Published:Updated:

விமர்சனம் : நீர்ப்பறவை

விகடன் விமர்சனக் குழு

விமர்சனம் : நீர்ப்பறவை

விகடன் விமர்சனக் குழு

Published:Updated:
##~##

லங்கைப் பேரினவாத அரசின் கடற்படைத் துப்பாக்கிகளுக்குப் பலியாகி, வெறுமனே செய்தியாக மட்டுமே கடந்துபோன பல நூற்றுக் கணக்கான மீனவர்களில் ஒரு பறவை, இந்த 'நீர்ப்பறவை’!

 குடிநோய் என்னும் கொடுமை, சிறுபான்மை யினரின் மனத்துயர், மதநல்லிணக்கம், மீனவர் கள் வாழ்வியலில் தோய்ந்த சடங்குகள், விதிகள், 'இந்திய’ மீனவர் என்று குறிப்பிடப்படாத தமிழக மீனவர்கள் மீது ஏவிவிடப்படும் படுகொலைகள் எனப் பல மதிப்பீடுகளை ஒரே படத்தில் பேச முயன்றதற்காக இயக்குநர் சீனுராமசாமிக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்.

ஈழத்தில் இருந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்த சிறுவன் விஷ்ணு, தமிழக மீனவத் தம்பதிக்குத் தத்துப்பிள்ளை ஆகிறான். குடிநோய்க்கு அடிமையாகிப் பிச்சை கேட்டும் ஏமாற்றியும் காசு வாங்கிக் குடித்துத் திரியும் 'நீர்’ப்பறவையாக இருப்பவனை நெஞ்சுரம் கொண்ட மீனவனாக மாற்றுகிறது சுனைனாவின் காதல். ஆனால், அவன் வாழ்க்கை யின் மகிழ்ச்சி நீரோட்டத்தைச் சில தோட்டாக்களால் இலங்கைக் கடற்படை இல்லாமல்

விமர்சனம் : நீர்ப்பறவை

ஆக்கிவிடுகிற இனத் துயரம்தான் 'நீர்ப்பறவை’யின் சிறகுகள் உதிர்ந்த கதை.

ஓர் அசல் குடிகாரனாக மாறி சலம்பித் திரியும் கடற்புரத்து இளைஞனுக்கான முகவெட்டும் உருவமும் அட்டகாசமாகப் பொருந்துகிறது விஷ்ணுவுக்கு. சரக்கு மயக்கத்தில் சலம்புவதும் காதல் மயக்கத்தில் கிறங்குவதுமாக அசத்துகிறார். கிறிஸ்துவப் பழக்கங்களில் ஊறிப்போனவராக ஜெபிப்பது ஆகட்டும், குடிகார விஷ்ணுவைக் கண்டு 'சாத்தானே... அப்பாலே போ’ என்று விலகுவது ஆகட்டும்... எஸ்தராகவே மாறியிருக்கிறார் சுனைனா. வயதான எஸ்தராக வரும் நந்திதா தாஸ், ''விஷ்ணு இறந்ததை ஏன் அரசாங்கத்திடம் சொல்லவில்லை?'' என்று நீதிபதி கேட்கும்போது, ''சொன்னா மட்டும் என்ன பண்ணு வீங்க?'' என்று எழுப்புகிற கேள்வி, ஜீரணிக்க முடியாத நிதர்சனம்.

விஷ்ணுவின் அப்பா லூர்துசாமியாக வரும் 'பூ’ ராமு மகனைத் திருக்கைவால் கொண்டு வெளுப்பது, அதே மகன் திருந்தியதும் சமுத்திரக்கனியிடம் படகு செய்யச் சொல்லிச் சிபாரிசுக்காக நிற்பது, படகில் தன் பெயரைப் பார்த்துக் கண்ணீர்விடுவது என ஒரு பாசக்கார மீனவரின் பாத்திரத்தில் உப்பு நீராக நிறைகிறார்.

'நீங்க பெரிய கூட்டம் போட்டா, அது போராட்டம். ஆனா, நாங்க நாலு பேர் கூடினா, அதுக்குப் பேர் தீவிரவாதமா?’, 'மீனவனுக்கு ஒரு முப்பது தொகுதி இருந்தா, அவன் குரலும் ஓங்கி ஒலிக்கும்யா’ என்று ஆங்காங்கே அரசியல் பேசுகிறார் சமுத்திரக்கனி. சாராயம் விற்கும் வடிவுக்கரசி, பங்குத் தந்தை அழகம்பெருமாள், 'உப்பளம்’ இமான் ஆகியோர் படத்தின் நல் மன மாந்தர்கள்.  

விமர்சனம் : நீர்ப்பறவை

'மீனுக்கு சிறு மீனுக்கு’, 'பற பற பற பறவை ஒன்று’, 'தேவன் மகளே’ என்று வைரமுத்துவின் வரிகளை ஈர இசையுடன் இதயக் கரை சேர்க்கிறது ரகுநந்தனின் இசை. நெய்தல் நிலத்தை, கடலின் நிறங்களை, உயிர்களின் ரணங்களைப் பதிவு செய்திருக்கிறது பாலசுப்ரமணியெம்மின் ஒளிப் பதிவு.

படத்தின் முற்பாதியை நெடுக ஆக்கிரமிக்கும் குடிக் காட்சிகளின் சில சிறகுகளைத் தயக்கமின்றி வெட்டியிருந்தால் இன்னமும் அழகாக இருந்திருக்கும் பறவை.

இயற்கைச் சீற்றங்கள் உலகின் எல்லா மீனவர்களும் சந்திக்கும் பிரச்னை. ஆனால், இலங்கைக் கடற் படையின் தாக்குதல் நம் மீனவர்கள் மட்டுமே சந்திக்கும் பிரச்னை என்பதை அழுத்தமாகச் சொன்னதில்தான் உயரே உயரே பறக்கிறது 'நீர்ப் பறவை’!