2000-ம் ஆண்டு உலகம் அழிந்துவிடும் என்று கூக்குரலிட்டவர்கள் கொஞ்ச நாள் ரெஸ்ட்டுக்குப் பிறகு, 2012-ல் அழியப்போகிறது என்று அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்துவிட்டார்கள். தங்கள் வாதத்துக்கு வலு சேர்க்கும்விதமாக மாயன் காலண்டர், சுனாமி மற்றும் பூகம்பப் பேரழிவுகளை மேற்கோள் காட்டுகிறார்கள். இவர்கள் சொல்வதுபோல, உலகம் இந்த டிசம்பரோடு அழியப்போகிறது என்றால், பிரபலங்களின் அடுத்த கட்ட ஆபரேஷன் என்னவாக இருக்கும்?

ஜெயலலிதா: ''கடந்த கால இருண்ட ஆட்சியை முடிவுகட்டி மக்கள் ஒருமனதாக என்னைத் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த வேளையில் உலகம் அழியப்போகிறது என்று பூச்சாண்டி காட்டுபவர்களை, எனது தலைமை யிலான அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கும் என்பதை உணர்ந்த தமிழக மக்கள் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 என்ற வெற்றியை அளிக்கத் தயாராகிவிட்டார்கள். அப்படியே ஒருவேளை இந்த டிசம்பர் மாதத்தோடு உலகம் அழிந்தாலும், 2013 ஜூன் மாதத்துக்குள் மின் வெட்டை முழுமையாக நீக்கி, தமிழ்நாட்டை மின் மிகை மாநிலமாக்காமல் நான் ஓய மாட்டேன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!''
கருணாநிதி: ''ஒருவேளை உலகம் விரைவில் அழியப்போகிறது என்றாலும், இன்னும் மூன்று நாட்களில் அடுத்த டெசோ மாநாட்டினை நடத்திட கழகக் கண்மணிகள் தயாராக இருக்கிறார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். அந்த மாநாடு சிறப்பாக முடிந்தவுடன் மாநாட்டுத் தீர்மானத்தை எடுத்துக்கொண்டு தம்பி அழகிரியையும் துணைக்குத் தம்பி நேருவையும் ஐ.நா. சபையில் நைட் டியூட்டி பார்க்கும் வாட்ச்மேனிடம் சமர்ப்பிக்க நேரடியாக அனுப்பிவைப்பதென பேராசிரியரும் நானும் கலந்துபேசி முடிவெடுத்து உள்ளோம்!''

விஜயகாந்த்: ''மக்களே, '2022’ல உலகம் அழியப் போகுதுனு அமெரிக்காக்காரன் சொல்றான் (அருகில் இருக்கும் யாரோ ஏதோ சொல்ல முயல, கும்மாங்குத்து சத்தம் கேட்கிறது). அதைப்பத்தி இந்த அரசாங்கத்துக்குக் கவலை இல்ல... ஆனா, எதிர்கட்சிக் காரங்க மேல கேஸ் மேல கேஸாப் போட்டு பழிவாங்குறாங்க. ஒருவேளை உலகம் '2002’-ல அழிஞ்சா, நான் மக்களோடும் தெய்வத் தோடும் கூட்டணி வெச்சு வீட்டுக்கு வீடு 'விருத்தகிரி’ டி.வி.டி. தருவேன்.'' ('அப்பதான் தலைவரே, நிஜமாவே உலகம் அழியும்’ என்று குரல் கேட்க, கூடவே விஜயகாந்த் வெளுக்கும் சத்தமும் கருத்துச் சொன்னவர் கதறும் சத்தமும் கேட்கிறது!)

வைகோ: ''உலக அழிவைப் பற்றி கிரேக்க அறிஞன் சாக்ரடீஸ் அன்றைக்கே தன்னுடைய நூலில் சொல்லி இருக்கிறான். இந்த நாளைப்பற்றி மக்களுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்த கலிங்கப்பட்டியைச் சுற்றி நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கட்சியில் மிச்சம் மீதித் தொண்டர்கள் யாராவது இருந்தால், தவறாது சீருடையோடு கலந்துகொள்ளவேண்டும்!''

சரத்குமார்: ''உலக அழிவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களில் தீவிரமாகக் களப் பணி ஆற்றும் தமிழக அரசுக்கு எங்கள் கட்சியின் சார்பாகப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். உலகம் அழியும்போது காமராஜர் மணிமண்டபத் துக்கு எந்தச் சேதாரமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டடப் பணி களையே இன்னமும் ஆரம்பிக்காமல் இருக்கிறோம் என்பதில் இருந்து காமராஜர் மீது நாங்கள் கொண்டிருக்கும் பக்தியை எல்லோரும் அறிந்துகொள்ளலாம்!''
- சீலன்