Published:Updated:

"'மொழி' ஜோதிகா... 'அபியும் நானும்' அப்பா... இங்கேதானே இருக்காங்க!"

பாரதி தம்பி

##~##

த்தமின்றி அடுத்த படத்தை முடித்தேவிட்டார் 'மொழி’ ராதா மோகன். கடத்தல் சினிமாவில்கூட மென்ரசனை புதைப்பவர், இப்போது கிராமத்தைக் களமாகக்கொண்டு 'கௌரவம்’ படைத்திருக்கிறார்.    

 ''சிட்டில இருந்து தடக்குனு கிராமத்துக்குத் தாவிட்டீங்க... என்ன ஐடியா?''

''இதுவரை நான் பண்ண அஞ்சு படங்களில் தொடாத சப்ஜெக்ட் தொடணும்னு ஆசை. அதுவும் இப்பல்லாம் கிராமங்கள் முன்ன மாதிரி இல்லை. யார் வந்தாலும் கூப்பிட்டு உட்காரவெச்சு, உபசரிச்சு சாப்பாடு போடுற கலாசாரம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சுட்டு வருது. அப்படி இப்போதைய கிராமங்களின் யதார்த்தத்தை, அசலான முகத்தை இந்தப் படத்துல சொல்லியிருக்கோம்.

கிராமங்களுக்கு அவலமான இன்னொரு முகம் இருக்கு. நகரத்தில் இருந்து கிராமத்துக்குப் போகும் சில இளைஞர்கள், அந்த அவலத்தைப் பார்த்து என்ன செய்யுறாங்கனு பரபரப்பாப் பண்ணியிருக்கோம்.

"'மொழி' ஜோதிகா... 'அபியும் நானும்' அப்பா... இங்கேதானே இருக்காங்க!"

பொதுவா, இளைஞர்கள் பொறுப்பு இல்லாம ஃபேஸ்புக், ட்விட்டர்னு நேரத்தை வீணாக்கிறதாச் சொல்றாங்க. ஆனா, அதே இளைஞர்கள்தான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் எந்தச் சுயநலமும் இல்லாம திரண்டு நின்னாங்க. அதில் வெற்றி அடைஞ்சாங்களா, இல்லையாங்கறது ஒரு பக்கம்... ஆனா, அநீதிக்கு எதிராத் திரண்டு வந்த இளைஞர்களின் எழுச்சி முக்கியமானது. அதெல்லாம் இந்தப் படத்தில் பிரதிபலிக்கும்!''

''முழுக்க அறிமுகங்களை நம்பியே களம் இறங்கிட்டீங்களா?''

''தெலுங்கு சினிமா ஹீரோ அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஸ்தான் ஹீரோ. சென்னையில் வளர்ந்த பையன். அதனால, தமிழ், தெலுங்குனு ரெண்டு மொழிகளும் தெரியும். ஹீரோயின் யாமி கௌதமை எக்கச்சக்க விளம்பரங்களில் பார்த்திருப்பீங்க. 'விக்கி டோனர்’ என்ற இந்திப் படத்தில் அவங்க நடிப்பு பிடிச்சது. அப்படியே கூட்டிட்டு வந்துட்டோம். அப்புறம்... இருக்கவே இருக்கார் பிரகாஷ்ராஜ். கிராமத்துப் பெரிய மனுஷன் கேரக்டர். அவர் நடிப்பே மொத்தப் படத்தையும் தூக்கிச் சுமக்கும். பி.சி.ஸ்ரீராமின் மாணவி, 'அபியும் நானும்’ பட ஒளிப்பதிவாளர் ப்ரீத்தாதான் இந்தப் படத்துக்கும் கேமரா. ஹோம்லி டீம். திருப்தியா வேலை பார்த்துட்டு இருக்கோம்!''

''உங்க படங்களின் பாத்திரங்கள் பெரும்பாலும் மென்மையாவே இருக்காங்க. ஆனா, யதார்த்தத்தில் அப்படி எல்லாரும் சாஃப்ட்டாவா இருக்காங்க?''

''அப்படிப் பார்த்தா யதார்த்தத்தில் யாராவது பறந்து பறந்து அடிக்கிறாங்களா? அப்படி இல்லையே! என் படங்களின் கதையும் கேரக்டர் களும் இங்கே வாழ்றவங்கதான்.  நான் கற்பனையில் யாரையும் உருவாக்கலை. 'மொழி’ ஜோதிகா மாதிரியான பெண்கள் இங்கே இல்லையா? 'அபியும் நானும்’ அப்பாவை யாரும் பார்த்தது இல்லையா? 'பயணம்’ டிராஜெடி நாடே தெரிஞ்சு நடந்ததுதானே? 'என் படம் சாஃப்ட்டா இருக்கணும்’னு திட்டம் போட்டு நான் கதை செய்றதில்லை!''

"'மொழி' ஜோதிகா... 'அபியும் நானும்' அப்பா... இங்கேதானே இருக்காங்க!"

''ஆனா, நல்ல விஷயங்களா யோசிச்சு, படம் முழுக்க அலங்காரம் பண்ணி நீங்க கொடுத்தாலும், ஒரு கமர்ஷியல் படத்துக்கான வருவாயை நெருங்க முடியலைங்கிறது உண்மைதானே... அந்த வருத்தம் உங்களுக்கு இருக்கா?''

''நிச்சயமா இல்லை. ஏன்னா, நான் என்ன செய்றேன்னு எனக்கு நல்லாத் தெரியும். வருமானத்தை மட்டும் கணக்குப் போட்டா, கடைசியில் சூடு போட்டுக்கணும். சினிமாவுக்குள்ள வரும் நிறையப் பேர் நல்ல கனவுகளோடதான் வர்றாங்க. ஆனா, இந்தப் போராட்டத்தில் 'கமர்ஷியல் சினிமா எடுத்தாவது சீக்கிரம் மேல வந்துடணும்’னு நினைச்சு தடம் மாறிப்போயிடு றாங்க. அது தப்பு. தன் படைப்பின் மீது நம்பிக்கைவைத்து, விடாப்பிடியா உழைக்கும்போது, அதுக்கான வெற்றி ஏதோ ஓர் இடத்தில் காத்திருக்கும்!''