Published:Updated:

பர்ஃபி!

கி.கார்த்திகேயன்

பர்ஃபி!

கி.கார்த்திகேயன்

Published:Updated:
##~##

மீபத்தில் உங்களுக்குள் இருக்கும் குழந்தையை எப்போது கண்டுகொண்டீர்கள்? இந்த உலகம் எத்தனை அழகானது என்று உங்களுக்கு எப்போதெல்லாம் தோன்றும்? எந்தச் சூழ்நிலையிலும் எவரையும் எதையும் காதலுடன் அணுகும் புரிதல் உண்டா உங்களிடம்? வாழ்க்கை எத்தனை ரம்மியம் நிறைந்தது என்பதை ஒரு நாளில் எத்தனை முறை உணர்வீர்கள்? இந்த அத்தனை உணர்வுகளையும் மனதுக்குள் நிரப்புகிறான் 'பர்ஃபி’. இந்தியாவையே உருகவைத்துக்கொண்டு இருக்கும் இந்திப் படம்!

 கேட்புத் திறனும் பேச்சுத் திறனுமற்ற மாற்றுத் திறனாளி பர்ஃபி (ரன்பீர் கபூர்). பெயருக்கேற்ற ஸ்வீட் ராஸ்கல். ஊருக்கே செல்லப் பிள்ளை. பர்ஃபியின் பால்ய காலத் தோழி ஜில்மில் (பிரியங்கா). ஆட்டிஸம் பாதித்த மனவளர்ச்சி குறைந்தவள் ஜில்மில். இவர்களுக்கு இடையில் ஸ்ருதி (இலியானா). இம்மூவருக்கும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பர்ஃபி!

இடையிலான காதல் - சினேகம் - அன்புப் பரிமாற்றமே படம். ஒவ்வொரு ஃப்ரேமும் கவிதை!

ஒரு சினிமா இத்தனை மென்மையானதா... ரசனையானதா... கவிதையானதா என்று காட்சிக்குக் காட்சி ஆச்சர்யப்படவைக்கிறார் இயக்குநர் அனுராக் பாஸு. 'மூன்றாம் பிறை’ க்ளைமாக்ஸில் உணரும் நெகிழ்வைப் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் நகைச்சுவையாகவோ, சோகமாகவோ, சந்தோஷமாகவோ புதைத்திருக்கிறார். ஒரு காட்சி, ஒரு வசனத்தில்கூடக் கிண்டலடிக்காமல் மாற்றுத் திறனாளிகளைக் கண்ணியத்துடனும் காதலுடனும் உலவவிட்டு ரசிக்கவைத்த இயக்குநரின் ரசனைக்கு... உலக அங்கீகாரங்கள் நிச்சயம்.

கண்டதும் காதல்கொள்கிறான், தந்தை மீது பாசம் கொட்டுகிறான், ஒரு காதல் தோற்றதும் அடுத்த காதலை இயல்பாக ஏற்கிறான், ஹீரோயினைக் கடத்துகிறான், உருகி உருகிக் காதலிக்கிறான், காமெடி செய்கிறான், ஆக்ஷன் செய்கிறான்... மாற்றுத் திறனாளிதான்... ஆனால், இந்திய சினிமாக்களில் ஹீரோக்கள் செய்யும் அத்தனையையும் செய்கிறான் பர்ஃபி, லாஜிக் ஏதும் உதைக்காமல். சார்லி சாப்ளின், மிஸ்டர் பீன் கலந்த கலவையில் ஒவ்வொரு சேட்டையிலும் ஒவ்வொரு ரியாக்ஷனிலும் குபுக்கெனச் சிரிக்கவைக்கிறார் ரன்பீர் கபூர். தன் இதயப் பூங்கொத்தை பிரியங்கா ரிஜெக்ட் செய்த அடுத்த நொடியே பக்கத்துப் பெண்ணுக்கு விண்ணப்பிப்பது, இலியானாவை ஓவியம் 'வரைவது’, அவரைப் பெண் கேட்டுப் போன இடத்தில் மாப்பிள்ளையைப் பார்த்ததும் பிரியங்கா வின் அப்பாவிடம் இனாம் பெற்றுக்கொண்டு வெளியேறுவது, பிரியங்காவைக் கடத்தி வந்து இம்சைப்பட்டுக் கதவில் முட்டிக்கொள்வது, முகமூடி அணிந்து முன் பின் முகம் மாற்றி இன்ஸ்பெக்டரை ஏமாற்றுவது... அமர்க்கள ரன்பீர்.    

உச்சபட்சக் கவர்ச்சி காட்டியபோதுகூட இத்தனை ஈர்த்தது இல்லை பிரியங்கா. சுருட்டை முடி, குழந்தை உடையுடன் விரல்கள் திருகித் திருகிப் பேசுவது, 'சூ... சூ...’ என்று உச்சா சிக்னல் கொடுப்பது, ரன்பீரைத்

பர்ஃபி!

தன்னைத் தொட அனுமதிக்காமல் கெடுபிடி காட்டிவிட்டு, அடுத்த நொடியே தன் ஸ்கர்ட்டை உயர்த்தி நாடாவை அவிழ்க்கச் சொல்வது, சுண்டு விரலுடன் சுண்டு விரல் கோர்த்துக்கொள்வது, இலியானாபோல சேலை கட்டிப் பார்ப்பது என்று உள்ளம் கொள்ளைகொள்கிறார் பிரியங்கா.  

இலியானாவை அழைத்துக்கொண்டு பிரியங்காவைத் தேடிச் செல்கிறார் ரன்பீர். அங்கு பிரியங்கா இல்லாமல்போக, சோகமாகத் திரும்பி நடக்கும் ரன்பீருக்கு முன்னால் நடக்கிறார் இலியானா. அப்போது மாடி ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கும் பிரியங்கா, 'பர்ஃபி’ என்று கத்துகிறார். அது ரன்பீருக்குக் கேட்காததால் வருத்தத்துடன் நடந்துகொண்டே இருக்கிறார். பிரியங்காவின் குரல் இலியானாவுக்குக் கேட்கிறது. 'அவள் உன்னை அழைக்கிறாள்!’ என்று ரன்பீரிடம் சொன்னால், பிரியங்கா - ரன்பீர் இணைந்துவிடுவார்கள். இலியானா விலகிவிட வேண்டும். பிரியங்காவின் குரல் கேட்காததுபோல நடக்கிறார் இலியானா. மீண்டும் மீண்டும் அழைத்துக்கொண்டே இருக்கிறார் பிரியங்கா. மனசாட்சி உறுத்தத் திரும்பி நிற்கிறார் இலியானா. என்ன என்பதுபோலப் பார்க்கிறார் ரன்பீர். அப்போது இலியானாவின் முகத்தில் தாண்டவமாடும் உணர்வுகள்... அடடா, இத்தனை வருடங்களாக இந்தப் பெண்ணின் இடுப்பை மட்டுமே ரசித்துக்கொண்டு இருந்துவிட்டோமே என்ற குற்ற உணர்வு குறுகுறுக்கிறது!

பிரியமும் நேசமும் பொங்கிப் பெருகும் இந்தப் படம் இந்தியர்களின் ஆன்மாவுக்கு மிகவும் நெருக்கமான படைப்பு. இந்திப் படம்தான். ஆனால், படத்தின் பிரதான கதாபாத்திரங்களுக்கு இடையே வசனமே கிடையாது. எந்த மொழியைச் சேர்ந்தவர்களுக்கும் புரியும் படம். தன் ஸ்கர்ட்டை மட்டுமே திருகிக்கொண்டு இருக்கும்

பர்ஃபி!

பிரியங்கா, ரன்பீர் மீது நம்பிக்கை வந்தவுடன் தன்னையும் அறியாமல் அவரது சட்டையைத் திருகத் தொடங்குவது, தூக்கத்தில் ரன்பீரின் சுண்டு விரலுடன் விரல் சேர்த்துக்கொள்வது, சராசரி மனிதர்களைக் காட்டிலும் உற்சாகமாகவும் திறமையாகவும் உலவும் மாற்றுத் திறனாளிகள் என வாழ்க்கையைக் கொண்டாடுவதற்கான காரணங்களைப் படம் நெடுக அடுக்கிக்கொண்டே செல்கிறார் அனுராக் பாஸு. 'சிட்டி லைட்ஸ்’, 'டைட்டானிக்’ போன்ற உலகக் காதல் காவியங்களுக்கு இணையான படம். நடிப்பு, வசனம், இசை, பாடல்கள், ஒளிப்பதிவு (தமிழர் ரவிவர்மன்) எனச் சகல சினிமா அம்சங்களும் இந்தப் படத்தில் உச்சம் தொட்டிருப்பது ஆச்சர்யம்!  

உங்கள் வாழ்க்கையின் மறக்க முடியாத க்ரீட்டிங் கார்டாக இந்த பர்ஃபி இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism