##~## |
மனைவியின் மரணத்துக்குக் காரணமான வில்லன்களை அழிக்கும் கணவனின் 'தாண்டவம்’!
இந்தியாவின் திறமையான உளவுத் துறை அதிகாரி விக்ரம். இந்திய உளவுத் துறை உருவாக்கும் வெடிகுண்டு ஒன்றின் செய்முறையைத் தீவிரவாதிகள் திருட, அவர்களிடம் இருந்து அதைக் கைப்பற்ற முயற்சிக்கிறார். இடையில் நிகழும் சதிகளால் தன் பார்வையையும் மனைவியையும் இழக்கிறார். எதிரொலி மூலம் எதிரில் இருக்கும் பொருட்களைக் கண்டுபிடிக்கும் 'எக்கோலொகேஷன்’ திறனை வளர்த்துக்கொண்டு எதிரிகளை விக்ரம் அழிப்பதே கதை!
உளவுத் துறை, துரோகம் எனப் பல முறை சுவைத்த தோசையை, 'எக்கோலொகேஷன்’ என்ற புது சட்னியோடு பரிமாறி இருக்கிறார் இயக்குநர் விஜய். ஆக்ஷன், சென்டிமென்ட், காதல், சதி, உளவு, வியூகம்

என்று ஷிஃப்ட் போட்டுத் தாண்டவமாடி இருக்க வேண்டிய கதை, திருப்பம் இல்லா திரைக்கதையால் தடுமாறுகிறது.
உளவுத் துறை அதிகாரியாக விக்ரம் பெர்ஃபெக்ட் ஃபிட். பார்வைத் திறன் இல்லாமல், கோபத்தை, குரோதத்தை உடல் மொழியில் மட்டுமே வெளிப்படுத்தும் வேகத்திலும் அனுஷ்காவிடம் வசப்படும் காதலிலும் தான் ஒரு சீஸன்டு பெர்ஃபார்மர் என்பதை நிலை நிறுத்துகிறார்!
''நான் டெல்லியில கண் டாக்டர் தெரியுமா?'' என்று மூக்கு சிவக்க கோபம் காட்டுவதாகட்டும், ''லஞ்சம் வாங்குற போலீஸ்காரரா இருப்பார்!'' என்று கிண்டல் அடிப்பதாகட்டும், இறக்கும் முன் விக்ரமைப் பார்த்துக் கலங்குவதாகட்டும்... அலட்டிக்கொள்ளாமல் மனசை அள்ளுகிறார் அனுஷ்கா. ஜகபதிபாபுவின் கம்பீரக் குரல் உளவுத் துறை அதிகாரியின் பாத்திரத்துக்கு நச்.
திரைக்கதை எந்த அதிர்ச்சியையும் உண்டாக் காததால், சந்தானத்தின் 'ஆவரேஜ்’ ஜோக்கு களுக்குக்கூட சிரிக்க வேண்டிய நிலை. இப்படி யான கதைகளில் நாயகனின் ஃப்ளாஷ்பேக் கேட்டு உருகிக் காதலிக்கும் செகண்ட் ஹீரோயின் வேண்டுமே? இருக்கிறார் ஏமி ஜாக்ஸன்.
கல்யாணம் பிடிக்காமல் அதை நிறுத்த விக்ரம் மெனக்கெடுவது, 'பார்க்கணும்... பழகணும்... பிடிக்கணும்... காதலிக்கணும்’ என்று நிபந்தனை விதித்து விக்ரமுடன் அனுஷ்கா குடும்பம் நடத்து வது... ரசனையாகவே இருந்தாலும் முன்னரே தமிழ் சினிமாவில் பார்த்துப் பழகிய அத்தியாயங்கள் ஆயிற்றே விஜய்!

உளவுத் துறை சம்பந்தப்பட்ட கதை, திக் திகீர் திருப்பங்களுடன் எத்தனை இறுக்கமாக ஈர்க்க வேண்டும்? ஆனால், சின்ன ஆர்வம்கூட தூண்டாமல், எளிதில் கணிக்கக்கூடிய சம்பவங்களுடன் கடக்கிறது. பார்வைத் திறனுள்ள வில்லன்களையே புரட்டி எடுக்கும் அளவுக்கு விக்ரமுக்கு எப்படி வலிமை சேர்க்கிறது என்பதில் 'டீடெய்ல்’ இல்லாததால், 'எக்கோலொகேஷன்’ நமக்குள் எதிரொலிக்கவே இல்லை!
ஜி.வி.பிரகாஷ் இசையில் நா.முத்துகுமாரின் 'ஒரு பாதி கதவு நீயடி’ மெலடி மட்டும் முணு முணுக்கவைக்கிறது. அது லண்டனோ, கிராமமோ, இருட்டுக் குடோனோ.... ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவின் கேமரா மட்டுமே படம் முழுக்கத் தாண்டவமாடுகிறது.
படத்தின் பெயரில் இருக்கும் வைப்ரேஷன் படத்தில் இல்லியே பிரதர்!