Published:Updated:

முரட்டு முட்டாள்கள்!

கி.கார்த்திகேயன்

முரட்டு முட்டாள்கள்!

கி.கார்த்திகேயன்

Published:Updated:
##~##

ண்பதுகளில் இந்திய சினிமாக்களில் 'கோபக்கார இளைஞன்’ என்ற கதாபாத்திரம் பிரபலம். சொல்லப்போனால், அப்போது சினிமாவை வாழவைத்தது அந்தக் கோபக்கார இளைஞன்தான். அமிதாப் பச்சன் முதல் ரஜினிகாந்த் வரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு வர அந்தப் பிம்பம்தான் உதவியது. ஆனால், இந்த மில்லினியம் யுகத்தில் சினிமா ஹீரோ மிகவும் ஸ்மார்ட் ஆகிவிட்டான். தொழில்நுட்பத்தின் உதவியுடன் எதிரிக் கும்பலை மட்டுமல்ல; அரசாங்கத்தையே இருந்த இடத்தில் இருந்து மிரட்டும் அளவுக்கு சிக்ஸ்த் சென்ஸை வளர்த்துக்கொண்டான். பெண்கள் உள்ளம் கொள்ளைகொள்ளும் ப்ளேபாய் ஆகவோ, ஒரே நேரத்தில் பல காதலிகளை டீல் செய்யும் காதலனாகவோ மாறிவிட்டான் இன்றைய ஹீரோ. இப்போது அந்தக் 'கோபக்கார இளைஞன்’ என்ன செய்வது என்று தெரியாமல் தட்டுத்தடுமாறிப் பின்தங்கிவிட்டான். கோப யுகத்தில் கோலோச்சிய விஜயகாந்த், அர்ஜுன், சத்யராஜ் போன்ற 'ஆக்ஷன் புரட்சித் திலக’ங்களும் அரசியல், டி.வி. ஷோ என்று ஆங்காங்கே செட்டில் ஆகிவிட்டார்கள்.

முரட்டு முட்டாள்கள்!

 இங்கே 'கோபக்கார இளைஞன்’ கதாபாத்திரம் போன்றே ஹாலிவுட்டிலும் ஒரு கேரக்டர் இருந்தது. அது... 'முரட்டு முட்டாள்’! எந்தத் திட்டமும் இல்லாமல் ஒரு கத்தி அல்லது ஒரு துப்பாக்கியோடு ஒற்றை ஆளாக பைக்கில் கிளம்பிச் சென்று எதிராளியைத் துவம்சம் செய்து திரும்புவான் அந்த 'முரட்டு முட்டாள்’! (கவனிக்க: இங்கு எதிராளி என்பது ஒரே ஒரு வில்லனில் துவங்கி ஒரு நாட்டின் ஒட்டுமொத்த ராணுவமாகக்கூட இருக்கலாம்!) பின்விளைவுகள்பற்றி யோசிக்க மாட்டான், ரத்தம் கொட்டினாலும் மயக்கம் வராது, குண்டு துளைத்தாலும் மரணம் நேராது. எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் இவனுக்கு... அவ்வளவுதான். அதற்காக எந்த எல்லைக்கும் செல்வான். இப்படியான கதாபாத்திரங்களில் நடித்தே அகில உலக சூப்பர் ஸ்டார் ஆனவர்கள்தான் அர்னால்ட் ஸ்வாஷ்நெகர், சில்வஸ்டர் ஸ்டாலோன், ப்ரூஸ் வில்லிஸ், சக் நாரிஸ், வான் டேம் ஆகியோர். ஹாலிவுட்டின் இந்த 'முரட்டு முட்டாள்’ பிம்பமும் காலப்போக்கில் வழக்கொழிந்தது. ஃபேஸ்புக் கிரிமினல், விண்வெளிப் பயணம், கனவுலக அவதார் என்று ஹாலிவுட் ஹீரோவும் கற்பனைக்கும் எட்டாத பாய்ச்சல் காட்டினான். 'கோபக்கார இளைஞர்’களுக்கு ஏற்பட்ட அதே கதிதான் 'முரட்டு முட்டாள்’களுக்கும் ஏற்பட்டது. ஆனால், இவர்கள் சளைக்கவில்லை. ஃபீனிக்ஸ் பறவைபோல உயிர்த்தெழுந்தார்கள். அது வரை தனித்தனியாக நடித்துக்கொண்டு இருந்தவர்கள் ஒன்றிணைந்து, சங்கம் அமைத்து, ஒரே படத்தில் இணைந்து மிரட்டினார்கள். இரண்டு வருடங்களுக்கு முன் 'தி எக்ஸ்பென்டபிள்ஸ்’ என்று ஆரம்ப வெள்ளோட்டம் பார்த்தவர்கள், இப்போது முதல் பாகத்தைக் காட்டிலும் பவர்ஃபுல்லாக, செம தில்லாக இரண்டாம் பாகத்தைக் களம் இறக்கி இருக்கிறார்கள். 'தி எக்ஸ்பென்டபிள்ஸ்-2’ படத்தில் வெடிக்கும் ஒவ்வொரு தோட்டாவும் தியேட்டரை அதிரவைக்கிறது.

ஸ்டாலோன் ஒரு திசையில், ஜேஸன் ஸ்டேதம் மறு திசையில், ப்ரூஸ் வில்லிஸும் அர்னால்டும் இணைந்து மூன்றாவது திசையில் என எதிரிகளைச் சவட்டி எடுக்கிறார்கள். இந்த மில்லினியம் யுகத்திலும் இவர்கள் நம்புவது கத்தி, கபடா, துப்பாக்கிகளைத்தான். 'டும் டும் டும்’ என்று கையால் தட்டித் தட்டி துப்பாக்கியை வெடிக்கச் செய்வது, பைக்கைப் பறக்கவிட்டு ஹெலிகாப்டரைச் சாய்ப்பது, கடும் பாதுகாப்புக் கெடுபிடி நிரம்பிய வில்லனின் சுரங்கத்துக்குள் நுழைய, அத்தனை பெரிய விமானத்தின் இறக்கைகளை உடைத்துக்கொண்டு லேண்ட் ஆகும் சாகசம்... எல்லாமும் இந்த 'முரட்டு முட்டாள்’களுக்கு மட்டுமே சாத்தியம். முதல் பாகத்தில் சும்மா தலை காட்டிய அர்னால்ட் இரண்டாம் பாகத்தில் ''ஐ’ம் பேக்'' என்று ஆக்ஷனிலும் குதித்துவிட்டார். இத்தனை சூப்பர் ஸ்டார்கள் எதிர்த்து அழிக்கும் உலகின் மகா வில்லன் அந்தஸ்தைத் தட்டிச் சென்றுவிட்டார் வான் டேம்.

இதே பாணியில் ரஜினி, கமல், விஜயகாந்த், அர்ஜுன், சத்யராஜ், கார்த்திக் ஆகியோர் ஸ்டைல், நக்கல், கிண்டல், கேலி, ஆக்ஷன் கலந்து ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்?