Published:Updated:

"எல்லா ஹீரோக்களுமே அட்டகத்திதான்!"

க.ராஜீவ்காந்திபடம் : கே.ராஜசேகரன்

"எல்லா ஹீரோக்களுமே அட்டகத்திதான்!"

க.ராஜீவ்காந்திபடம் : கே.ராஜசேகரன்

Published:Updated:
##~##

"எளிய மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை ரொம்பக் கொண்டாட்டமா வாழறாங்க. அந்த விஷயத்தைப் பதிவுசெய்யணும்னு நினைச்சேன். இந்த வெற்றி சென்னையின் சாமானிய இளைஞர்களின் வெற்றி!'' - 'அட்ட கத்தி’ மூலம் சென்னையின் சுற்றுவட்டாரக் கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்க்கையை அதே இனிமையுடன் சொல்லியிருக்கும் இயக்குநர் இரஞ்சித்.

''சார், இவர் என்னை ஹீரோனு சொன்னதும் எவ்ளோ சந்தோஷமா இருந்தேன். ஆனா, ஒரு ரொமான்ஸ் இல்லை. டூயட் இல்லை. கடைசியா எடுப்பேன்னு சொல்லிச் சொல்லியே ஏமாத்திட்டாரு!'' எனப் பொய்க் கோபம் காட்டுகிறார் தினேஷ். ''நான் பிறந்தது வேலூர். ஆனா படிச்சது, ஊர் சுத்துனது எல்லாம் சென்னை ராயபுரம்தான். நடிக்கிறதைவிடவும் கேமரா மேலதான் ஆர்வம் அதிகம். பாலு மகேந்திரா சார்கிட்ட வாய்ப்பு கேட்டுப் போனப்ப, அவர்தான் 'நீ ஏன் நடிக்கக் கூடாது?’னு கேட்டார். அப்புறம் இயக்குநர் வெற்றிமாறன்கூட சேர்ந்து, நவீன நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். 'மகா நிர்வாணம்’, 'பரமபதம்’னு நாடகத்துல இருந்து நிறையக் கத்துக்கிட்டேன். கிடைச்ச கேப்ல 'ஈ’, 'ஆடுகளம்’ படங்கள்ல சின்னச் சின்ன ரோல்ல நடிச்சுட்டு இருந்தேன். இந்தக் கதையைக் கேட்டதும் படம் நிச்சயம் ஜெயிக்கும்னு தெரிஞ்சது.  நிறையப் பேர் அவங்க பசங்களை இந்தப் படத்தோட ஹீரோ ஆக்கிரணும்னு போட்டி போட்டாங்க. ஆனா, இரஞ்சித் எனக்கு வாய்ப்பைக் கொடுத்தார்.ஐம்பதே நாள்ல ஷூட்டிங்கை முடிச்சிட்டார். எப்பவும் முதல் நாளே சீனைச் சொல்லிப் புரியவெச்சிருவார். அதனால, சிரமம் இல்லாம நடிச்சுட்டேன். ஹேர் கட் பண்ற சீன்தான் 19 டேக் வரைக்கும் போச்சு. அந்த சீன்ல நான் விடற கண்ணீர் நிஜம்... பொறுத்துப் பொறுத்துப் பார்த்துட்டு அழுதுட்டேன். நான் அழுறதைப் பார்த்துட்டு யூனிட்டே சந்தோஷமாச் சிரிச்சுது!'' என்றவரிடம், ''லவ் லெட்டர் கொடுத்த அனுபவம் இருக்கா?'' என்றேன். ''இதுல நான் அசல் கத்தி. நிறைய லெட்டர் வாங்கியிருக்கேன்'' என்று தினேஷ் சிரிக்க, ''யோவ்! அட்ட கத்தி... படம்தான் ரிலீஸ் ஆகிருச்சுல்ல. இன்னும் ஏன் நடிச்சுட்டு இருக்குறே?'' என்று வாரினார் ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம்.

"எல்லா ஹீரோக்களுமே அட்டகத்திதான்!"

படத்தில் அப்பா கத்தியாக வந்து கலக்கியிருப்பவர் வேலு. இவரும் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் தான். இவரை யூனிட் முழுக்க 'ஜஸ்ட் மிஸ் மாமனார்’ என்றுதான் கூப்பிடுகிறார்கள். ''படத் துல மாமனார் ஆகுற வாய்ப்பு ஜஸ்ட்ல மிஸ் ஆனதால இந்தப் பேர் வெச்சிட்டாங்க சார். நிறைய மேடை நாடகங்கள்ல நடிச்சிருக்கேன். அந்த அனுபவம்தான் ரொம்பக் கை கொடுத்துச்சு'' என்றவரை இடைமறித்த ஒளிப்பதிவாளர் பி.கே.வர்மா, ''இவங்க ரெண்டு பேரும் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டுங்கிறதால நாங்கதான் ரொம்பக் கஷ்டப்பட்டோம் சார். சொல்றதை மட்டும் செய்ய மாட்டாங்க. சொல்றதுக்கும் மேல ஓவர் ஆக்டிங் கொடுப்பாங்க. பையனை வழியனுப்புற சீன்ல வேலு சார் 'தங்கப் பதக்கம்’ சிவாஜி கணக்கா நடிச்சிருந்தாரு. நாங்கதான் ஆடியன்ஸ் நலன் கருதி வெட்டிட்டோம்!'' என்று சொல்ல, ''நாங்கலாம் யார்... கொடுத்த காசுக்கு மேல கூவுற பரம்பரை. நாங்க சும்மா இருக்கும்போதே நடிப்போம். நடிப்புனு வந்துட்டா, ரேஸ் கார் எடுத்துட்டு ஆஸ்கர் வரைக்கும் போவோம்!'' என்று நாக்கைத் துருத்தி உதார்விட, ''முடியலை'' என்கிறார் எடிட்டர் லியோ ஜான்பால்.

''சென்னையோட புறநகர், வட சென்னைன்னாலே ரௌடிங்கதான் இருப்பாங்கனு சினிமாவுல காட்டுறாங்க. அது நான் வாழ்ந்த வாழ்க்கைங்கிறதால எனக்கு இது ரொம்ப முரண்பாடாத் தெரிஞ்சது. சென்னைனு கிடையாது. எல்லா ஹீரோக்களுமே, ஏன்... தமிழ்நாட்டு இளைஞர்கள்ல 95 சதவிகிதம் பேர் அட்ட கத்திதான். வெளியில் ஹீரோக்களா காமிச்சுக்கற எல்லாருமே ஏதோ ஒரு விஷயத்துல, ஒரு சமயத்துல மொக்கை வாங்கியிருப்பாங்க. ஒரு பொண்ணு பின்னாடி கஷ்டப்பட்டு சுத்தி, அவ அண்ணானு சொல்றப்ப மொக்கையாதான் இருக்கும். ஆனா, அது வரைக் கும் அந்தப் பொண்ணுகூடவே கற்பனையில் வாழற விஷயங்கள் இருக்கே... அதைவிட நிஜ வாழ்க்கையில என்ன சுவாரஸ் யம் வேணும்... சொல்லுங்க?'' என்று சிரிக்கிறார் இயக்குநர் இரஞ்சித்.

"எல்லா ஹீரோக்களுமே அட்டகத்திதான்!"

ஹீரோயின் நந்திதா நன்றாகவே தமிழ் பேசுகிறார். ''இதுக்கு முன்னாடி கன்னடத்துல ஒரு படம் பண்ணியிருக்கேன். தமிழ்ல இதுதான் முதல் படம். நடிச்ச ரெண்டு படத்துலயும் மேக்கப் இல்லாம நடிக்கவெச்சிட்டாங்க. இருந்தாலும் தினேஷ் சுமாரா இருக்குறதால, நான் ஸ்க்ரீன்ல சூப்பராத் தெரிஞ்சேன்'' என்று நந்திதா சொல்ல, ''அய்யோ... மொக்கை கொடுத்திருச்சாமாம்'' என்று லந்து கொடுத்த தினேஷ், ''நான் நடிச்சதுதான் முதல் காரணம். இருந்தாலும் படம் ஹிட் ஆனதுக்கு இன்னொரு காரணம் என்ன தெரியுமா?'' என்று கேட்க, எல்லாரும் யோசிக்கிறார்கள். ''ஆடி போயி ஆவணி வர்ற சமயத்துல டைமிங்கா தாடி, தாவணி கதையை ரிலீஸ் பண்ணினோம்ல அதான்'' என்று விடை சொல்கிறார். ''நீ இந்த மாதிரி பேசி நாங்க கேட்டதே இல்லைப்பா!'' என்று இரஞ்சித் கமென்ட் அடிக்க, கலகலவெனச் சிரிக்கிறார்கள் எல்லோரும்.