னை கமல் பொண்ணாதான் பார்ப்பாங்க. ஆனா, நடிக்கிறப்போ ஆக்ஷன், கட்-க்கு இடையிலதான் நான் கமல் பொண்ணுங்கிற இமேஜை உடைக்கணும். அப்போ நான் ஸ்கோர் பண்றதுதான் ஸ்ருதிஹாசன் இமேஜுக்கு மைலேஜ்!''  

''முன்னாடிலாம் ஒரு ஹீரோயினுக்கு நாலஞ்சு வருஷம் லைஃப். ஆனா, இப்பல்லாம் ஒரு படம் ஃப்ளாப்னாகூட ஸ்டார் ஹீரோயின் அந்தஸ்துக்குச் சிக்கல்தான். பயங்கர போட்டி வேற... 'இப்போ ஏன் ஹீரோயின் ஆனோம்’னு யோசிச்சிருக்கீங்களா?''

''இல்லவே இல்லை. ட்விட்டர்ல எனக்குக் கிட்டத்தட்ட 3 லட்சம் ஃபாலோயர்ஸ். என்னைப் பத்தின ஒவ்வொரு செய்திக்கும் என் கிட்டயே கமென்ட்ஸ் பாஸ் பண்றாங்க. இதுவே முன்னாடி 'நான் நல்லா நடிச்சிருக்கேனா’னு என் ரசிகர்களிடம் கேட்டுட்டு இருக்க முடியாது. ஆனா, இப்போ முதல் ஷோ முடிஞ்சதுமே பளிச்னு விமர்சனம் பண்ணிடுறாங்க. நான் வாழ்க்கையில ஒரு தடவைகூடச் சந்திக்க வாய்ப்பு இல்லாத ரசிகர்களும் என் மேல வெச்சிருக்குற அக்கறையை என்னால புரிஞ்சுக்க முடியுது. அதனால 2012-ல நான் ஹீரோயினா இருக்கிறதுக்காக ரொம்பப் பெருமைப்படுறேன்... சந்தோஷப்படுறேன்!''