Published:Updated:

விழித்தெழு தமிழா!

டி.எல்.சஞ்சீவிகுமார்படம் : பொன்.காசிராஜன்

விழித்தெழு தமிழா!

டி.எல்.சஞ்சீவிகுமார்படம் : பொன்.காசிராஜன்

Published:Updated:
##~##

"சியர்ஸ்!'' என்று கை கோத்துச் சிரிக்கிறார்கள் 'மதுபான கடை’ படம் மூலம் 'ரியல் சினிமா’ காட்டிய இளைஞர்கள். மதுபானக் கடைக் குழுவினரின் கூட்டணிச் சங்கமம் எங்கு நிகழும்? ஆம், சென்னை 'பெருங்குடி’யின் மதுபானக் கடை ஒன்றில்தான் சந்தித்தேன்.

 ''நீங்க நம்பத்தான் வேணும்... வாழ்க்கையில இதுவரை சத்தியமா நான் ஒரு துளி மதுகூடக் குடிச்சது இல்லை!'' என்று முதல் ரவுண்டை ஆரம்பித்துவைத்தார் படத்தின் இயக்குநர்கமலக் கண்ணன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எந்தப் பயிற்சியும் இல்லாமல் அறிமுக முயற்சியிலேயே இத்தனை அழுத்தமா முத்திரை பதிச்சது எப்படி?''

''சினிமாவின் மிகச் சிறந்த ரசிகன் நான். அது மட்டும்தான் இந்தப் பட இயக்குநரா என் ஒரே தகுதி. 2006-ல் 'சினிமா கிளப் ஆஃப் கோயமுத்தூர்’ங்கிற அமைப்பை ஆரம்பிச்சு, நல்ல ரசனையான தமிழ்ப் படங்கள் தொடங்கி உலக சினிமாக்கள் வரை கோவை, ஈரோடு ஆகிய ஊர்கள்ல மக்களுக்காகத் திரையிட்டோம். படம் பார்க்க வர்றவங்களுக்குக் கதையை விளக்கிச் சொல்வோம். அந்தச் சூழல் கொடுத்த அனுபவம்தான் ஒரு படம் இயக்கும் ஆர்வத்தை உண்டாக்குச்சு. மத்த படி சினிமா என் தொழில் இல்லை.''  

விழித்தெழு தமிழா!

''அரசாங்கத்தையே கேள்வி கேட்டன பல வசனங்கள்... எப்படி வந்தது இந்தத் துணிச்சல்?''    

''துணிச்சல்னு சொல்றீங்க. ஆனா, அதெல்லாம் சேர்ந்து படத்தையே வெளியிட முடியாத அளவுக்குச் சிக்கலாக்கிடுச்சு. 'படத்துல கதை சொல்லலை... கருத்து சொல்லலை... தீர்வு சொல்லலை. இதை சினிமான்னே சொல்ல முடியாது. இப்ப இந்தப் படம் எதுக்கு?’னு கேட்டு படத்தை நிராகரிச்சுட்டாங்க சென்சார் போர்டு உறுப்பினர்கள். அவங்ககிட்ட பொறுமையா விஷயத்தை விளக்கவும் 'ஏ’ சான்றிதழோட அனுமதி கொடுத்தாங்க. அதனால, சேனல் ரைட்ஸ் கிடைக்கலை படத்துக்கு. அதனால பரவாயில்லை. ஏன்னா, பைசா சம்பாதிக்க நாங்க இந்தப் படத்தை எடுக் கலை. இது ஒரு 'அண்டர்ஸ்டுட்’ படம். ரசிகர் களைப் புத்திசாலியா நம்பி நான் எடுத்த படம் பொட்டில் அறையிற வசனங்களுக்காக ஐயப்பனுக்கு நன்றி!''  

'பெட்டிஷன் மணி’ என்கிற பிர(மா)தானமான பெருங்குடிக்காரர் பாத்திரத்தில் படம் முழுக்கச் சுளீர் கேள்விகளால் மனதைக் கொக்கிபோட்டு இழுத்திருக்கும் என்.டி.ராஜ்குமார் ஒரு மாந்திரீக யதார்த்த தமிழ்க் கவிஞர். படத்தின் ஐந்து பாடல்களை எழுதியும் அதில் இரண்டு பாடல்களை இவரே பாடியும் இருக்கிறார். நாகர்கோவி லைச் சேர்ந்த இவரது ஏழு கவிதைத் தொகுப்புகள் பிரெஞ்சு, ஆங்கிலம், மலையாளம், இந்தி, கன்னடம் எனப் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன.

''குடிங்கிறது தமிழர்களின் கலாசாரம். அது அவங்க ரத்தத்திலேயே ஊறிய உணர்வு. ஆதிகாலத்துல நம்ம அடிப்படை உணவுப் பொருட்களில் சாராயமும் ஒண்ணு. நாங்க வாலிப வயசுல தீபாவளி மாதிரியான பண்டிகை நாட்கள்ல மட்டும் மாமன் மச்சான்னு உறவினர்கள், நண்பர் களுடன் மது குடிப்போம். அப்படி விழாக் கால உணவுப் பொருளா, விசேஷப் பொருளா இருந்த மது, இன்னைக்கு அன்றாட அத்தியாவசியப் பொருளா ஆகிடுச்சு. குறிப்பா, எப்போ அரசாங்கம் மதுவை ஒரு வணிகப் பொருளா பார்க்கத் துவங்குச்சோ, அப்பவே நம்ம சமூகக் கட்டமைப்பே மாறிடுச்சு. அதுக்குப் பலியான ஆட்களில் நானும் ஒருத்தன். நான் மொடாக்குடிகாரனாகி, உடல்ரீதியா பெரும் பிரச்னைகளைச் சந்திச்சு, நிறைய இழந்து, இப்ப கொஞ்ச காலமா குடியை நிறுத்தி இருக்கேன்'' என்கிறார் என்.டி.ராஜ்குமார்.

பட உருவாக்கத்தில் முக்கியமானது அந்த டாஸ்மாக் பாரின் உருவாக்கம். அந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் படத்தின் கலை இயக்குநர் வினோ மிர்தாத். ''படப்பிடிப்பு சமயம் போலி சரக்கு தயாரிக்கிறோம்னு போலீஸ் ஸ்டேஷனுக்குப் புகாரெல்லாம் போச்சு. பெருந்துறைப் பக்கம் பெத்தாம் பாளையம்னு அழகான, டாஸ்மாக் கடையே இல்லாத கிராமம்தான் லொகேஷன். ஒரு கல்யாண மண்டபத்தை வாடகைக்குப் பிடிச்சு, பார் செட் போட்டோம். ஆனா, சரக்கு தயாரிக்கிறதுக்குள்ள பெரும்பாடு பட்டுட்டோம். பெப்ஸி, கோக்ல தண்ணி கலந்து சரக்கு தயாரிச்சோம். ஆனா, இயல்பா இல்லை. செலவும் கட்டுப்படி ஆகலை. அப்புறம் டீத்தூள், கேசரி பவுடர், காய்ஞ்ச தென்னை ஓலையை ஊறவெச்ச தண்ணினு விதவிதமா 'போலி’ சரக்கு தயாரிச்சோம். ஒரு தடவை கல்லா செட்ல உட்கார்ந்து இருந்தப்ப, ஆட்டோவை ஓரங்கட்டிட்டு ஒருத்தர் வந்து ஒரு குவார்ட்டர் பிராந்தி கேட்டார். நானும் விளையாட்டா ஒரு பாட்டிலைக் கொடுத்தேன். பாட்டிலைத் திறந்து தண்ணி கலக்கிறப்போ உண்மையைச் சொல்லிக்கலாம்னு காத்துட்டு இருந்தேன். ஆனா, சட்டுனு மூடியைத் திருகித் திறந்தவர், அப்படியே ராவா கபால்னு பாட்டிலை வாயில கவிழ்த்துட்டார். நான் எதிர்பார்க்கவே இல்லை. குடிச்சதுமே ஒரு மாதிரியாகி என்னை முறைச்சார். உண்மையைச் சொல்லி காசைத் திருப்பிக் கொடுத்துட்டேன். ஆனா, குடிமகன் அநியாயம் கண்டு பொங்கி, 'போலி சரக்கு தயாரிக்கிறாங்க’னு சொல்லி ஸ்டேஷன்ல புகார் கொடுத்துட்டார்'' என்று சிரிக்கிறார் வினோ.

விழித்தெழு தமிழா!

இசையமைப்பாளர் வேத் சங்கருக்கு 'பாலை’க்குப் பிறகு, இது இரண்டாவது படம். ''ஏ.ஆர்.ரஹ்மான் சாரோட இசைப் பள்ளியின் முதல் பேட்ச் மாணவன் நான். ஆடியோ இன்ஜினீயரிங் முடிச்சிட்டு, எம்.பி.ஏ. பண்ணிட்டு இருக்கேன். சீக்கிரமே ஹிட் பாடல்கள் கொடுக்கணும்'' என்று நம்பிக்கை சொல்கிறார். படத்தில் பார் பணியாளர்களாக 'அடித்து’ நொறுக்கிய அர்விந்த் அண்ணாமலை, கார்த்திவேல் ஆகியோரிடமும் சினிமா கனவுகள் மின்னுகின்றன.

இவர்களின் பார் செட்டை உண்மையான பார் என நினைத்துக் குவிந்துவிட்டார்களாம் குடிமகன் கள். படப்பிடிப்புக்கு வசதியாக இருந்ததால், இவர்களும் அவர்களை அனுமதித்துவிட்டார்களாம். அதில் ஒரு குடிமகன் ஃப்ளாட் ஆகி இரவு முழுக்க கேமராவுக்குக் கீழே உருண்டு புரண்டுகொண்டே இருந்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்தும் போதை தெளியாமல் சலம்பிக்கொண்டே இருந்திருக்கிறார்.

விழித்தெழு தமிழா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism