Published:Updated:

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஸ்ரீதேவி!

கி.கார்த்திகேயன்

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஸ்ரீதேவி!

கி.கார்த்திகேயன்

Published:Updated:
##~##

முன்னாள் இந்தியக் கனவுக் கன்னி என்பதான நினைவுமீட்டலோ, புகழ் பாடும் காட்சிகளோ இல்லை. 'ஹீரோயின் சப்ஜெக்ட்’தான். ஆனால், 'வைஜெயந்தி ஐ.பி.எஸ்.’ போன்ற ஆக்‌ஷன் நாயகியோ, 'அருந்ததி’ போன்ற தெய்வாம்சக் கதாநாயகியோ, 'டர்ட்டி பிக்சர்’ போன்ற கவர்ச்சிப் பதுமையோ இல்லை படத்தின் நாயகி. இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக அதிகாலை எழுந்து ஒரு காபி குடிப்பதற்குள்ளாகவே அழுத்தும் வீட்டு வேலைகள், 'லட்டு செய்வதற்காகவே பிறந்தவள்!’ என்று லட்டு சுவைக்கும்போது மட்டுமே கணவனின் பாராட்டைப் பெறுபவள், குடும்பக் கடமைகளில் அசந்து மயங்கி நள்ளிரவுப் படுக்கையில் விழுந்த பிறகும் கணவனுக்கு 'சேவை’ செய்யும் உதாரண இந்தியக் குடும்பத் தலைவிதான் கதையின் நாயகி.

 ஒரு குடும்பத் தலைவி ஆங்கிலம் பேசக் கற்றுக்கொள்கிறாள் என்பதுதான் படத்தின் ஒன் லைன். ஆனால், அதற்குள் கிளை பரப்பிப் பரவும் கணவன்-மனைவி உறவு, அம்மா-மகள் நட்பு, இல்லத்தரசிக்கு வீட்டில் கிடைக்காத அன்பு வெளியே கிடைக்கும் விநோதம், ஆங்கிலம் பேசுவதன் தயக்கத்தைக் களையும் உத்தி... முதல் படத்திலேயே ஈர்க்கிறது கௌரி ஷிண்டேவின் இயக்கம். அனுதின அவசரத்தில் நாம் கவனிக்க மறந்த பல அத்தியாயங்கள் மீது கவனம்கொள்ள வைக்கிறது திரைக்கதை.

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஸ்ரீதேவி!

''அவங்களைச் சின்னதா சந்தோஷப்படுத்தக்கூட நான் எவ்வளவு கஷ்டப்படுறேன். ஆனா, ரொம்ப சுலபமா என் மனசை நோகடிச்சுடுறாங்களே. இவங்களுக்காக நான் இன்னும் என்ன பண்ணணும்?'' என்று வெம்பி வெதும்பும் ஸ்ரீதேவிக்கு இந்தப் படம்  கொண்டாட்டமான கம் பேக்!

ஆங்கிலம் கற்றுக்கொண்ட பிறகு கணவனும் மகளும் தன்னைப் பற்றி ஆங்கிலத்தில் அடிக்கும் கமென்ட்டுகள் புரிந்தா லும், வெற்றுப் பார்வையுடன் கடந்து செல்லும் இடத்தில்... செம ஸ்கோர்!

ஷாப்பிங் சென்ற இடத்தில், தன் அலுவலகத் தோழியைக் கட்டிஅணைத்து வழியனுப்புகிறான் கணவன். ''எப்பவும் இப்படித்தான் கட்டிப்பிடிச்சுப்பீங்களா?'' என்று கேட்கிறார் ஸ்ரீதேவி. சலிப்பான குரலில், ''சசி... அது நெருக்கம் இல்லை. சும்மா ஹக்... அவ்வளவுதான்!'' என்கிறான் கணவன். ''ஓ... அப்ப நாம நெருக்கமாத்தான் இருக்கோம். ஆனா, இப்படிக் கட்டிப்பிடிச்சுக்கிட்டதே இல்லை'' என்று ஸ்ரீதேவி சொல்வதற்குக் கணவனி டம் பதில் இல்லை.

எளிய புன்னகை, சிக்கன வார்த்தைகள் மூலமாகவே மனதைக் கொள்ளை கொள்கிறார், அமெரிக்காவில் ஸ்ரீதேவியின் ஆங்கில வகுப்புத் தோழனாக வரும் பிரெஞ்சு சூப்பர் ஸ்டார் மெதி நெபோ. தன் மீது சிநேகம்கொண்டு பழகும் மெதி நெபோவின் பிரியம் பிடித்திருந்தாலும், அதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், கோபப்படவும் முடியாமல் மருகுகிறார் ஸ்ரீதேவி. வேலை முடிந்ததும் தன்னை மறந்து உதாசீனப்படுத்தும் குடும்பத்தினர் மீதுள்ள ஆதங்கத்தில் இயல்பாகவே ஒரு பெண்ணின் மனம் அந்தப் பிரியத்துக்கு வசப்படும்தான். குடும்பத் தலைவிகள் ஃபேஸ்புக்கில் அதிதீவிரமாக இயங்குவதன் பின்னணிக்கு நிகரான சூழல் அது. ஆனால், அந்தச் சிக்கலான இடத்தில்... 'எனக்குத் தேவை காதல் இல்லை... மரியாதைதான்!’ என்று ஸ்ரீதேவியைத் தீர்க்கமாக முடிவெடுக்கவைப்பதோடு, அந்த மரியாதையை உரிமையாகப் பெறும் வழிமுறைகளையும் சுட்டிக்காட்டியிருப்பது இயக்குநர் கௌரியின் சாமர்த்தியம்.

'ஆங்கிலம் தெரியாதவர்களாலும் இந்த உலகத்தில் சாதிக்க முடியும். மக்களைத் தொடர்பு கொள்ள உதவும் ஒரு மொழியே ஆங்கிலம்!’  என்று செய்தி சொல்லும் படத்தை முழுவதும் ரசிக்க, அடிப்படை ஆங்கிலமேனும் அறிந்திருக்க வேண்டியிருப்பதுதான் இங்கு நகைமுரண்.

எண்பது, தொண்ணூறுகளின் கவர்ச்சிக் கன்னியான ஸ்ரீதேவியை ரசிக்க, ஏன் இவ்வளவு டீனேஜ் பசங்கள் கூடியிருக்கிறார்கள் என்ற கேள்விக்கு... அஜித் திரையில் தோன்றியபோது படீரென வெடித்த 8.3 ரிக்டர் அப்ளாஸே பதில். ஸ்ரீதேவிபோலவே பார்வையாளர்களுக்கு முதல் பார்வையில் அமெரிக்கா மீது பிரமிப்பை ஏற்படுத்தி, படிப்படியாக அமெரிக்க வீதிகளைச் சகஜமாக்குகிறது லெக்ஷ்மணின் ஒளிப்பதிவு.  

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஸ்ரீதேவி!

வழக்கமாக இப்படி ஒரு படத்தில் க்ளைமாக் ஸில் ஹீரோயின் துடித்தெழுந்து, நாலே வாரத்தில் கற்றுக்கொண்ட அறிவைக்கொண்டு, பிரிட்டிஷ் மகாராணிக்கே சவால்விடும் தொனியில் ஆங்கிலத் தில் பேசிப் பட்டையைக் கிளப்புவார்தானே. ஆனால், இங்கு அப்படி அல்ல. நாலு வாரத்துக் குள் எந்த அளவுக்கு ஆங்கிலம் கற்றுக்கொள்ள முடியுமோ அந்த அளவுக்கான தேர்ச்சியுடன் பேசுகிறார் ஸ்ரீதேவி. எளிய வார்த்தைகள்தான். ஆனால், அதில் அவர் சொல்லும் செய்தி, இந்தி யக் கணவர்கள் அனைவரும் உணர வேண்டிய உண்மைகள்.

'ஆக, லட்டு போடத் தெரிந்த மனைவிகள் இனி ஆங்கிலமும் கற்றுக்கொண்டு தத்தமது கணவர்களை வசப்படுத்த வேண்டுமா?’ என்று பொங்கிப் பொருமவிருக்கும் முற்போக்கு - பெண்ணியவாதிகள் கவனத்துக்கு... 'கணவர்களே! ஆங்கிலம் புரிந்தால் மட்டும் பத்தாது... உங்கள் மனைவியையும் புரிந்துகொள்ளுங்கள்!’ என்பதை இந்தப் படம் உணர்த்தும் செய்தியாக எடுத்துக்கொள்ளலாமே!