Published:Updated:

சினிமா பிரதர்ஸ்! - டைரக்டர்ஸ் ஸ்பேஷல்

சினிமா பிரதர்ஸ்! - டைரக்டர்ஸ் ஸ்பேஷல்

பிரீமியம் ஸ்டோரி
##~##

லிங்குசாமியின் அலுவலகம் பக்கம் எட்டிப் பார்த்தால், பாலாஜி சக்திவேல், மிஷ்கின், பிரபு சாலமன் என்று நட்சத்திர இயக்குநர்களின் கூட்டம்.

''என்ன சார், நீங்க 'வேட்டை’ ஆடப்போறீங்கன்னு தெரியும். இது என்ன புது வேட்டை?'' என்றால் சிரிக்கிறார் லிங்கு.

''என் 'வேட்டை’ வேற. அது நான் 'கிளவுட் நைன்’க்குப் பண்றேன். இவங்க மூணு பேரும் நம்ம 'திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனத்துக்குப் படம் பண்றாங்க. இந்த நிமிஷம் தமிழ் சினிமாவின் நம்பிக்கை இயக்குநர்களாக இருக்கும் மூணு நண்பர்களுடன் ஒரே நேரத்தில் வேலை பார்க்கும் அனுபவம் எனக்கே புதுசாவும் பிரமிப்பாவும் இருக்கு!'' - ஆச்சர்யம் விலகாமல் பேசுகிறார் லிங்குசாமி.

சணல் மெத்தைக்குள் புதைந்து அமர்ந்திருக்கும் பாலாஜி சக்திவேல் ஜன்னல் அதிரச் சிரிக்கிறார். ''திருப்பதி பிரதர்ஸுக்காக இப்போ 'வழக்கு எண் 18/09’ பண்ணிட்டு இருக்கேன். ஜனவரியில் ரிலீஸ். நண்பர்களுக்குப் படம் பண்றதுதான் வசதி. இல்லேன்னா... சிலர், 'எனக்குக் காதல் மாதிரியே ஒரு படம்வேணும்’னு தான் ஆரம்பிப்பாங்க. ஒண்ணுபோலவே இன்னொண்ணையும் செய்ய... சினிமா ஒண்ணும் புரோட்டாக் கடை இல்லையே.

சினிமா பிரதர்ஸ்! - டைரக்டர்ஸ் ஸ்பேஷல்

இங்கே படைப்பாளிகளுக்கு முதல் தேவை, சுதந்திரம். ஒரு கிரியேட்டரே தயாரிப்பாளரா இருக்கும்போது, இந்த சுதந்திரம் ரொம்ப இயல்பாக் கிடைக்குது. உண்மையைச் சொல்லணும்னா, 'வழக்கு எண் 18/09’ படத்துக்கு லிங்குசாமிகிட்ட பணம் வாங்கி, என் சொந்தப் படம் மாதிரியே எடுத்துட்டு இருக்கேன். ஒரு சின்ன கரெக்ஷன்கூட லிங்கு சொல்றது இல்லை. 100 சதவிகித சுதந்திரம். இதுதான் ஓர் இயக்குநருக்கு முதல் தேவை.

நீங்க நல்லா யோசிச்சுப் பாருங்க... ஒரு கேனான்-5 ஸ்டில் கேமராவை வெச்சு நான் படம் எடுத்துட்டு இருக்கேன். மற்ற தயாரிப்பாளரா இருந்தா, 'இது என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு?’ன்னு சொல்லிடுவாங்க. ஆனால் லிங்குசாமி, 'நீங்க பண்ணுங்க’ன்னார்!'' என்ற பாலாஜி சக்திவேலின் பேச்சுக்குப் புன்னகைக்கிறார் லிங்குசாமி.

''நான் 'ரன்’ முடிச்ச நேரத்தில், என்கிட்ட பாலாஜி சக்திவேல் சார் 'காதல்’ கதையைச் சொன்னார். 'எனக்கு ஒரு கேமரா இருந்தாப் போதும் லிங்கு. எங்கேயாவது கும்பகோணம் பக்கம் போயி, கிடைக்கிற முகங்களை வெச்சுப் படத்தை எடுத்துட்டு வந்துடுவேன்’னு சொன்னார். 'நானே புரொடியூஸ் பண்றேன்’னு சொன்னேன். ஆனால், பிறகு 'ஜி’ படத்தில் நான் சிக்கிக்கிட்டேன். இப்பவும் 'காதலை’ மிஸ் பண்ண வருத்தம் எனக்கு இருக்கு. அவர் 'திருப்பதி பிரதர்ஸ்’க்குப் படம் பண்றதில் நிஜமாவே எனக்குப் பெருமை. அவர் சொன்னதுபோல ஒரு கிரியேட்டருக்கு சுதந்திரம் எவ்வளவு முக்கியம்னு எனக்கு நல்லாத் தெரியும்.

சினிமா பிரதர்ஸ்! - டைரக்டர்ஸ் ஸ்பேஷல்

நான் 'ஆனந்தம்’ பண்ணும்போது, என் காதுபடவே 'வானத்தைப்போல’ ரீ-மேக்னு பேசிக்குவாங்க. நான் எதையும் கண்டுக்கலை. படைப்பு மீது நாம் வெச்சிருக்கும் நம்பிக்கைதான் முக்கியம். அதனால்தான் 'மைனா’ பார்க்காமலேயே, அதைப்பற்றிக் கேள்விப்பட்டு, பிரபு சாலமனை அடுத்த படத்துக்கு புக் பண்ணினேன். வரிசையான தோல்விகளைத் தாங்கிக்கிட்டு, மறக்க முடியாத ஒரு வெற்றிப் படம் கொடுத் திருக்கிறார் பிரபு. எல்லாக் கேள்விகளுக்கும் அதான் ஒரு கிரியேட்டரின்  பதில். இன்னிக்கு அவர் தமிழ் சினிமாவின் புது ஹீரோவா இருக் கார்!'' என்றதும், பிரபு சாலமன் நிமிர்ந்து, அமர்ந்து பேசுகிறார்.

''நான் 'மைனா’ போஸ்ட் புரொடக்ஷன் முடிச்சு, வியாபாரத்துக்காகப் போராடிட்டு இருந்த சமயத்தில்தான் லிங்குசாமி சார் கூப்பிட்டு, அடுத்த படம் பண்ணச் சொன்னார். இப்போ வரை என்ன கதைன்னு எனக்கும் தெரியாது. அவரும் கேட்கலை. 'மைனா’ கதையை எந்தத் தயாரிப்பாளரிடமும் சொல்லி ஓ.கே. வாங்கி இருக்க முடியாது. ஏன்னா, அது முழுக்க முழுக்க சவுண்ட், மியூஸிக், காட்சி, மௌனம், உணர்வு என்று நகர்கிற கதை. அதை விஷுவலா எடுத்துத்தான் காட்ட முடியும். அதனால்தான் நான் 'ஷாலோம் ஸ்டுடியோ’ன்னு சொந்த கம்பெனியில் மைனாவை எடுத்தேன். இப்போ அடுத்த படத்தின் கதைக்காக வட இந்தியாவின் அறியப்படாத

பிரதேசங்கள் அத்தனைக்கும் ஒரு பயணம் போறேன். நம்ம காலடியில் தேனிக்குப் பக்கத்தில் இருந்த குரங்கணியே நமக்குப் புதுசா இருக் கிறப்போ... இவ்வளவு பெரிய இந்தியா வில் இன்னும் எவ்வளவு இடங்கள் இருக்கும்? அதைப் பின்னணியா வெச்சு அழுத்தமா ஒரு கதை சொல்லப் போறேன்!'' என்கிறார் பிரபு சாலமன்.

''இதோ மிஷ்கின்... இந்த வருடத்தின் பெஸ்ட் ஆக்டர் அவார்டு வாங்கிடுவார்போல!'' என லிங்குசாமி சொல்ல, தலை சாய்த்துச் சிரிக்கிறார் மிஷ்கின்.

''உண்மையைச் சொல்லணும் என்றால், ஓர் இயக்குநர் எல்லா நேரமும் கதையைப்பற்றியே யோசிக் கிறான். ஒரு நடிகனாக இருப்பதால், வாழ்நாள் அஞ்சு வருஷம் அதிகரிக்கும். ஆனா, ஓர் இயக்குநராக இருப்பதால் அவனது வாழ்நாள் அஞ்சு வருஷம் குறையும்.

முன்னாடி எல்லாம் ஒரு சினிமா பழசாக கொஞ்ச நாள் பிடிக்கும். இப்போ உடனுக்குடனே பழசாகிடுது. பிடிச்சு இருந்தா... மக்கள் கொண்டாடுறாங்க. பிடிக்கலைன்னா... தயவுதாட்சண்யம் இல்லாமத் தூக்கி வீசிடுறாங்க.

சினிமா பிரதர்ஸ்! - டைரக்டர்ஸ் ஸ்பேஷல்

கதை சொல்ற பாட்டிகள் யாரும் இப்போ இல்லை. நானெல்லாம் ஒரு பாட்டிகிட்ட கதை கேட்டு 20 வருஷம் ஆச்சு. இன்னிக்கு சினிமா மட்டும்தான் கதை சொல்லிட்டு இருக்கு. ஒரு தியேட்டருக்குள் என்னை மதிச்சு ரெண்டரை மணி நேரம் உட்காரும் ரசிகனுக்கு முதலில் நான் மரியாதை பண்ணணும். தன் நேரத்தை, பணத்தைச் செலவு பண்ணி, தியேட்டருக்கு வர்ற ரசிகனால்தான் சினிமா உயிர் வாழுது. அந்த பொறுப்பு உணர்வு இயக்குநருக்கு இருக்கு. அதனால்தான் எங்களுக்கு பிரஷரும் அதிகமா இருக்கு. லிங்குசாமி மாதிரி கிரியேட்டருக்குப் படம் பண்ணும்போது, அந்த பிரஷர் சந்தோஷமா உருமாறிடும். ஆர்யாவை வெச்சு ஒரு ஸ்டைலிஷ் ஆக்ஷன் படம் பண்ணப்போறேன். இன்னும் பேர் வைக்கலை. ஆனால், கதை முழுமையா தயாரா இருக்கு. ஒரு புது சினிமா லாங்வேஜ் டிரை பண்ணிப் பார்க்கப் போறேன். நான் எழுதிய திரைக் கதை யிலேயே இதுதான் சிறந்ததுன்னு நினைக்கிறேன்!'' என்கிறார் மிஷ்கின், தன் கறுப்புக் கண்ணாடியைச் சரிசெய்தபடி.

மறுபடியும் பேசத் தொடங்கும் லிங்குசாமி, ''இதை எல்லாம் தாண்டி நாங்க எல்லோருமே நண்பர்கள். அதிலும் பாலாஜி சார், தயவு தாட்சண்யமே இல்லாமல் முகத்துக்கு நேராக குறைகளைச் சுட்டிக்காட்டுவார். 'காதல்’ படத்தில் அந்த சித்தப்பா கேரக்டருக்கு 'உண்மையான ஊனமுற்றவர் ஒருவரைப் பயன்படுத்துங்க’ன்னு

சினிமா பிரதர்ஸ்! - டைரக்டர்ஸ் ஸ்பேஷல்

நான்தான் சொன்னேன். அதுவே என் 'சண்டைக் கோழி’யில் தலைவாசல் விஜய்யை ஊனமுற்றவரா நடிக்கவெச்சிருப்பேன். 'எனக்கு மட்டும் சொன்ன? நீயும் பண்ணியிருக்கணும்ல?’ன்னு முகத்துக்கு நேராக் கேட்டார். அதான் நட்பு!  

இவங்க எல்லோரிடமும் கதைக்காக நான் பேசுவதால் நான்தான் தயாரிப்பாளராத் தெரியுறேன். உண்மையில், 'திருப்பதி பிரதர்ஸ்’ மூலமா இந்தப் படங்களைத் தயாரிக்கிறது என் தம்பி சுபாஸ் சந்திரபோஸ். பாலாஜி சக்திவேல், மிஷ்கின், பிரபு சாலமன்... மூன்று பேரும் இப்போ 'திருப்பதி பிரதர்ஸில்’ இணைஞ்சிருக்காங்க. தமிழ் சினிமாவில் நான் மதிக்கும் எல்லா இயக்குநர்களையும் இதில் சேர்க்கணும் என்பதுதான் என் ஆசை!'' - லிங்குசாமியின் கண்களில் மின்னுகிறது கனவு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு