Published:Updated:

"ராமையா... விழுந்தா நீ பப்பாளிப் பழம்தான்டா!"

ஆ. அலெக்ஸ் பாண்டியன்படங்கள் : ஜெ.தான்யராஜு

"ராமையா... விழுந்தா நீ பப்பாளிப் பழம்தான்டா!"

ஆ. அலெக்ஸ் பாண்டியன்படங்கள் : ஜெ.தான்யராஜு

Published:Updated:
##~##

கேமரா இல்லை... லைட்ஸ் இல்லை... வெறும் பேச்சிலேயே காமெடி, குணச்சித்திரம், வில்லன், சென்டிமென்ட், பாட்டு, டான்ஸ் என சகலமும் கொண்டுவந்து சிரிக்கவைப்பது தம்பி ராமையா ஸ்பெஷல்.

 ''நான் புதுக்கோட்டைப் பக்கம் இருக்கிற ராராபுரம்கிற சின்னக் கிராமத்துக்காரன். எனக்கு மூணு தம்பிங்க, ஒரு தங்கச்சி. என் தம்பி அம்பிகா பதிதான் மொத்தக் குடும்பத்தையும் பார்த்துக் கிட்டான். ஊருக்குள்ள சின்னப் பயலா அரைக் கால் டவுசரோட திரியும்போதே எல்லா லந்து களையும் ஆரம்பிச்சாச்சு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆடி மாசம் திருவிழா ரொம்ப விமரிசையா நடக்கும். விடிய  விடிய நாடகம், கூத்து, ஆட்டம் பாட்டம்னு களைகட்டும். காலையில தூங்கி வழிஞ்சுட்டே ஸ்கூலுக்குப் போவேன். ஆள் குள்ளமா இருக்கேனா... முதல் வரிசையில் உட்காரவெச்சிருவாங்க. வாத்தியார் பாடம் எடுக்க ஆரம்பிச்சதும், கண்ணைச் சொருகிட்டுத் தூக்கம் வரும். அப்போ என் நண்பன் சாத்தையாகிட்ட, 'நான் கவனமா முழிச்சுக்கிட்டு இருக்கேன். மீறி அசந்துட்டா, மண்டையில நறுக்குனு கொட்டு’னு முழிச்சிட்டு உட்கார்ந்திருப்பேன். வாத்தியார் 'அ... ஆ...’ சொல்ல ஆரம்பிச்சதும் எனக்குத் தலை தொங்கிரும். உடனே அவன் மண்டையில கொட்டுவான். நான் பதறி முழிச் சுக்குவேன். இதை ஒருநாள் வாத்தியார் பார்த் துட்டார். 'டேய்... அவன் ஆர்வமாப் பாடம் கவனிச்சுட்டு இருக்கான்... நீ எதுக்கு அவனை வம்பு பண்றே?’னு அவனை அடி வெளுத்துட்டார். இப்போ பார்த்தாலும் 'உன் அலும்புக்கு நான் அன்னைக்கு வாங்கிக் கட்டிக்கிட்டேனேடா’னு சாத்தையா சொல்வான்.  

"ராமையா... விழுந்தா நீ பப்பாளிப் பழம்தான்டா!"

சினிமாவுல ஜெயிக்குறதுக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணிட்டேன். என் மனைவி பொன்னழகு என்கிற சாந்தி, மகள் விவேகா, பையன் உமாபதி. நான் ஸ்கூல் படிக் கிற காலத்துல இருந்தே விவேகா னந்தர் மேல ஈடுபாட்டோட இருந் தேன். முதல் புள்ளை கண்டிப்பா ஆண் குழந்தையா இருக்கும். அதுக்கு விவேகானந்தர் பெயரை வைக்கணும்னு முடிவுபண்ணியிருந்தேன். பெண் குழந்தை பிறந்ததும் பயங்கர மாக் குழம்பிட்டேன். விவேகானந்தரையே சுருக்கி, விவேகானு வெச்சேன். பையனோட உமாபதிங்கிற பேரு என்னோட தம்பிகள் மீதுகொண்ட அன்பால் வெச்சது. பொண்ணு விவேகாவுக்கு இந்த வருஷம் கல்யாணம். பையன் இப்போ காலேஜ்ல படிச்சுட்டு இருக்கான். நல்லாக் கதை எழுதக் கத்துக்கிட்டான். டான்ஸும் நல்லா ஆடுறான். அநேகமா சினிமா பக்கம்தான் வருவான்னு நினைக்குறேன்.

நமக்கும் பிசினஸுக்கும் பல மைல் தூரம். சினிமாவில் சான்ஸ் தேடிக்கிட்டே குடும்பத்தைக் காப்பாத்த வடபழனியில் 'விவேகா லாட்டரிஸ்’ ஆரம்பிச்சேன். ஊர்ப் பயலுக பதினெட்டு பேரைக் கொண்டாந்து வேலை கொடுத்தேன். ஒரு மாசத்துல வடபழனியில போட்டிருந்த ஆறு பெட்டியை மாநகராட்சியில் இருந்து வந்து தூக்கிட்டுப் போய்ட்டாங்க. அடுத்த ஒன்றரை மாசத்துல, இருந்த 18 பெட்டிகளும் காலி. ஏன்னு கேட்டா, லைசென்ஸ் வாங்கணும்னு சொன்னாங்க.  பதினெட்டுப் பேரும் ஊருக்குப் போய்ட்டதால லாட்டரியை

"ராமையா... விழுந்தா நீ பப்பாளிப் பழம்தான்டா!"

விட்டுட்டு மெஸ் ஆரம்பிச்சேன். ஒரு நாளைக்கே 3,000 வருமானம் கொட்டுச்சு. அப்பப் பார்த்து ஒரு உப்புமாக் கம்பெனிக்காரன் படம் எடுக்கலாம்னு கூப்பிட்டான். கடையை டீ மாஸ்டர்கிட்ட விட்டுட்டுப் படம் எடுத்தா, படம் ரிலீஸ் ஆகலை. இங்கே டீ மாஸ்டரைக் காணலை. எல்லாம் அவுட். இதுக்கு மேல முடியாதுனு உட்கார்ந்துட்டேன். அந்தச் சமயம் பார்த்து என் மனைவி, வடபழனியில கஸ்தூரிங்கிற பொம்பளைகிட்ட ஒன்றரை லட்சத்துக்கு சீட்டு போட்டிருந்தா. ஒரு நாள் கஸ்தூரி பணத்தோட எஸ்கேப் ஆக, விஷயம் தெரிஞ்சு கதறி அழ ஆரம்பிச்சுட்டா. எனக்கோ சிரிப்புத் தாங்கலை. என் பொண்டாட்டி முறைக்க, 'நானும் பணத்தைப் பறிகொடுத்துட்டேன். நீயும் பறிகொடுத்திட்டே... குடும்பத்துல கணக்கு டேலி ஆகிருச்சு’னு சொல்ல... அவளும் சிரிக்க ஆரம்பிச்சுட்டா.

'மைனா’தான் எனக்கு பிரேக் கொடுத்த படம். அந்த ஷூட்டிங்ல நான் பட்ட கஷ்டம் இருக்கே... பஸ் பள்ளத்துல விழுற சீன்ல எந்த கிராபிக்ஸும் கிடையாது. உண்மையாவே ஒரு பழைய பஸ்ஸை வாங்கி, ரெண்டு கிரேன் உதவியோட தொங்கவிட்டுட்டாங்க. என்னையும் அமலா பாலையும் பஸ் மேல படுக்கவெச்சிட்டாங்க. கீழே பள்ளத்தைப் பார்த்தா வயிறு பயத்துல பொரட்டிப் பொரட்டி பரோட்டா போடுது. 'அட ராமையா... விழுந்தா நீ பப்பாளிப் பழம்தான்டா’ பீதியில பேதி ஆகிட்டேன். ஆனா, அந்த அமலா பால் பொண்ணு கொஞ்சம்கூடப் பயமே இல்லாம சந்தோஷமா சிரிச்சுக்கிட்டே 'சார்... மேல இருந்து கீழே விழுந்து நம்ம ரெண்டு பேரும் செத்துப்போயிட்டா, மீதிப் படத்தை எப்படி சார் எடுப்பாங்க?’னு சிரிக்குது. ஒருவழியா சீன் முடிச்சிட்டு மேலே ஏறி வர்றோம். தாங்கிப் பிடிச்சிருந்த கிரேன்ல ஒண்ணு அறுந்து, பஸ் பாதாளத்துக்குள்ள பாஞ்சிருச்சு.

'வேட்டை’ ஷூட்டிங் ஸ்பாட்ல நான் ஜீப் ஓட்ட, மாதவன் என் பக்கத்துல உட்கார்ந்திருக்கணும். எங்களை ஓவர்லாக் பண்ணி முன்னாடி கேமரா செட் பண்ணிட்டாங்க. சுத்தி ஷூட்டிங் பார்க்குற கூட்டம் வேற. எனக்கே சுமாராதான் ஜீப் ஓட்டத் தெரியும். சுத்தி கூட்டம் வேற 'ஹே...ஹே’னு கத்துறானுங்க. பயத்துல ஜீப்பைப் பக்கத்துல இருந்த கம்பத்துல மோதிட்டேன். கேமராவுல டொக்கு விழுந்திருச்சு. கேமரா ரேட் மட்டும் 20 லட்சம்னு கேள்விப்பட்டதும் கிறு கிறுனு தலை சுத்திருச்சு. 'நாம இன்னும் சம்பளமே அவ்வளவு வாங்கலையே... கொடுக்க வேண்டிய பாக்கிக்கு இன்னும் நாலஞ்சு படம் லிங்குசாமிக்கு பண்ணிக் கொடுக்க வேண்டியிருக்குமோ?’னு ஜெர்க் ஆகிட்டேன். நல்ல வேளையா, 'கேமரா வுல சின்ன பார்ட்தான் உடைஞ்சிருக்கு. ஒண்ணும் பிரச்னை இல்லை’னு லிங்குசாமி சொல்லி என் வயித்துல பீர் வார்த்தார்.

எல்லாத்தையும்விட அதி பயங்கரம் 'கும்கி’தான். விக்ரம் பிரபு லவ் மூட்ல இருக்கும்போது எல்லாம்,

"ராமையா... விழுந்தா நீ பப்பாளிப் பழம்தான்டா!"

நான்தான் மாணிக்கம் யானை மேல ஏறி உட்காந்து காவல் காக்கணும். அப்போ பார்த்து ஒரு பக்கி, 'இதுவரைக்கும் யானைகள் சாதாரண மனுசங்களைவிட அதிகமாப் பாகன் களைத்தான் கொன்னுருக்கு’னு சொல்லிருச்சு. அதைக் கேள்விப்பட்டதுல இருந்து எனக்கு அல்லு இல்லை. நைட்டு ரெண்டு மணிக்கு யானை மேல ஏத்திவிட்டுட்டு எல்லாம் தள்ளி நின்னு ஷூட் பண்ணுவாங்க. யானை திடீர்னு 'ஓடுறா ராமா’னு கிளம்பிருச்சுன்னா என்ன பண்றது? அப்படியே யானை என்னையை முதுகுல தூக்கிட்டே காட்டுக்குள்ள ஓடுனா, காப்பாத்த யூனிட்ல ஒரு பய வர மாட்டான். 'கவுத்திராத மாணிக்கம். இப்பதான் சினிமால ஒரு நல்ல நிலைமைக்கு வந்துட்டு இருக்கேன். உன்கிட்ட இருந்துதான் ஆரம்பிக்கணும். கும்கியை என் கடைசிப் படமா ஆக்கிராதே’னு மாணிக்கம்  கிட்ட மனசுக்குள்ள கும்பிட்டுக்கிட்டே இருந்தேன். நல்லவேளை, அந்த சீன் எல்லாமே லாங் ஷாட்தான். இல்லைன்னா, என் முகத்தைப் பார்த்திருப்பீங்க... பொழப்பு நாறியிருக்கும்!''