Published:Updated:

சினிமா விமர்சனம் : ஆரோகணம்

விகடன் விமர்சனக் குழு

பிரீமியம் ஸ்டோரி
##~##

வாழ்வெல்லாம் கனம் சுமக்கும் பெண்மையின் ஆரோகணம்!

குப்பத்து குடும்பத் தலைவியாக, இரண்டாம் திருமணம் முடித்த கணவனின் உதவி இல்லாமல் இரும்பு மனுஷியாக இரண்டு பிள்ளைகளையும் வளர்க்கிறார் விஜி. இரண்டு நாட்களில் பெண்ணுக்குக் கல்யாணம் இருக்க... திடுதிப்பென்று ஓர் இரவு காணாமல் போகிற விஜியை மொத்தப் பேரும் தேடி அலைகிறார்கள். அவர் என்ன ஆனார்... என்பதைச் சொல்லும் அடுத்தடுத்த நிகழ்வுகள்... பதமான நெகிழ்வுகள்!

ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஒரு விஜி இருக்கிறார் என்கிற வலியையும் உணர்வையும் நமக்குத் தந்ததற்காகவே அறிமுக இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு அழுத்தமான கைகுலுக்கல்கள். விஜியைத் தேடி அவரது குடும்பம் தவிக்கும்போதே சடசடவென வந்து போகும் ஃப்ளாஷ்பேக்குகள் நல்ல உத்தி. படம்

சினிமா விமர்சனம் : ஆரோகணம்

முழுக்கவே நிறைந்து கிடக்கிற கேன்டிட் ஷாட்கள், கதைக்குள் மிக யதார்த்தமாக நம்மை அழைத்துச் செல்கின்றன.  

விஜியின் அத்தனை பெரிய கண்களே உயிரும் உருக்கமுமாக உணர்வுகளைப் பேசிவிடுகின்றன. கணவன் தவறான வார்த்தையை விட, கையில் வைத்திருக்கும் குடத்தை அப்படியே போட்டுவிட்டு வீட்டுக்குள் ஓடுவதில் உள்ள கோபம்... தான் பார்த்துப் பார்த்து வைத்த வெண்டைக்காய் சாம்பாரை வேண்டாம் என்று மகன் ஒதுக்க... கோபப் பட்டு பின்னால் கண்கலங்கும்போது உள்ள பிரியம்... எல்லாமே நுணுக்கமான பதிவுகள். சதா சிடுசிடுத்துக்கொண்டே இருக்கும் கணவராக வரும் மாரிமுத்து நல்ல சாய்ஸ். மனைவி காணாமல் போய் தேடிக்கொண்டு இருக்கும் கேப்பில், ரோட்டுக் கடையில் ரெண்டு கொத்து பரோட்டா சொல்கிறாரே... அதுவே போதும் அவரது பாத்திரப் படைப் புக்கு. சண்டை போட்டுக்கொள்ளும் முதலாம், இரண்டாம் மனைவிகளையே பார்த்துப் பழக்கப்பட்டுப்போன நமக்கு, கணவனிடம் 'அவளைப் போய் பைத்தியம்னு சொல்லி ஒதுக்கி வெச்சுட்டியே...’ என்று விஜிக்காக ஆதங்கப்படும் இடத்தில் நெகிழ வைக்கிறார் இரண்டாவது மனைவியாக வரும் சுபகீதா.

படம் நெடுகிலும் விபத்தில் விஜிக்கு அடிபட்டு இருக்கும் என நம்பவைத்து, இரண்டாம் பாதியில் வருகிற 'ட்விஸ்ட்’ ரசிக்கவைக்கிறது. எதிர்பாராமல் ஸ்டார் ஹோட்டலில் களைகட்டுகிற அந்த குத்து டான்ஸ் டிஸ்கொதே... நிச்சயம் சர்ப்ரைஸ். ஆனால், ஆங்காங்கே அடிக்கும் குறும்பட வாடையைத்

சினிமா விமர்சனம் : ஆரோகணம்

தவிர்த்திருக்கலாம்.    

அரையிருட்டிலும் பயணங்களிலுமே இருக்கிற சண்முகசுந்தரத்தின் கேமரா, கதையின் கைப்பிடித்து கூட்டிச் செல்கிறது. முன்பின்னாக நகரும் திரைக்கதையைக் குழப்பம் இல்லாமல் கச்சித மாகச் செதுக்கியிருப்பதில் எடிட்டர் கிஷோரின் உழைப்பு நச். கே-யின் பின்னணி இசை படத்துக்குப் பலம்!  

ஒரு குடும்பத் தலைவியின் மன உணர்வுகளைச் சொன்னதாலேயே 'ஆரோகணம்’ சுக ராகமாக ஒலிக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு