ஸ்பெஷல்
Published:Updated:

கடல்

கடல்

கடல்

சில கவிதைகள் புரியவே புரியாது. ஆனால், எழுதியவர் பெரிய கவிஞராக இருப்பார். நம்மை 'முட்டாள்’ என்று நினைத்துவிடுவார்களோ என்பதற்காகவே அதைக் குறை சொல்ல மாட்டோம். ஆனால், அதே கவிதையை அறிமுகம் இல்லாத யாராவது எழுதிவிட்டால், கிழிச்சுத் தொங்கவிட்டு கிளிப் மாட்டிட மாட்டோமா? அப்படித்தான் மணிரத்னத்தின் 'கடல்’ படத்துக்கான கமென்ட்களும், அதே படத்தைப் புதுமுகம் யாராவது இயக்கி இருந்தால் நாம் அடிக்கும் கமென்ட்களும்  இதோ...

கடல்

மணிரத்னம்: இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்திருப்பதிலேயே மணிரத்னத்தின் துணிச்சல் தெரிகிறது. பெயருக்கு மட்டுமே கிறிஸ்தவர்களாக வாழும் கடலோர மக்களின் இயல்பை எந்தச் சமரசமும் இன்றி அப்படியே பிரதிபலிக்கிறது 'கடல்!'

புதுமுகம்: எந்த ஊர்ல சார் சர்ச் இப்படிப் பூட்டிக்கிடக்குது? எந்த ஊர்ல பாதிரியாரை இவ்வளவு கேவலமாக நடத்துகிறார்கள்?

மணிரத்னம்: சுஜாதாவுக்குப் பிறகு தனக்கான வசனகர்த்தாவைக்கண்டுபிடித்துவிட்டார் மணி. ஜெயமோகனின் வசனங்கள் எல்லாம் அனல்.

கடல்

இலக்கியமும், சினிமாவும் இணைய வேண்டும் என்கிற ரசிகர்களின் ஆசை இந்தப் படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது!

புதுமுகம்: என்னய்யா இது? அவனவன் பக்கம் பக்கமாய் வசனம் பேசுறான். என்னமோ நாவல் படிச்ச மாதிரி இருக்கு. நேட்டிவிட்டி என்ற பெயரில் ராவுறாங்கப்பா. திருநெல்வேலிக்கு வடக்கே எந்த மாவட்டத்துக்காரனுக்கும் இந்தத் தமிழ் புரியாதுடே!

மணிரத்னம்: கடற்கரை கிராமத்தை இவ்வளவு அழகாகக் காட்ட முடியுமா? ராஜீவ் மேனின் ஒளிப்பதிவு அள்ளுகிறது. அந்தக் கடைசி சண்டைக் காட்சியில் ஒளிப்பதிவு ஹாலிவுட் தரம்!

புதுமுகம்: கடலைக் காட்டுகிறபோதெல்லாம் ஒரே இருட்டு. ஏற்கெனவே வீட்ல பவர்கட்டைத் தாங்க முடியாம தியேட்டருக்கு வந்தா, இங்கேயுமா? தூத்துக்குடி மாவட்டத்தில் எங்கங்க படகுப் போக்குவரத்து இருக்கு? உண்மையைச் சொல்லுங்க பாஸ், ஆலப்புழாவுல எடுத்துட்டு செமையா ரீல் விடுறீங்கதானே?

மணிரத்னம்: ஏ.ஆர்.ரஹ்மானின் இசை உலகத் தரம். மணி சாருக்கு என்றால், ரஹ்மான் பார்த்துப் பார்த்து மியூசிக் போடுறார்யா...!

புதுமுகம்: எந்த மீனவக் கிராமத்துலயும் இல்லாத மாதிரி பாட்டும் டான்ஸ் மூவ்மென்ட்ஸும் கொஞ்சம்கூட ஒட்டாம இருக்கு. படத்துக்கு டைட்டில் 'கடல்’னு வெச்சதாலோ என்னவோ ரஹ்மான், கடல் தாண்டி ஆப்பிரிக்கப் படத்துக்குப் போட வேண்டிய பாட்டை இந்தப் படத்துக்குப் போட்டிருக்காரு. ஜெய்ஹோ...ஐயகோ!

மணிரத்னம்: மணிரத்னம் படம் மாதிரியே இல்ல. அவர் மாறிட்டாரா? இல்லை நம்மோட ரசனை மாறிடுச்சா?

புதுமுகம்: பையன்கிட்ட சரக்கு இருக்குதுங்க. கொஞ்சம் காமெடி சீன், அயிட்டம் சாங் எல்லாம் சேர்க்க ஆரம்பிச்சாருன்னா இவரு பெரிய இயக்குநரா வருவார் பாருங்களேன். மச்சான் நீ கேக்குறியா... அட கேளேன்!

- கே.கே.மகேஷ்