Published:Updated:

விமர்சனம் : போடா போடி

விகடன் விமர்சனக் குழு

விமர்சனம் : போடா போடி

விகடன் விமர்சனக் குழு

Published:Updated:
##~##

திருமணம் முடிந்த பின்னும் ஈகோ உரச, 'போடா...’, 'போடி’ என்று பிரியும் காதலர்களின் கதை!

 சில சந்திப்புகளிலேயே காதலிக்கத் தொடங்கும் சிம்பு, வரலட்சுமி (அறிமுகம்)  திருமணம் முடித்து ஒரு குழந்தையும் பெற்றுக்கொள்கிறார்கள். அதன் பிறகான ஈகோ மோதல் இருவரையும் பிரிக்க, இணைந்தார்களா என்பதுதான் க்ளைமாக்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பார்த்துப் பழகிய பழைய கதை என்றாலும் நான்கைந்து  கேரக்டர்களை மட்டும் வைத்துக்கொண்டு, சின்னச் சின்னக் கலகல வசனங்களால் படத்தை ரசிக்கவைக்கிறார் அறிமுக இயக்குநர் விக்னேஷ் சிவன். வரலட்சுமி சல்சா ஆடுவதைத் தடுக்க, சிம்பு அவரைக் கர்ப்பம் ஆக்குவது, அது தெரிந்து பிரிந்து செல்லும் வரலட்சுமிக்கே பின்னர் சிம்பு டான்ஸ் பார்ட்னர் ஆவது, குத்து டான்ஸுக்கும் சல்சாவுக்கும் வித்தியாசம் தெரியாமல் சிம்பு தடுமாறுவது ஆகியவை படத்தின் ரசனை அத்தியாயங்கள்.

விமர்சனம் : போடா போடி

டம் முழுக்கவே சிம்பு செம க்யூட். 'எப்பவாவது பொய் பேசறவளைப் பார்த்திருக்கேன். ஆனா, எப்பவும் பொய் மட்டுமே பேசுறவளை இப்போதான் பார்க்கறேன்’ என வரூவை வாரும் போதும், 'அவன் எங்கல்லாம் கை வைக்கிறான்... எனக்குப் பத்திட்டு வருது’ என்று எகிறும்போதும் அசத்துகிறார். சிம்புவுக்கே வம்பு கொடுக்கும் கேரக்டரில் வரலட்சுமி அசத்தல் அறிமுகம். 'தொடுறப்பவே எனக்கு வித்தியாசம் தெரியும்!’  எனச் சதாய்ப்பதும் கோபத்தில் டாய்லெட்டில் வீசிய திருமண மோதிரத்தைப் பிறகு தேடி எடுக்கும்போதும் பொண்ணு நடிப்பில் ஓ.கே. (கரகரக் குரல்கூட கேட்கக் கேட்க வசீகரித்துவிடு கிறது). ஆனால், சிம்புவைவிட 'பல்க்’ ஆகத் தெரியுதே பொண்ணு!

படம் முழுக்க சிரிசிரி மேளா நடத்திஇருப்பவர் 'விடிவி’ கணேஷ். 'மங்களகரமா இருந்த என் வீட்டை இப்படி மகாபலி புரம் கெஸ்ட் ஹவுஸ் மாதிரி மாத்திட்டானே!’ எனப் புலம்புவதும், 'கல்யாணம் ஆகுற வரை பொண்ணுங்க ஜலக் முலக் கலக்னு இருப்பாங்க. கல்யாணம் ஆகிட்டா பொலக்னு ஆகிடுவாங்க’ என எக்ஸ்பிரஷன் வைத்துச் சொல்வதும், சிம்புவுக்கு டகால்டி ஐடியாக்கள் சொல்வதுமாகக் கரகரக் குரலால் கலகலக்கவைக்கிறார். 'இவ்ளோ விஷயம் இங்கே ஓடிட்டு இருக்கு. ஷகிலா படம் பார்த்துட்டு இருக்கியா?’ என்று கணேஷை சிம்பு போட்டுக்கொடுப்பதுமாக இருவருக்குமான காமெடி கெமிஸ்ட்ரி... பம்பர் லாட்டரி!  

விமர்சனம் : போடா போடி

ரசனை வசனங்கள், கலகல காமெடி தவிர படத்தில் வேறு என்ன பாஸ் இருக்கிறது? சிம்புவின் வசதிபற்றி எதுவும் விசாரிக்காமலேயே அவரைத் திருமணம் செய்துகொள்ளும் வரூ, வருடம் முழுக்க டான்ஸ் மட்டுமே ஆடிக்கொண்டு இருக்கிறார். லண்டன் கலாசாரத்தில் 'ஃப்ரீக்கி’ ஆக வளர்ந்த சிம்பு, வரூவைக் கைபிடித்ததும் 'தமிழ் கலாசாரக் காவலன்’ அவதாரம் எடுத்து,  நமக்கு காதில் ரத்தம் வரும் அளவுக்குப் பேசிக்கொண்டே இருப்பது என்ன நியாயம்? அதிலும் முதல் பாதி முழுக்க சிம்புவும் வரூவும் பேசிக்கொண்டே இருக்கிறா... ஆவ்வ்வ்வ்!  

'போடா போடி..’ பாடலிலும் சல்சாநடனத்தின் போது ஒலிக்கும் பின்னணி இசையிலும் செம ஸ்கோர் செய்கிறது தரண்குமாரின் பின்னணி இசை.

சில செல்லச் சண்டைகள் ரசிக்கவைக்கும். 'போடா போடி’ அப்படி ஒரு சண்டை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism