Published:Updated:

"ஹீரோக்களுக்குப் பிடித்த ஹீரோ நான்!"

நா.கதிர்வேலன்

"ஹீரோக்களுக்குப் பிடித்த ஹீரோ நான்!"

நா.கதிர்வேலன்

Published:Updated:
##~##

ஜிம் பாடியில் ஜம்மென்று இருக்கிறார் ரவி. ''என் சினிமா கேரியர்ல இது ரொம்ப முக்கியமான கட்டம். 'ஆதிபகவான்’, 'நிமிர்ந்து நில்’, 'பூலோகம்’னு ஒரே நேரத்தில் மூணு படங்கள் பண்றேன். இப்படிப் பண்றது இதுதான் முதல்முறை. முன்னாடி எல்லாம் ஒரே படம், ஒரே கேரக்டர்... அந்த நினைவுகள், அதற்கான ஒரே ஹோம்வொர்க்னு சிம்பிளா இருக்கும். இப்போ தினம் தினம் கூடுவிட்டுக் கூடு பாயுற மாதிரி இருக்கு. இது உடம்புக்குக் கஷ்டமா இருந்தாலும், மனசுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!'' - ஆழ்வார்பேட்டை புது வீட்டில் அழகாக இருக்கிறார் 'ஜெயம்’ ரவி.

 ''இதில் 'பூலோகம்’, வட சென்னையில் வாழும் பாக்ஸிங் ஆட்களைப் பத்தின படம். படத்தில் என் பேரே பூலோகம். எப்பவும் என் கைதான் முதல்ல பேசும். அடிதடின்னா துள்ளி ஓடி வருவான். பேசணும்னா, தயங்கி நிப்பான். படத்துக்கு வில்லனே இவன்தானோனு தோணும். மரண கானா பாட்டு, சால்ட் வாட்டர், சல்பேட்டா மேட்டர்னு வட சென்னைக் கலாசாரம் அப்படியே வந்திருக்கு.

சமுத்திரக்கனி அண்ணனுக்கு இந்த உலகம் முழுக்க இருக்கும் நல்ல விஷயங்கள் மட்டும்தான் கண்ல படும், மனசுல தங்கும். 'இது முடியாது, இது சரியில்லை’னு ஒரு வார்த்தை சொல்ல மாட்டார். அந்த பாசிட்டிவ் எனர்ஜியை 'நிமிர்ந்து நில்’ ஷூட்டிங் ஸ்பாட்ல பரிபூரணமா உணர்றேன். ஒவ்வொரு நாளும் நிறைய நிறையக் கத்துட்டே இருக்கேன்.''

"ஹீரோக்களுக்குப் பிடித்த ஹீரோ நான்!"

''வரும்போது அமுல் பேபி மாதிரி வந்தீங்க. அண்ணன் கை பிடிச்சுட்டே நடந்தீங்க. திடுக்குனு பார்த்தா உங்களை நம்பி எந்த கேரக்டரும் கொடுக்கலாம்கிற அளவுக்கு வளர்ந்துட்டீங்க... என்ன கேம் பிளான்?''

'' 'ஜெயம்’ வெற்றிக்கு அப்புறம் கிட்டத்தட்ட ஒரு வருஷம் வீட்டில் சும்மாதான் இருந்தேன். அடுத்த படம் ஹிட் கொடுத்தே ஆகணும்னு நினைச்சதால், அந்தப் பக்குவம் இருந்தது. அப்ப வந்த வாய்ப்புகள் எதுவும் திருப்தி கொடுக்காதப்போ, 'எம்.குமரன்’ படம் எடுத்து என்னைக் காப்பாத்தினது அண்ணன் ராஜாதான். இப்பவும் என் நல்ல படங்களை இயக்கியதில் அவருக்குப் பெரிய இடம் இருக்கு. ஜனநாதனின் 'பேராண்மை’ என்னை எனக்கே புதுசா அறிமுகப்படுத்துச்சு. பக்கத்து வீட்டுப் பையன், சாஃப்ட் ஹீரோங்கிற பேரை அந்தப் படம்தான் உடைச்சது. இது எல்லாமே நான் வேண்டி விரும்பிப் பண்ணியது. சில இடங்கள்ல என் கணக்கு தப்பி இருக்கலாம். தாமதம் ஆகியிருக்கலாம். அதே சமயம், என் மேல எந்தவொரு சின்ன நெகட்டிவ் இமேஜும் வந்துரக் கூடாதுன்னு தெளிவா இருந்தேன். நல்ல விஷயத் தைக்கூட மறந்துருவாங்க. ஆனா, கெட்ட விஷயம் காலத்துக்கும் நம்மகூடவே ஒட்டிக்கிட்டு இருக்கும். அது எனக்கு வேண்டாம்னு எடுத்த முடிவுதான் என்னை இப்போ இங்கே நிறுத்தியிருக்கு.''

''அமீர் தனக்கு வேணும்கிறது கிடைக்கிற வரை பிழிஞ்சு எடுத்திடுவாரே... 'ஆதிபகவன்’ கடைசி நாள் ஷூட்டிங்ல என்னை நினைச்சீங்க? மறைக்காமல் சொல்லுங்க?''

''அந்தப் படம் கேங்ஸ்டர் படம். அதிரடியான படம். அந்தப் படம் பண்றதில் சிரமம் இருக்கும்னு தெரியும். அதை அமீர் சாரே முதலில் சொல்லிட்டார். ஆனா, அது சிரமம் இல்லை... ரொம்பப் பெரிய சவால்னு வேலை பார்த்தப்போதான் தெரிஞ்சது. பட வேலைகள் எல்லாம் முடிஞ்சு இப்போ ரஷ் பார்க்கும்போது, கண்ணுல ஒத்திக்கலாம்போல அவ்ளோ நல்லா வந்திருக்கு. 'எப்படியாவது ரவிக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுத்து ரணும்’னு யூனிட்ல அமீர் சார் சொல்லிட்டே இருப்பார். அது என் காதுக்கும் வந்திருக்கு. அதனால சத்தியமா 'விட்டாப் போதும்’னு நான் எப்பவும் நினைக்கவே இல்லை. அவ்ளோ காத்திருப்புக்கும் அழகான ரிசல்ட் கிடைக்கணும்னு நினைச்சேன்... நிச்சயம் கிடைக்கும்.''

''அதெப்படி எல்லா நடிகர்களும் உங்களுக்கு நண்பர்கள் ஆகிடுறாங்க?''

''எல்லார் மேலயும் பாசமா இருப்பேன். சிபிதான் முதல் நண்பன். அடுத்து ஜீவா வந்தான். அப்புறம் விஷால், ஆர்யா, சிம்பு, தனுஷ், கார்த்தினு எல்லாருமே வந்துட்டாங்க. ஐ லவ் ஆல். படம் பார்த்துட்டு உண்மையான கமென்ட் பாஸ் பண்ணுவேன். தப்புன்னா தப்பு... சூப்பர்னா சூப்பர். என்னோட உண்மை எல்லாருக்கும் பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன்!''

''த்ரிஷா உங்க நெருங்கிய தோழி... அவங்களுக்குக் கல்யாணமாமே?''

'' 'என்னப்பா இப்படி நியூஸ் வந்திருக்கு... நிஜமாக் காதலிக்கிறியா?’னு கேட்டேன். ரொம்ப அழுத்தமான பொண்ணு சார். 'என்ன ரவி.... நீங்களுமா கிண்டல் பண்றீங்க’னு டபாய்க் குது. மத்தபடி ஒரு வார்த்தை எக்ஸ்ட்ரா வாங்க முடியலை. எல்லாரும் முதல்ல அப்படித்தானே சார் இருந்தோம். விட்டுப் பிடிப்போம்... இருங்க!''