Published:Updated:

"ரஜினிகிட்ட அநியாயத்தைத் தட்டிக் கேட்டேன்!"

க.ராஜீவ்காந்திபடங்கள் : பொன்.காசிராஜன்

"ரஜினிகிட்ட அநியாயத்தைத் தட்டிக் கேட்டேன்!"

க.ராஜீவ்காந்திபடங்கள் : பொன்.காசிராஜன்

Published:Updated:
##~##

"சின்ன வயசுல இருந்தே நான் பயங்கர சினிமா பைத்தியம். புரியுதோ, புரியலையோ... எல்லாப் படங் களையும் பாத்துருவேன். வீட்டுல' சினிமாவா சோறு போடப் போகுது’னு திட்டுவாங்க. ஆனா, இப்ப சினிமாதாங்க சோறு போடுது!'' என்கிறார் கும்பகோணத்தில் இருந்து வந்து காமெடி கும்பமேளா நடத்தும்  'லொள்ளு சபா’ சுவாமிநாதன்.

''சினிமாதான் இனி வாழ்க்கைனு, சென்னை வந்து அடையாறு ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல சேர்ந்தேன். அங்கே படிச்சுட்டே நாடகங்களில் நடிக்க ஆரம்பிச்சேன். படிச்சு முடிச்சு வாய்ப்பு தேடி அலைஞ்சுட்டு இருந்தப்ப, 'நான் சிகப்பு மனிதன்’ல ஒரு காலேஜ் ஸ்டூடன்ட் ரோல் இருக்குனு கூட்டிட்டுப் போனாங்க. அங்கே போய் நின்ன பிறகுதான் தெரியுது, அது ரஜினி சார் படம்னு. முதல் படமே ரஜினிகூட நடிக்கிறோமேனு தலைகால் புரியாத சந்தோஷம். புரொஃபசர் ரஜினிகிட்ட 'நாட்டுல நடக்குற அநியாயத்தை எல்லாம் கடவுள் பார்த்துக்கிட்டேதான் இருப்பாரா?’னு பசங்க விவாதம் பண்ற சீன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"ரஜினிகிட்ட அநியாயத்தைத் தட்டிக் கேட்டேன்!"

என்னை முதல் பெஞ்ச்சுல உக்காரவெச்சாங்க. அவர்கிட்ட கேள்வி கேக்கிற மாதிரி வசனமும் சொல்லிக்கொடுத்தாங்க. திடீர்னு ஒரு அசோசியேட் வந்து, அவருக்குத் தெரிஞ்ச ஆளை முதல் வரிசைல உக்காரவெச்சிட்டு என்னை அடுத்த பெஞ்ச்சுக்கு அனுப்பிட்டாரு. கொஞ்ச நேரத்துல இன்னொரு அசிஸ்டென்ட் வந்து அதே மாதிரி பண்ணாரு. இப்படியே கடைசி பெஞ்ச்சுக்குப் போயிட்டேன். டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வந்தாரு. முதல் பெஞ்ச் பையன்கிட்ட வசனம் பேசச் சொன்னாரு. அவன் சரியாப் பேசலை. அதே மாதிரி அடுத்தடுத்த வரிசைல உக்காந்திருந்த பசங்களும் சரியாப் பேசலை. கோபமாகிச் சத்தம் போட ஆரம்பிச்சுட்டாரு எஸ்.ஏ.சி. அப்ப நான் எந்திரிச்சு, 'சார்... நான் பேசிக்காட்டவா?’னு கேட்டேன். பேசச் சொன்னார். அந்த நீளமான வசனத்தை ஒரே மூச்சுல பேசிக் காமிச்சு, திரும்ப முதல் பெஞ்ச்சுக்கு வந்தேன். ரொம்பப் பெரிய வசனம் பேசிட்டான்னு நினைச்சோ என்னவோ, சம்பளமா 500 ரூபா கொடுத்தாங்க.

வாய்ப்பு தேடும் படலத்தில் ஒரு முறை இயக்குநர் மகேந்திரன் சாரைப் போய்ப் பார்த்தேன். 'அவர் உடனே நடிச்சுக்காட்டச் சொல்லுவாரு. தயாராப் போ’னு நண்பர்கள் சொன்னதால முறுக்கா போய் நின்னேன். ஏதோ சின்சியரா எழுதிக்கிட்டு இருந்த மகேந்திரன் சார் என்னைப் பார்த்ததும், 'மேல வாப்பா’னு சொல்லிட்டு உள்ளே போயிட்டாரு. மாடிக்குக் கூப்பிட றாரு. அங்கே நடிச்சுக் காட்டச் சொல்லுவாருன்னு நினைச்சு மேலே போய்ப் பார்த்தா மாடி பூட்டியிருந்துச்சு. கீழே இறங்கி வந்து, 'சார்... மாடி பூட்டியிருக்கு’னு சொன்னேன். ஆச்சர்யமா 'எதுக்குப்பா மாடிக்குப் போன?’னு கேட்டாரு. 'நீங்கதானே சார் மேல வரச் சொன்னீங்க’னு நான் சொன்னதும் வெடிச்சுச் சிரிச்சவர், 'மே மாசம்தான் ஷூட்டிங் ஆரம்பிக்கிறேன். அதனால மேல வான்னு சொன்னேன்ப்பா’ன்னாரு. வழிஞ்ச அசடைத் துடைச்சுக்கிட்டே வந்துட்டேன்.

"ரஜினிகிட்ட அநியாயத்தைத் தட்டிக் கேட்டேன்!"

ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல படிச்சுட்டு இருந்தப்பவே 'ஒரு தலை ராகம்’ படத்துல நடிக்கும் வாய்ப்பு வந்து மிஸ் ஆகிட்டது. அது என்ன கேரக்டர் தெரியுமா? கல்யாணம் ஆன பிறகும், கல்லூரிக்குப் போற கேரக்டர். 'சின்னப் பூவே மெல்லப் பேசு’ படத்துலயும் அதே கேரக்டர்ல நடிச்சேன். அப்பவே கல்யாணம் ஆகியும் கல்லூரி போற சீனியர் மாணவனா நடிச்சாலும் அது பளீர்னு ரீச் ஆனது, 'பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்துலத்தான். அந்த கேரக்   டர்ல நான் நடிக்க சந்தானத்தோட சிபாரிசுதான் காரணம். 'லொள்ளு சபா ஆட்களைக் கொண்டுவராதீங்க. தியேட்டர்லயும் டி.வி. ஃபீல் வந்துடும்’னு சந்தானத்துக்கிட்ட பலர் சொல்லியிருக்காங்க. ஆனா, சந்தானம் அதெல்லாம் கண்டுக்கலை. 'ஓ.கே. ஓ.கே’-ல சாமியாரா நடிச்சப்ப ரொம்ப சின்ன ரோலா இருக்கேன்னு நினைச்சேன். ஆனா, அந்த ஒரு சீனை டிரெய்லர் ஆக்கிப் பரபரப்பாக்கிட்டாங்க. அப்புறம் 'மனம் கொத்திப் பறவை’க்கு எழில் சார் டிரெய்லருக்கு வேணும்னு அதுல மட்டுமே என்னை நடிக்கவெச்சார். ஆக, ஒரு சீன் நடிகன்கிறது போயி இப்ப டிரெய்லர் ஆக்டர் ஆகிட்டேன். 'படிக்காதவன்’ல சுராஜ் சார், 'ஏழு சீன் வர்ற மாதிரி ஒரு கேரக்டர் இருக்கு. ஒரே ஒரு சீன் மட்டும் வர்ற மாதிரி ஒரு நச் கேரக்டர் இருக்கு. எது வேணும்?’னு கேட்டாரு. நச் கேரக்டர்தான் வேணும்னு கேட்டு வாங்கினதுதான் தனுஷ் பொண்ணு பார்க்க வர்ற அருக்காணிக்கு அப்பா கேரக்டர்.

நாடகங்கள்ல பரபரப்பா இருந்த நேரம் 'மலையூர் மம்பட்டியான்’ படத்துல நடிக்கக் கூப்பிட்டாங்க. அப்ப பம்பாய்ல ஒரு நாடகத்துக்குப் போக வேண்டியதால, அந்தப் படத்துல நடிக்க முடியலை. 'சரி... சின்ன ரோல்தானே’னு விட்டுட்டேன். அதுல செந்தில் சார் நடிச்சார். மம்பட்டியானையே காட்டிக்கொடுக்கற பவர்ஃபுல் கேரக்டர். அந்தப் படம் ரிலீஸாகவும் செந்தில் சார் பிரபலம் ஆகிட்டார். நான் படம் பார்த்துட்டு அழுதுட்டேன். அப்புறம் ஒரு காலத்துல சான்ஸே இல்லாம சும்மா படுத்துக்கிடந்த நேரத்துல 'அருணாச்சலம்’ பட சான்ஸ் வந்துச்சு. சந்தோஷத்துல எனக்கு சீன் இல்லைன்னாலும் ரஜினி சாருக்காகத் தினமும் ஷூட்டிங் ஸ்பாட் போய் நின்னுருவேன். ஒவ்வொரு நாளும் என்னைக் காமிச்சு சுந்தர் சார்கிட்ட 'சாமிநாதன்கிட்ட சொல்லாதீங்க’னு ரஜினி சார் ஏதோ ரகசியம் பேசிட்டே இருப்பார். அது என்னன்னு தெரியாமக் குழம்பிட்டே இருந்தேன். கேட்டாலும் யாரும் சொல்லலை. அந்த சீன்ல நடிச்சப்பதான் தெரிஞ்சது, க்ளைமாக்ஸ்ல ரஜினி சாரைக் காட்டிக்கொடுக்கிற கேரக்டர் என்னதுனு. அதைத்தான் சொல்லா தீங்கனு சஸ்பென்ஸ் வெச்சிருக்கார் சூப்பர் ஸ்டார். அந்தப் படத்துக்கு அப்புறம் சினிமா, டி.வி-னு என் வாழ்க்கையில் பரபரப்பான ரெண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பிச்சது.

"ரஜினிகிட்ட அநியாயத்தைத் தட்டிக் கேட்டேன்!"

'லொள்ளு சபா’ சமயத்துல ஒரு தடவை மனோகர் வீட்டுக்குப் போயிருந்தோம். ஒரு சம்பிரதாயத்துக்குக்கூட, 'காபி சாப்பிடறீங்களா?’னு மனோகர் கேட்கலை. நாங்களும் அதைக் கண்டுக்காமப் பேசிட்டு இருந்தோம். ரொம்ப நேரம் அவரைக் கலாய்ச்சுட்டுக் கிளம்புன சமயம், மனோகர் ஒரு டயலாக் விட்டார் பாருங்க... 'மொதமொத வீட்டுக்கு வந்துருக்கீங்க. கொஞ்சம் யூரினாவது போயிட்டுப் போங்க’! இப்ப வரைக்கும் ஜீவாவும் சந்தானமும் அதைச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பாங்க. 'இல்லப்பா... ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தீங்கள்ல. பாத்ரூம் ஏதும் போறீங்களானு கேக்கறதுக்காக அப்படிக் கேட்டேன்’னு சமாளிச்சாரு மனோகர்.

லொள்ளு சபாவுக்கு முன்னாடியே எம்.ஜி.ஆர்., சிவாஜி மாதிரிலாம் மிமிக்ரி பண்ணுவேன். 'மனசுக்குள் மத்தாப்பு’ ஷூட்டிங்ல பிரபு சார் முன்னாடியே சிவாஜி மாதிரி மிமிக்ரி பண்ணேன். 'கலக்குற... ஆனா, வெளியே போய் பண்ணே... பிச்சுடுவேன்’னு செல்லமா மிரட்டினாரு. ஒருமுறை 'லொள்ளு சபா’ல 'கௌரவம்’ படத்தை உடான்ஸ் பண்ணி 'கௌரதை’னு எடுத்தோம். நல்லா ஹிட் ஆச்சு. ஆனா, சிவாஜி ரசிகர்கள் கொந்தளிப்பாங்கனு நினைச்சோம். ஆனா, பாராட்டுகள்தான் அதிகம். 'அன்பே வா’ படத்தை உட்டாலக்கடி அடிக்கப்போறோம்கிற தகவல் எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிருச்சு. பயங்கர மிரட்டல்லாம் வந்துச்சு. ஆனா, அவங்களே நிகழ்ச்சியைப் பார்த்துட்டு, 'தலைவரைக் கலாய்ச்சுடுவீங்களோனுதான் பயந்தோம். நல்லா இருந்துச்சு’னு சொன்னாங்க. அப்படிலாம் மிரட்டல் வர்றப்போ வீட்டுக்கார அம்மாதான் ரொம்பப் பயப்படுவாங்க.

"ரஜினிகிட்ட அநியாயத்தைத் தட்டிக் கேட்டேன்!"

மனைவி ஷீலா இல்லத்தரசி. முதல் பொண்ணு பிறந்தப்ப என் அண்ணன், 'உன்கிட்ட என்ன இல்லையோ, அதையே பொண்ணுக்  குப் பேரா வை’னு சொன்னாரு. நான் ஐஸ்வர்யானு வெச்சேன். அப்புறம்தான் பட வாய்ப்புகள் நிறைய வந்துச்சு. ஐஸ்வர்யா இப்ப பத்தாவது படிக்கிறா. பையன் பிறந்தப்ப அதே அண்ணன், 'உனக்கு இப்ப என்ன வேணும்’னு கேட்டாரு. ஐஸ்வர்யம் வந்துடுச்சு. ஆனந்தம் வேணும்னு ஆனந்த்னு பேர் வெச்சேன். ஆனந்த் இப்ப ரெண்டாவது படிக்கிறார்.

சினிமால இப்பதான் கல்லூரி மாணவனா இருந்து புரொஃபசரா புரொமோஷன் ஆகியிருக்கேன். ஆனாலும், தமிழ் சினிமால முரளி, சார்லி, தாமுவுக்குப் பிறகு ரொம்ப மாமாங்கம் கல்லூரி மாணவனா நடிச்சது அடியேன்தான்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism