ஸ்பெஷல்
Published:Updated:

கேள்வி கேக்கலாமா... வேணாமா?

கேள்வி கேக்கலாமா... வேணாமா?

நாட்டில் பல விடை தெரியாத கேள்விகளுக்குத் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி

கேள்வி கேக்கலாமா... வேணாமா?

கேள்விகளைக் கேட்டால், பல விஷயங்களில் நமக்கு உண்மை தெரியும் என்று என் பக்கத்து வீட்டு அங்கிள் சொன்னார். அதான், ஜெயலலிதா மேடத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்பதற்காக ஒரு விண்ணப்பத்தைத் தயாரித்துள்ளேன். நீங்களும் பார்த்துட்டு, சரியானு சொல்லுங்க!

அனுப்புநர்

இன்னொசென்ட் இசக்கிமுத்து,

தமிழ்நாடு.

பெறுநர்

செல்வி ஜெயலலிதா,

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்.

பொருள் : ஜெயலலிதாவைப் பற்றிய தகவல்களை விலை இல்லாமல் கோருதல். விண்ணப்பக் கட்டணமாக நீதிமன்ற வில்லை ரூபாய் 10 இத்துடன் ஒட்டப்பட்டுள்ளது.

கேள்வி 1 : ஜெயலலிதா அவதூறு வழக்குகள் தொடுக்க ஆலோசனை அளிப்பது யார்? அவரின் பெயர், கல்வித் தகுதி, பதவி என்ன?

கேள்வி கேக்கலாமா... வேணாமா?

கேள்வி 2 : அவர் ஜெயலலிதாவுக்கு அவதூறு வழக்குகள் பற்றி ஆலோசனை சொல்லத் தகுதியானவரா? எனில், எந்த முறையில் தகுதியானவர்?

கேள்வி 3 : மேடையில் மொக்கை போடும் கதைகளை ஜெயலலிதாவுக்குச் சொல்லிக்கொடுப்பது யார்? அவர் எங்கு இருந்து கதைகளை 'எடுக்கிறார்’?

கேள்வி 4 :  இதுவரை ஜெயலலிதா சொல்லியுள்ள குட்டிக் கதைகள் எத்தனை?

கேள்வி 5 : மத்திய அரசுக்கு ஜெயலலிதா மொத்தம் எழுதிய கடிதங்கள் எத்தனை?

கேள்வி 6 : எத்தனை முறை மைனர்களே இல்லாத கட்சியை மைனாரிட்டி ஆட்சி என்று கூறியுள்ளார்?

கேள்வி 7 : எம்.ஜி.ஆர். சமாதியில் வைக்கப்பட்டுள்ள இரட்டை இலை, மன்னிக்கவும், குதிரை சிலையில் உள்ள குதிரை எம்.ஜி.ஆர். 'மலைக்கள்ளன்’ படத்தில் ஓட்டியதா? 'ராஜா தேசிங்கு’ படத்தில் ஓட்டியதா?

கேள்வி  8 : ஒரு எம்.எல்.ஏ. எத்தனை முறை ஜெயலலிதா காலில் விழுந்தால், அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும்?

கேள்வி 9 : எத்தனை முறை அமைச்சர்கள் ஜெயலலிதா காலில் விழுந்து இருக்கிறார்கள்? காலில் விழாமல் டபாய்த்து ஏமாற்றிய அமைச்சர்கள் யார் யார்?

கேள்வி 10 : ஜெயலலிதா இதுவரை யார் காலிலாவது விழுந்து இருக்கிறாரா?

கேள்வி 11 : சென்னையில் தினம் தோறும் இரண்டு மணி நேரம் பவர்கட்  என்று அறிவித்துள்ளபடி, போயஸ் கார்டன் பகுதியில் பவர் கட் செய்யப்படுகிறதா?

கேள்வி 12 : இந்தக் கேள்விகளை கேட்டதற்கு என் மீது அவதூறு வழக்குப் போட வாய்ப்பு இருக்கிறதா? வாய்ப்பு இருக்கிறது எனில், படிக்காமல் இந்தக் கடிதத்தை அப்படியே கிழித்துவிடவும்.

நன்றி.  

மறுபடியும் வணக்கம்.

இப்படிக்கு

இன்னொசென்ட் இசக்கிமுத்து.

- நா.சிபிச்சக்கரவர்த்தி