சினிமா
Published:Updated:

இனிய இளைஞர்கள்... புதிய கலைஞர்கள்!

க.ராஜீவ்காந்திபடங்கள் : கே.ராஜசேகரன்

##~##

2012-ல் வெளியான தமிழ் சினிமாக்களில் நம் நினைவில் நிற்பவை, எதிர்காலத்திலும் நிலைத்து நிற்பவை அனைத்தும் 'நியூ லைன் சினிமா’!

 சூப்பர் ஹீரோ, மெகா பட்ஜெட் துணை இல்லாமல், சமூகத்துக்குச் செய்தி சொன்ன, தமிழ் சமூகத்தைப் பிரதிபலித்த 'வழக்கு எண் 18/9’, 'மதுபான கடை’, 'அட்டகத்தி’, 'சாட்டை’, 'சுந்தரபாண்டியன்’ ஆகிய படங்களின் மூலம் அறிமுகமும் அங்கீகாரமும் தேடிக்கொண்ட இளைய தலைமுறைக் கலைஞர்களின் சந்திப்பு இது.

விகடன் அலுவலகத்தில் நிகழ்ந்த சந்திப்பில், இயக்குநர்கள் 'மதுபான கடை’ கமலக்கண்ணன், 'அட்டகத்தி’ ரஞ்சித், 'சாட்டை’ அன்பழகன், 'சுந்தரபாண்டியன்’ பிரபாகரன், நடிகர்கள் 'பீட்சா’ விஜய்சேதுபதி, 'அட்டகத்தி’ தினேஷ், 'சுந்தரபாண்டியன்’ இனிகோ பிரபாகர், நடிகைகள் 'வழக்கு எண்’ மனீஷா, 'அட்டகத்தி’ ஐஸ்வர்யா, 'சாட்டை’ மஹிமா ஆகியோரின் உரையாடலில் இருந்து...

இனிய இளைஞர்கள்... புதிய கலைஞர்கள்!

''நான் சினிமாக்காரன் இல்லை!'' என்று அவரது படம் போலவே அதிரடியாக ஆரம்பித்தார் 'மதுபான கடை’ கமலக்கண்ணன். ''இப்போ ரெகுலர் ஸ்ட்ரீம்ல வர்ற தமிழ் சினிமாக்கள் எல்லாமே தமிழர்களிடம் இருந்து அந்நியமா இருக்கு. அதே சமயம் இங்கே சாதி, மத, அரசியல் பத்தி சுதந்திரமா விவாதிச்சுப் படம் எடுக்க முடியாத நிலைமை இருக்கு. பத்து வருஷத்துக்கு முன்னாடி வரை குடிக்கிறது தப்புனு இருந்துச்சு. ஆனா, இப்ப டாஸ்மாக் காட்சிகள் இல்லாத படங்களே இல்லை. அதையெல்லாம் பார்த்துக் கொண்டாடுற இளைஞர்களுக்கு நிகரா, கோபப்படுற இளைஞர்களும் இருக்கோம். அப்படியான ஒரு கோபத்தின் வெளிப்பாடுதான் 'மதுபான கடை’. படத்துல நான் எதுக்குமே தீர்ப்பு சொல்லலை. ஒரு ஆரோக்கியமான விவாதத்தைத் தொடங்கி வெச்சிருக்கேன். அது ஒரு விதை. ஜான் பெர்கின்ஸ் எழுதி, இரா.முருகவேளால் தமிழில் மொழிபெயர்க் கப்பட்ட  'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ புத்தகம்தான் என்னை இந்த அளவுக்கு உசுப்பியது. நம்மைச் சுத்தி நடக்கும் பல விஷயங்களின் பின்னணியைச் சுளீர்னு விளக்கும் அருமையான புத்தகம் அது. இசை, புத்தகம், பயணம்னு சுத்திட்டு இருந்த என்னை தமிழ் சமூகச் சூழல் ஒரு படமும் எடுக்கவெச்சிருச்சு. ஆனா, சுட்டுப் போட்டாலும் பாட்டு, ஃபைட்டு, சென்ட்டிமென்ட், பஞ்ச் டயலாக்னு ஒரு ஸ்ட்ரக்சுரல் சினிமா எடுக்க என்னால் முடியாது. அதனால்தான் நான் சினிமாக்காரன் கிடையாதுனு சொன்னேன்!'' என்று கமலக்கண்ணன் நிறுத்த, ''ஒரு நல்ல படம் எடுத்துட்டு, சினிமாக்காரன் இல்லைனு நீங்க சொல்லக் கூடாது. ஏன், சினிமாக்காரங்க நல்ல சினிமா எடுக்க மாட்டாங்களா? இப்போ நீங்களும் எங்க ஆளுதான்!'' என்று கமலக்கண்ணனின் தோள் இறுக்கிக்கொண்ட 'சாட்டை’ அன்பழகன் தன் அனுபவங்களைப் பேசத் தொடங்கினார்.

''ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவன் நான். ஆனா, படிப்பு முடிஞ்சதும் என்னை வழிநடத்த யாருமே இல்லை. தட்டுத் தடுமாறி அகத்தியன் சார்கிட்ட அசிஸ்டென்ட்டா சேர்ந்தேன். முதல் நாள் ஷூட்டிங்லயே எனக்குப் புரிஞ்சிருச்சு... நமக்கு சினிமா பத்தி எதுவுமே தெரியாதுன்னு. இனிமேதான் நாம கத்துக்கவே ஆரம்பிக்கணும்னு மனசை எப்பவும் க்ளீன் சிலேட்டா வெச்சுக்க முடிவெடுத்தேன். அப்புறம் 'கொக்கி’ படத்துல இருந்து பிரபு சாலமன் சார்கிட்ட வேலை பார்த்தேன். படம் இயக்கலாம்னு முடிவுபண்ணி 'சாட்டை’ படத்தின் ஒன் லைன் மட்டும் பிரபு சாலமன்கிட்ட சொன்னேன். 'படத்தை நானே தயாரிக்கிறேன்’னு சொன்னார். திரைக்கதைக்கான கிரவுண்ட் வொர்க் ஆரம் பிச்சேன். நிறையப் பள்ளிக்கூடங்களுக்குப் போனேன். அங்கே நான் பார்த்த, உணர்ந்த, புரிஞ்சுக்கிட்ட விஷயங்களை வெச்சு இன்னும் நாலு 'சாட்டை’கள் வீசலாம். படத்துக்கு சமூக அமைப்புகள், ஆசிரியர் சங்கங்கள், மாணவர் கள்னு எல்லாத் தரப்பினரிடமும் நல்ல வர வேற்பு. வணிகரீதியாகவும் எங்க எதிர்பார்ப் பையும் தாண்டிய வெற்றி. முன்னைக் காட்டி லும் இப்போ உற்சாகமாகவும் நம்பிக்கையாகவும் இருக்கேன்!'' என்று அன்பழகன் நிறுத்த, கைத் தட்டல் மூலம் அவரது உற்சாகத்துக்கு உரமிட்டனர் அனைவரும்.

இனிய இளைஞர்கள்... புதிய கலைஞர்கள்!

''எனக்கு இப்பவே கண்ணைக் கட்டுது... ரொம்ப சீரியஸா, குறிப்பிட்ட நோக்கத்துக்காக ஃபோகஸ் பண்ணிப் படம் எடுத்திருக்கீங்க. நானும் அப்படித்தான். ஆனா, அதை ஜாலியா சொன்னேன்!'' என்று சின்ன அறிமுக பில்டப் கொடுத்து அனைவர் முகமும் நோக்கிவிட்டுப் பேசத் தொடங்கினார் 'அட்டகத்தி’ இரஞ்சித். '' 'மதுபான கடை’, 'சாட்டை’ மாதிரியான சமூகப் பிரச்னைகளுக்கு நிகரா இங்கே காதலும் இருக்கு. காதல் நல்ல விஷயம்தான்... ஆனா, அதுக்காக அந்த விஷயத்தை ரொம்பப் புனிதமா நினைச்சு ஓவர் பில்டப் கொடுத்து நம்ம இளைஞர் கள் அதிலேயே தங்களோட அடலசன்ட் பருவத் தின் பெரும் பகுதி நேரத்தை வீணடிச்சுடுறாங்க. அது மேல கொஞ்சம் வெளிச்சம் பாய்ச்சலாம்னுதான் 'அட்டகத்தி’ பண்ணேன். ஹிட்லருக்கு எதிரான விமர்சனங்களை ரொம்ப ஜாலியாப் பதிவு பண்ணினார் சார்லி சாப்ளின். அவர்தான் ரியல் ஹீரோ. அப்படித்தான் என் ஒவ்வொரு படத்திலும் நல்ல விஷயத்தை ஆழமாகவும் அழகாகவும் பதிவு பண்ணணும்னு ஆசை. அடுத்தடுத்த முயற்சிகளில் இன்னும் நிறைய அக்கறையைப் பார்க்கலாம்!'' என்றார் இரஞ்சித்.

''உங்க எல்லாரையும் பார்த்தா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு. வாழ்க்கையை நேசிக்கிறதைத் தவிர எனக்கு வேற எதுவும் தெரியாது. சினிமாவில் ஒரு வெற்றிக்காக 16 வருஷம் போராடினேன். அந்த வெற்றியும் அர்த்தமுள்ளதா இருக்கணும்னு உறுதியா இருந்தேன். புதுசா சொல்ல என்கிட்ட எந்தக் கதையும் இல்லை. நான் உணர்ந்ததை, வாழ்ந்ததை அந்த ஈரஞ்சாரம் குறையாம அப்படியே பதிவு பண்ணணும்னு ஆசை. சசிகுமார் சாரைப் பார்த்த பிறகுதான் என் கனவு ஜெயிக்கும்னு நம்பினேன்!'' - அமைதியாக வந்து அபார வெற்றியை ருசித்த 'சுந்தரபாண்டியன்’ பிரபாகரனின் இன்ட்ரோ இது. ''இலக்கே இல்லாம நிறைய இயக்குநர்களிடம் வேலை பார்த்துட்டே இருந் தேன். உலக சினிமாக்களைப் பார்த்தீங்கன்னா, எல்லாமே அவங்கவங்க உள்ளூர் சினிமாக்களா இருக்கும். ஒவ்வொரு படமும் ஏதோ ஒரு கலா சாரத்தை, மரபை, ஆதிகாலப் பழக் கத்தை நமக்கு அறிமுகப்படுத்தும். அப்படி நம்ம ஊரை, கலாசாரத்தைப் பிரதிபலிக்கிறதுதான் தமிழ்நாட்டுக்கு வெளியே உலக சினிமாவாகக் கொண்டாடப்படும். அந்த பேக்கேஜ் தான் 'காதல்’, 'வழக்கு எண் 18/9’ படங்களுக்கு உலக சினிமா அந்தஸ்து கொடுத்திருக்கு. இப்போ 'சுந்தரபாண்டியன்’ படத்தில் சாதி சம்பந்தமான காட்சிகள் இருந்ததா விமர்சனங்கள். உசிலம்பட்டியைப் பத்திப் பேசுறப்ப அது இல்லாம இருந்தால்தான் தப்பு. சமூகம், சொந்தபந்தம் பத்தி எல்லாம் பேசும்போது எதையுமே மறைக்காமப் பதிவு பண்ணணும்னு முடிவு பண்ணினேன். அதுவும் போக இங்கே கமர்ஷியலாகவும் ஜெயிக்க வேண்டிய கட்டாயம் இருக்கு. உண்மையைச் சொல்லணும்னா, 'சுந்தரபாண்டியன்’ எனக்குக் கிடைச்ச முதல் வாய்ப்பு கிடையாது... கடைசி வாய்ப்பு. அதுல ஏதாவது தப்பாச்சுன்னா, அப்புறம் உசிலம்பட்டி தியேட் டரில் படம் பார்க்கிறது மட்டும்தான் சினிமாவுக்கும் எனக்குமான சம்பந்தமா இருக்கும். இப்போ இரண்டாவது பிறவி எடுத்த மாதிரி இருக்கு. இனி என் ரெண்டாவது படம்தான் என் உண்மையான அடையாளமா இருக்கும்!'' என்று நெகிழ் வான குரலில் பிரபாகரன் நிறுத்த... அவரைத் தோளோடு அணைத்துக்கொண்டார் அன்பழகன்.

இனிய இளைஞர்கள்... புதிய கலைஞர்கள்!

''ஹலோ... ஃபீலிங்ஸ் போதும்... இப்போ ஹீரோக்கள் என்ட்ரி டைம்!'' என்று விவாதத்தைக் கலகலப்பான திசைக்குத் திருப்பினார் விஜய் சேதுபதி. '' 'பீட்சா’ படம் மூலம் ஒரு ஹீரோவா ஜெயிச்சுட்டேன். ஆனா, இதுக்கான முயற்சியும் சிரமங்களும் ஆரம்பிச்சது 2004-ம் வருஷம். லென்ஸ் வெச்சுத் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சின்னச் சின்ன கேரக்டர்ல ஹீரோவுக்கு ஃப்ரெண்டா வந்துட்டுப் போவேன். நடிப்பு கத்துக் கலாம்னு கூத்துப்பட்டறை போனேன். ஆனா, அங்கே எனக்கு அனுமதி கிடைக்கலை. சரி பரவாயில்லை... பக்கத்தில் இருந்து பார்த்தாவது கத்துக்கலாமேனு அங்கேயே அக்கவுன்டென்ட்டா வேலைக்குச் சேர்ந்தேன். ஆனா, ஒரு கட்டத்தில் சினிமாங்கிற இலக்கை விட்டு விலகிடுவோமோனு பயத்தில் வேலையை உதறிட்டு நடிக்கும் வாய்ப்புகளைத் தீவிரமாத் தேடினேன். அப்பதான் 'அட்டகத்தி’ தினேஷ் நட்பானான். கைச்செலவுக்கு ஆகுமேனு 'பெண்’ சீரியலில் நடிச்சேன். ஆனா, அந்த சீரியல்ல நடிச்ச எட்டு மாசம்தான் எனக்கு ஆக்டிங் கோர்ஸ். சி.ஜே.பாஸ்கர் சார்கிட்ட நிறையக் கத்துக்கிட்டேன். அப்புறம் 'வெண்ணிலா கபடிக் குழு’ மூலமா சுசீந்தரன் சார்தான் எனக்கு பளிச் அறிமுகம் கொடுத்தார். அவர் கொடுத்த சிபாரிசுதான் 'தென்மேற்குப் பருவக் காற்று’ வாய்ப்பு வாங்கித் தந்தது. 'வளர்ற காலத்துல ஏன் 'சுந்தரபாண்டியன்’ படத்துல நெகட்டிவ் கேரக்டர்ல நடிச்சே?’னு கேட்கிறாங்க. எனக்கு நல்லாத் தெரியும்... ஒரு நடிகன் இனிமே ஆயுசுக்கும் ஹீரோவா மட்டுமே நடிச்சுட்டு இருக்க முடியாது. நாம நடிக்கிற ஒவ்வொரு கேரக்டரும் ரசிகர்கள் மனசுல பதியணும்... அவ்வளவுதான். இதோ இப்போ 'பீட்சா’தான் எனக்கு அடையாளம். அடுத்து, அதைத் தாண்டுற அளவுக்கு ஒரு பாய்ச்சல் காட்டணும்!'' என்று விஜய் சேதுபதி நிறுத்த, ''உன் வாழ்க்கை வரலாற்றுல ஒரு முக்கியமான நிகழ்வை மறந்துட்டியே?'' என்று ட்விஸ்ட் வைத்தார் தினேஷ்.

விஜய் புரியாமல் பார்க்க, தினேஷே தொடர்ந்தார்... ''நாங்க ரெண்டு பேரும்தான் வெறியா சான்ஸ் தேடிட்டு இருந்தோம். அப்ப பாலு மகேந்திரா சாரைப் போய்ப் பார்த்தோம். 'விஜயோட கண்ணு நல்லா இருக்கு. உனக்கு பாடி லாங்குவேஜ் நல்லா இருக்கு. ரெண்டு பேருமே பெரிய ஹீரோக்களா வருவீங்க’னு வாழ்த்தினார். அதோட எங்களை அவரோட கேமராவில் போட்டோவும் எடுத்தார். அந்த நாள்தான் எங்க வாழ்க்கையில மறக்க முடியாத நாள். ஆனா, நாங்க காலண்டர்ல குறிச்சுவைக்க மறந்துட்டோம்!'' என்று கலகலப் பூட்டினார் தினேஷ்.

கிடைத்த சின்ன கேப்பில் தன் கதை சொன்னார் 'இனிகோ’ பிரபாகர். ''அப்பா தமிழ் வாத்தியார். அதனால 'இனிய அரசன்’ங்ற அர்த்தம் வர்ற மாதிரி 'இனிகோ’னு பேர் வெச்சார். நான் 'பிரபாகர்’ சேர்த்துக்கிட்டேன். என் முதல் படமே தல கூடத்தான். 'ஜி’ படத்தில் அறிமுகம் ஆனேன். அப்போ வெங்கட் பிரபுவுடன் கிடைச்ச நட்புதான் 'சென்னை-28’ல் நடிக்கவெச்சது. அந்த வெளிச்சத் தோடவே 'பூ’, 'அழகர்சாமியின் குதிரை’னு நடிச்சேன். இப்போ 'சுந்தரபாண்டியன்’ல கிட்டத் தட்ட செகண்ட் ஹீரோ கம் வில்லன் கேரக்டர். 'சுந்தரபாண்டியன்’ படத்துக்கு நண்பர்களை அழைச்சுட்டுப் போனேன். கதை எல்லாம் அவங்ககிட்ட சொல்லலை. 'இன்டர்வெல்’ வரைக்கும் 'சூப்பர்டா’னு சொல்லிட்டு இருந்தவங்க, க்ளைமாக்ஸுக்கு அப்புறம் எதுவுமே பேசலை என்கிட்ட. 'தம்பி, என்ன கோபம்னாலும் பேசித் தீர்த்துக்குவோம். நீ பாட்டுக்கு கருவக் காட்டுக்குள்ள கூட்டிட்டுப் போயிராத’னு மெசேஜா அனுப்பிக் கலாய்க்கிறாங்க பசங்க!'' என்று சிரிக்கிறார்.

''ஓ.கே... லேடீஸ் ப்ளீஸ்'' என்று 'சாட்டை’ மஹிமாவைப் பார்த்தார் இரஞ்சித். ''நான் ஒரு மலையாளி. தமிழ் அவ்ளோவா வராது. இப்ப கத்துட்டே இருக்குது. ஆனா, தமிழே தெரியாத எனக்கு முதல் படத்துலயே நாலு தமிழ் சினிமா டைரக்டர்ஸ்கூட வொர்க் பண்ண சான்ஸ். பிரபு சாலமன், சமுத்திரக்கனி, தம்பி ராமைய்யா, அன்பழகன்னு எல்லாருமே என் மேல கேர் எடுத்துக்கிட்டு கைடு பண்ணாங்க. படத்துல வர்ற 'அறிவழகி’ மாதிரி நானும் இப்பதான் ப்ளஸ் டூ படிக்கிறேன். சாஃப்ட்டா பேசுறேன்னு என்னை நல்ல பொண்ணுனு நினைச்சுராதீங்க... வீட்ல நான் ரொம்ப டெரர் கேர்ள்!'' என 'உண்மை’ சொன்னார் மஹிமா.

''நான் நல்லா தமிழ் பேசுவேன். ஆனா, அதுதான் இங்கே தப்பு போல!'' என்று சிரிப்பு மத்தாப்பு கொளுத்திவிட்டுப் பேசத் தொடங்கினார் 'அட்டகத்தி’ ஐஸ்வர்யா. ''என் தாய்மொழி தெலுங்கு. ஆனா, வளர்ந்தது சென்னையில்தான். தாத்தாவும் அப்பாவும் தெலுங்குல ஹீரோக்களா நடிச்சவங்க. 'மானாட மயிலாட’, 'சட்டப்படி குற்றம்’ படத்துல ஒரு பாட்டு... இப்போ 'அட்டகத்தி’ படத்துல ஒரு கேரக்டர். படத்துல சின்ன போர்ஷன்தான்... அதுவும் முழுக்க நைட்டி மட்டும்தான். இருந்தாலும் நல்ல ரீச். 'நல்லா டான்ஸ் ஆடுவேன் சார்... ஒரு சாங் கொடுங்க’னு ரஞ்சித் சார்கிட்ட கேட்டேன். 'சூப்பர் டான்ஸ் சீன் இருக்கு’னு சொல்லி சாவுக் குத்துக்கு ஆட வெச்சிட்டாரு. செமத்தியா ஆடினேன்.  இப்போ ஜெமினி கணேசன் பேரனோட 'விளம்பரம்’னு ஒரு படத்தில் நடிக்கிறேன்!'' என்று சிரித்தார் ஐஸ்வர்யா.

இனிய இளைஞர்கள்... புதிய கலைஞர்கள்!

இறுதியாக மனீஷாவின் பக்கம் அனைவரின் பார்வையும் திரும்பியது. ''ஐ அண்டர்ஸ்டாண்ட் தமிழ்... பட் கான்ட் ஸ்பீக்!'' என்று முன்னரே ஜவாப் சொல்லிவிட்டு, ஆங்கிலத்தில் பேசத் துவங்கினார் மனீஷா. '' 'வழக்கு எண்’ படத்துக்கு அப்புறம் இப்போ 'ஆதலினால் காதல் செய்வீர்’ படம் பண்றேன். ரெண்டு படத்துலயும் லவ் போர்ஷன்ஸ்தான் எனக்கு. ஆனா, நிஜத்தில் நான் லவ் பண்ணதே இல்லை. அனுபவமும் இல்லாம, ஹோம் வொர்க்கும் பண்ண முடியாம ரொம்ப சிரமப்பட்டேன். பெங்களூரு நேட்டிவ். மணிரத்னம், ஷங்கர் படங்கள் எல்லாம் பார்த்திருக்கேன். தமன்னா எனக்கு விஷ் பண்ணி நிறைய டிப்ஸ் கொடுத்தாங்க. அப்படி நானும் சீக்கிரமே என் ஜூனியர்ஸுக்கு நல்ல ரோல் மாடலா விஷ் பண்ணணும்!'' என்று கடகட ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி முடிக்க, ''வெல்கம் பேக் ஃப்ரம் த கமர்ஷியல் பிரேக்'' என்று கலாய்த்துவிட்டுத் தன் கதைச் சுருக்கம் சொன்னார் தினேஷ்.

''நான் அடிப்படையில் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். அதனால 'அட்டகத்தி’யைச் செமத்தியா சுழட்டியாச்சு. இப்போ தாடியை ட்ரிம் பண்ணக்கூட நேரம் இல்லை. அவ்வளவு பிஸியோ பிஸி. படம் பார்த்துட்டு நிறைய கேர்ள்ஸ் மெயில், லெட்டர்லாம் போடுறாங்க. அடிக்கடி மொபைல் நம்பர் வேற மாத்த வேண்டி இருக்கு. மனீஷ்... உன் நம்பர் சொல்லும்மா!'' என்று தினேஷ் கேட்க, ''தம்பி... ஷூட்டிங்லாம் முடிஞ்சு எப்பவோ பேக்கப் சொல்லியாச்சு... உன் பெர்ஃபார்மன்ஸைக் கொஞ்சம் நிறுத்துறியா?'' என்று இரஞ்சித் சொல்ல... அங்கே விழுந்தது 'கட்’!