Published:Updated:

சினிமா விமர்சனம் : பீட்சா

விகடன் விமர்சனக் குழு

சினிமா விமர்சனம் : பீட்சா

விகடன் விமர்சனக் குழு

Published:Updated:
##~##

'ஜில்’ ரொமான்ஸ், 'திக்’ திகில், 'அட’ ஆச்சர்யம் கலந்துகட்டிய செம ஹாட்... பீட்சா!

 த்ரில், திகில் படத்துக்குக் கதை எல்லாம் எதுக்குங்க? அப்படியே 'சுடச்சுட’ தியேட்டர்ல பார்த்துக்கங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிகச் சில கேரக்டர்கள், ஒரு பீட்ஸா கடை, ஒரு பங்களா, ஒரு டார்ச் லைட், இரண்டு ரிங் டோன், ஒரு 'லேண்ட்லைன்’ தொலைபேசி, நிறைய இருட்டு, நிறைய நிறையத் திகில்! அறிமுக வாய்ப்பிலேயே 'மிரட்டி’ இருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். 'என்ன டைப் கதை இது?’ என்று முதல் பாதி முழுக்கப் பயத்துடன் குழம்பவைத்து, பின் பாதியில் ட்விஸ்ட் கொடுத்து... தமிழ் சினிமாவுக்கு நல்வரவு கார்த்திக்!

டி-ஷர்ட்டைக் கொடியில் இருந்து எடுக்காத ரம்யாவிடம், 'இன்னும் கொஞ்சம் கேர்ஃபுல்லா இருந்திருக்கலாம்ல’ என்று விஜய் சேதுபதி கோபப்படும்போது, 'நான் இப்போ கர்ப்பமா இருக்கேன்’ என்று ரம்யா பதில் அளிப்பது, ''நான் உன்னைக் காலம் முழுக்க நல்லாப் பார்த்துப்பேன். ச்சீ... என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறி யாடி!'' என்று விஜய் சேதுபதி ரம்யாவிடம் புரொபோஸ் செய்வது, நண்பர்களுடன் கல்யாணம்பற்றி விவாதிக்கும்போது, 'வேணும்னா... அந்த கம்பெனிக்காரன் மேல கேஸ் போட்டுரலாமா?’ என்று நண்பன் கமென்ட் அடிப்பது... த்ரில் படம்தான். ஆனால், காதலோ, கலாய்த்தலோ கிடைத்த இடத்தில் எல்லாம் சிரிக்கவைக்கிறார்கள்.  

சினிமா விமர்சனம் : பீட்சா

விஜய் சேதுபதிக்கு 'பீட்சா’ அட்டகாச விசிட்டிங் கார்டு. 'லிவிங் டுகெதர்’தோழி ரம்யா நம்பீசன் திகில் கதை சொல்லும் போது எல்லாம் திகில் அடிப்பதும், ரம்யா கர்ப்பமானதும் கலங்குவதும், தன்னந்தனியாகச் சிக்கிக்கொண்டு கதறு வதுமாக அட்டகாசப்படுத்துகிறார்.படத் தின் முதல் ஃப்ரேம் தொடங்கி இறுதி வரை வந்தாலும் சரமாரி ரியாக்ஷன் களால் படத்தைத் தூக்கிச் சுமக்கிறார். இரவில் இருளில் தனியாகச் சிக்கிக்கொண்ட பிறகு, பயத்தில் உதறி வெலவெலத்து, இதற்கு மேல் இன்னும் என்ன இருக்கிறது என்று துணிந்து 'எவன்டா அது?’ என்று இருட்டைப் பார்த்துக் குரல் கொடுக்கும் இடத்தில்... வெல்டன் விஜய்!

விஜய் சேதுபதியுடனான அந்த நெருக்கமும் தான் சொல்வதை நம்ப வைக்கும் அதட்டலுமாக... மழை நேரத்து ஐஸ்க்ரீமாக வசீகரிக்கிறார் ரம்யா நம்பீசன்.

'நித்யா£..ஆ...ஆ...’ என்று உறுமலுடன் நிமிர்ந்து பார்க்கும் 'சுமேதா’வின் அரட்டலுக்கே அலறுகிறது தியேட்டர். பீட்ஸா கடை உரிமையாளராக வரும் நரேன், அவரது உதவியாளர்கள் ஜெயக்குமார், கருணா, பங்களாவாசிகள் பூஜா, சின்ஹா, பேபி கவிதாஸ்ரீ என அனைவருமே கொடுத்த பாத்திரத்துக்கு நச்!

சினிமா விமர்சனம் : பீட்சா

இடைவேளைக்கு முந்தைய 40 நிமிடங் கள்தான் படத்தின் டெரர் அத்தியாயம். அத்தனை நிமிடங்கள் நீண்டாலும் 'ஒற்றை டார்ச்’ உதவியுடன் அலுக்காமல், சலிக்காமல் பயமுறுத்தும் திரைக்கதைதான் படத்தின் பலம். கதையின் முடிச்சு ஒவ்வொன்றாக அவிழும்போதே, 'இது பேய்க் கதையா... த்ரில்லர் கதையா?’ என்று குழம்பவைத்து, 'அப்படி என்னதான் இருக்கு அந்த வீட்டுக்குள்ளே?’ என்று பயப்படவைத்து, பின் பாதியில் ஆச்சர்யம் புதைத்து... 'மாஸ் ஹீரோ’, 'மெகா பட்ஜெட்’ இல்லாமலும் ரசிகர் களை அசத்தலாம் என்று நிரூபிக்கிறது இயக்குநர் - ஒளிப்பதிவாளர் - இசைஅமைப்பாளர் - எடிட்டர் கூட்டணி!

டார்ச் லைட் வெளிச்சம் மூலமே இன்ச் இன்ச்சாகப் பயம் ஏற்றுவதிலும் மழைப் பாடலிலும் செம ஸ்கோர் செய்திருக்கிறது ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத்தின் கேமரா. சந்தோஷ் நாராய ணனின் பின்னணி இசை படத்தின் செகண்ட் ஹீரோ. லியோ ஜான் பால்-ன் படத்தொகுப்பு த்ரில் படத்துக்கான கச்சித பேக்கேஜ்!  

பின் பாதியில் சஸ்பென்ஸ் கலைந்த பிறகு, 'அப்போ அது அப்படில்ல இருக் கணும்... ஏன் இப்படி இருந்துச்சு?’ என்று வரிசை கட்டுகின்றன கேள்விகள். ஆனால், பேய் நாவல் எழுதும் காதலி, மனநலம் பாதித்த கடை உரிமையாளரின் மகள், ஜோதிடம், சடங்குகளில் நம்பிக்கை கொண்ட கடை உரிமையாளர் என 'நம்பத்தகுந்த ஆதாரங்கள்’ வைத்துச் சமாளிக்கிறார்கள்.

எது எப்படியோ, பேய் பயத்தைக் காட்டு காட்டுன்னு காட்டியதற்காகவே... இந்த 'பீட்சா’வை நம்பி ஆர்டர் பண்ணலாம்!