ஸ்பெஷல் -1
Published:Updated:

யூ டு பெல்லா!

பி.என்.அர்ச்சனா

##~##

லக இளைஞர்களை ஈர்த்த 'வேம்பயர்’ சினிமா அதன் க்ளைமாக்ஸை எட்டிவிட்டது. 'ட்வைலைட்’ - மனித ரத்தம் குடிக்கும் வேம்பயர் படம். படத்தின் ஹீரோ காந்தக் கண்ணழகன் ராபர்ட் பேட்டின்சன் டீன் டிக்கெட்டுகளையும், ஹீரோயின் ஹோம்லி ஏஞ்சல் கிறிஸ்டின் ஸ்டுவர்ட் பேச்சுலர் பசங்களையும் உலகம் முழுக்கக் கவர்ந்த அழகுச் செல்லங்கள்.

 மனிதப் பெண் பெல்லா, வேம்பயர் அழகன் எட்வர்ட் கல்லன்... இவர்களுக்கு இடையே காதல்... அதை எதிர்க்கும் வில்லன் வேம்பயர்கள் என்ற ஒரு வரிக் கதையைக் கிளைகள் பல விரிக்கவைத்து ஐந்தாம் பாகத்தில் முடித்திருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ஐந்தாம் பாகம் கலவையான விமர்சனங்களைக் குவித்தாலும் ஜேம்ஸ்பாண்ட் படத்தைக் காட்டிலும் வசூலைக் குவித்திருக்கிறது.

யூ  டு பெல்லா!

முதல் பாகம் மட்டுமே வேம்பயர் சுவாரஸ்யத்துக்காகப் படம் ரசிகர்களை ஈர்த்தது. அதற்குப் பிந்தைய பாகத்துக்கு எல்லாம் எட்வர்ட்-பெல்லா இடையிலான 'ஆன்-ஸ்க்ரீன்’, 'ஆஃப்-ஸ்க்ரீன்’ சங்கதிகள்தான் மைலேஜ். கதையில் தொடங்கிய அவர்களின் ரொமான்ஸ் நிஜ வாழ்கையிலும் அழகான, ரசிகர்கள் ஆராதிக்கும் காதலாக மாறியது. படத்தின் ஒரு பாகத்தில் கிறிஸ்டின் இன்னொருவர் மேல் பிரியம்கொள்வதாக அமைந்த கதைக்கு ஏக எதிர்ப்பு காட்டிய ரசிகர்கள், நிஜத்திலும் அதைப் பிரதிபலித்தார்கள். இடையில் ஓர் இயக்குநருடன் கிரிஸ்டின் டேட்டிங் சென்றதாகப் பரபரப்பு கிளம்ப... 'ராபர்ட்டுக் குத் துரோகம் செய்யாதே’ என்று ரசிகர்கள் கொந்தளிக்க, பகிரங்க மன்னிப்பு கேட்டார் கிறிஸ்டின். சின்னப் பிரிவுக்குப் பிறகு மீண்டும் சேர்ந்த ராபர்ட்-கிறிஸ்டின் ஜோடி இப்போது கோயிங் ஸ்டெடி.    

நிழலும் நிஜமுமாக ரொமான்ஸி வந்த எட்வர்ட் - பெல்லாவுக்கு நான்காம் பாகத்தில் திருமணம் செய்து வைத்தார்கள். 'எங்கே அவளைக் காயப்படுத்திவிடுவோமோ?’ என்ற பதற்றத்தில் தேனிலவில் பெல்லா வுடன் இணைய மிகவும் யோசிக்கிறான் எட்வர்ட். ஆனால், பெல்லா வற்புறுத்தலைத் தவிர்க்க முடியாமல் இணைய, கர்ப்பமடைகிறாள் பெல்லா. அசாதாரணமாக இரண்டே நாட்களில் பெல்லாவின் வயிறு பெருக்கிறது. 'ஒரு வேம்பயரின் கருவைச் சுமக்க வேண்டாம்’ என்ற அறிவுரைகளைக் கேட்டுக்கொள்ளாமல், கருவைச் சுமக்கிறாள் பெல்லா. பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டு மயக்க நிலைக்குச் செல்லும் பெல்லாவைக் காப்பாற்ற, தன் வேம்பயர் விஷத்தை அவள் நெஞ்சில் ஏற்றுகிறான் எட்வர்ட். அவள் கண் திறப்பதுடன் முடிந்த அந்தப் பாகத்தின் தொடர்ச்சியே இந்த க்ளைமாக்ஸ் பாகம்.  அபூர்வ சக்திகள் நிரம்பிய பெல்லாவின் குழந்தையை வில்லன்களிடம் இருந்து காப்பாற்றுவதே படம். பெல்லாவுக்கும் வேம்பயர் குணங்கள் தொற்றிக்கொள்ள, காடு, மலை, அருவிகளைத் தாண்டி சாகசம் செய்கிறாள் இந்த இறுதி பாகத்தில்.  

'எட்வர்ட் போல ஓர் அழகிய வேம்பயர் இருந்தால், அவன் என் ரத்தத்தைக் குடித்து உயிரை உறிஞ்சினால்கூடப் பரவாயில்லை’ என்று கிறங்கிக்கிடந்த பல லட்சம் ரசிகைகளுக்கு எட்வர்ட் ஒரு கனவுக் காதலன். இவர்களுக்கு ட்வைலைட் சீரிஸ் படங்கள் முடிவதில் இஷ்டமே இல்லை. படத்தில் பெல்லாவுடன் ராபர்ட்டுக்குத் திருமணம் நடந்ததற்கே, கடும் கண்டனங்களைப் பதிவுசெய்தவர்கள் இவர்கள்.

யூ  டு பெல்லா!

'இனி, ராபர்ட்- கிறிஸ்டின் காதல் அவ்வளவுதானா?’ என்ற கேள்விக்கு இருவரிடமும் எந்தப் பதிலும் இல்லை. ஆனால், கிறிஸ்டின் நடவடிக்கைகளில் மட்டும் அபார மாற்றம். இத்தனை வருடங்களாக 'ட்வைலைட்’ படத்தின் பாத்திரத்துக்கு ஏற்ப வெளியிடங்களிலும் சாத்வீகமாக, ஹோம்லி ஏஞ்சலாக வலம் வந்த கிறிஸ்டின்... இப்போது செம கிளாமர் ஆடைகளில் அசரடிக்கிறார். உள்ளாடைகள் தெரிவதுபோல, உச்சபட்சக் கவர்ச்சி வெளிப்படுவதுபோல ஆடைகள் அணிவது, நடிக்கும் படங்களில் 'டாப்லெஸ்’ காட்சிகள், ஏராள தாராளப் படுக்கையறை நெருக்கம் என டாப் கியரில் எகிறுகிறார். அதோடு, பத்திரிகையாளர் சந்திப்புகளில் வெளியிடும் ஒவ்வொரு ஸ்டேட்மென்ட்டும் பரபர பட்டாசு. அழகி சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ஸ்டேட்மென்ட் இது... ''இந்திப் படம் ஒன்றில் ஹ்ரித்திக் ரோஷனுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷப்படுவேன். கம்பீரமான அழகன் அவர். அவரைப் போன்ற தோற்றத்துடனும் ராபர்ட்டினுடையதைப் போன்ற கண்களுடனும் எனக்கு ஒரு பையன் பிறந்தால் இன்னும் சந்தோஷப்படுவேன்!''

அடப் பாவமே, ஹாலிவுட்லயும் பசங்கதான்  பாவமா!