Published:Updated:

சினிமா விமர்சனம் - நந்தலாலா

சினிமா விமர்சனம் - நந்தலாலா

பிரீமியம் ஸ்டோரி
##~##
னநோய் விடுதியில் சேர்த்துவிட்ட பிறகு, தன்னைச் சந்திக்க வராத அம்மாவைக் 'கன்னத்தில் அறைய வேண்டும்’ என்று கோபத்தோடு கிளம்புகிறார் ஒரு மன நோயாளி. புகைப்படத்தில் மட்டுமே தன்னைப் பார்த்துச் சிரிக்கும் தாயைச் சந்தித்து 'கன்னத்தில் முத்தமிட வேண்டும்’ என்று கிளம்புகிறான் ஒரு சிறுவன். இருவரும் ஒரு புள்ளியில் இணைந்து தொடரும் பயணத்தின் தாலாட்டுதான் 'நந்தலாலா’!

மன நோயாளியாக மிஷ்கின் (நடிப்பில் அறிமுகம்!). கண் தெரியாத பாட்டியிடம் வளரும் சிறுவனாக அஸ்வத் ராம் (அறிமுகம்). இந்த அறிமுக நடிகர்கள் இணைந்து, தமிழ் சினிமாவின் ஒரு முக்கியப் படைப்பை இரண்டரை மணி நேரமும் தோளில் தாங்குகிறார்கள். தங்கள் பயணத்தின்போது இவர்கள் பல்வேறு மனிதர்களைச் சந்திக்கிறார்கள். அவர்களில் ஒருவராகிய பாலியல் தொழிலாளி ஸ்னிக்தாவும் அவர்களின் பயணத்தில் இணைகிறார். அஸ்வத்தும் மிஷ்கினும் தங்கள் அம்மாக்களைச் சந்தித்தார்களா, அவர்களது ஆசைகள் நிறைவேறினவா என்பதைக் கவிதையாக மனதில் புகுத்துகிறது படம்.

சினிமா விமர்சனம் - நந்தலாலா

ஜப்பானியத் திரைப்படமான 'கிக்குஜிரோ’ கதையின் 'ஸ்கெட்ச்'சை எடுத்துக்கொண்டு 'நந்த லாலா' படைத்த மிஷ்கின், டைட்டிலில் 'கதை’ என்று தன் பெயரைப் போட்டுக்கொண்டது சரியா? இன்ஸ்பிரேஷனுக்கு கிரெடிட் தர மறுப்பது என்ன நியாயம்? கடுமையான கண்டனங்கள் மிஷ்கின்!

இருந்தாலும், ஒரிஜினலின் காட்சிகளுக்கு இணையான காட்சிகளை நமக்கான கலாசாரப் பின்னணியில் உருவாக்கி, மண் மணக்கிற மனிதர்களின் உணர்வுகளை அழகாகப் படம் பிடித்து, ஓர் இனிய பயண அனுபவம் ஏற்படுத்திய வகையில் மிஷ்கினுக்கு வெயிட்டான வாழ்த்துக்கள்!

தீதும் நன்றும் தீண்டாத மன நோயாளியாக மிஷ்கின். 'காசு கொடு’ என்று மற்றவர்களிடம் மிரட்டி வாங்குவது, 'இந்தா வெச்சுக்கோ’ என்று அவர்களிடமே வேறு காசைத் திருப்பிக் கொடுப்பது, சுவரில் ஒற்றை விரல்களால் கோடு போட்டுக்கொண்டே செல்வது, பட்டன் போட்டு பெல்ட் பிணைத்துக்கொள்ளக்கூடத் தெரியாமல் கைகளில் பேன்ட்டைப் பிடித்துக்கொண்டே அலைவதுமாக, மனநிலை அலைபாயும் ஒரு நபரைக் கண்ணாடிப் பிம்பமாகப் பிரதிபலிக்கிறார் மிஷ்கின்.

ஆட்டோ டிரைவர் தன்னை 'மென்ட்டலா?’ என்று கேட்டதற்காக அடித்துத் துவைப்பது, சாதி வன்மத்தால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் ஒரு பெண்ணைக் காப்பாற்றிய பிறகு, 'அண்ணே, நீங்க என்ன சாதிண்ணே?’ என்று அவள் கேட்க, 'மென்ட்டல்’ என்று பதில் சொல்வது, இறுதியில் அஸ்வத் ராமே தன்னை 'போடா மென்ட்டல்’ என்றுதிட்டிய உடன், உடைந்து நொறுங்குவது என்று மிஷ்கினின் நடிப்பில் அத்தனை அடர்த்தி.

படத்தின் இரண்டாவது நாயகன் இளையராஜாவின் இசை. ஆரம்பக் காட்சியில் சலசலக்கும் நீரோடையில் தொடங்கும் ராஜாவின் பின்னணி ஓசை, சின்னதொரு தண்ணீர்க் கீற்றாய், தூவானம் பொழியும் மெல்லிய மழைச் சாரலாக, குளிரின் மௌன மாக, பெய்யெனப் பெய்யும் மழையாகப் படம் முழுக்க நிரம்பித் ததும்புகிறது. மௌனத்தின் வலிமை உணர்த்த... ராஜாவின் பின்னணி இசையும் மறைந்திருந்து மகத்துவம் புரிகிறது.

சிறுவன் அஸ்வத் ராம் தாயன்புக்காகத் தவிக்கும் குழந்தையை அப்படியே திரையில் கொண்டுவருகிறான். பல இடங்களில் மனவளர்ச்சி இல்லாத மிஷ்கினைச் சமாளிக்கவும், சமாதானப் படுத்தவுமாக அவன் பேசுகிறபோது வெளிப்படுகிற 'மாடுலேஷன்'கள் அபாரம்! ஸ்னிக்தாவைத் தன் தாயாக ஏற்றுக்கொண்டு, முகம் முழுக்க முத்தம் கொடுக்கிற காட்சியில் அன்புக் கதகதப்புக்கான தன் தவிப்பையும் வேட்கையையும் அத்தனை அழகாகக்கொண்டு வந்திருக்கிறான் அஸ்வத் ராம்.

காதலனால் ஏமாற்றப்பட்டு, பாலியல் தொழிலாளியாக மாறி, பிறகு தன் வாடிக்கையாளக் கிழவனால் துன்புறுத்தப்படும் அபலையாக ஸ்னிக்தா. வெற்றுப் பார்வையுடன் தான் ஏமாற்றப்பட்ட கதையை விவரிக் கும் காட்சியில் ஆச்சர்யப்படுத்துகிறார் ஸ்னிக்தா. 'முதல்ல எல்லாம் என் உடம்பு மட்டும்தான் நாறுச்சு, இப்போ, என் மனசும் நாறுது!’ என்ற வசனம், ஒரு பாலியல் தொழிலாளிக்குள் வன்முறையாகப் புகுத்தப்பட்ட மனக்காயத்தை பொளேரெனப் புரியவைக்கிறது.

பள்ளி மாணவி சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவுடன், மிஷ்கின் ஒரு குழந்தையின் பரிதவிப்போடு பாவாடையை விலக்கி காயத்தைப் பார்க்க முயல்வதும், அந்தப் பெண் பதிலுக்கு அதிர்ந்து அறைவதும், 'எச்சி தொட்டு வை. சரியாப்போகும்’ என்று மிஷ்கின் சொன்னவுடன், அந்த மாணவி உருகுவதும்... குட்டி ஹைக்கூ!

சினிமா விமர்சனம் - நந்தலாலா

இரவிலும் கூலிங் கிளாஸ் அணிந்து வரும் லாரி டிரைவர்கள், ஸ்னிக்தாவைக் கடத்த முயலும் கிழவரின் விநோதமான சிவப்பு வண்டி, பீர் இளைஞர்களின் மஞ்சள் கலர் கார் ஆகியவை கதையில் இருந்து அந்நியப்பட்டு நிற்கின்றன.

எந்த கட்டத்திலான மனநோயின் பாதிப்பில் மிஷ்கின் இருக்கிறார் என்பதைச் சில காட்சிகளில் அவர் காட்டும் 'தெளிவும் முதிர்ச்சியும்' சற்றே குழப்பியடிக்கிறது. குறிப்பாக, தன் தாயை இறுதியில் கண்டுவிடுகிறபோது அவருக்கு ஏற்படுகிற அதிர்ச்சியும் அதைத் தொடரும் பரிதவிப்பான பாசப் பரிமாற்றமும்!

அஸ்வத் ராமின் பாட்டியாக வரும் கண் தெரியாத மூதாட்டி, லாரி ஹாரனைத் திருடியதால் மிஷ்கினை அடித்து உதைத்து, பிறகு நண்பனாகும் லாரி டிரைவர், கால்களை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காத மாற்றுத் திறனாளி, அவருக்கு

மருத்துவம் பார்க்கும் மாற்றுத் திறனாளி மருத்துவர், போதைப் பாதை உல்லாசப் பயணம் கிளம்பும் உற்சாக இளைஞர்கள், மிஷ்கினின் நடவடிக்கைகளால் கலவரமாகும் புதுமணத் தம்பதிகள், அஸ்வத் ராமின் ஆங்கிலத்தால் வாயடைத்து, பிறகு 'வயிறு வலிக்குது’ என்று அஸ்வத் சொன்னவுடன் 'ஸ்டொமெக் பெய்ன்?’ என்று கேட்கும் இன்ஸ்பெக்டர் என இயல்பாகக் கடக்கும் கதாபாத்திரங்கள் படம் முழுக்க உயிரோட்டம் நிரப்புகின்றன.

குபுக்கென இதயத்தைப் பொங்க வைப்பதையும், களுக்கெனச் சிரிக்க வைப்பதையும் கேமரா கோணங்களோடு கூட்டணி போட்டு வெகு சுலபமாக சாதித்திருக்கிறார் இயக்குநர். ஆரம்பக் காட்சி முதல் இறுதி வரை கல்லையும், மண்ணையும், கலங்கலான சேற்றுத் தண்ணீரையும்கூட கவிதை பாட வைத்துவிட்டார் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி.

விதவிதமான சாலைப் பயணத்தில் துவங்கி மாற்றுத் திறனாளியின் கெந்த லான ஓட்டம் வரையில் அதே ஏற்ற இறக்கங்களோடு மேடு பள்ளங்களில் கேமரா தொடர்வது தமிழ்த் திரைக்குப் புதிய பயண அனுபவம். சிற்சில இடங்களில் திரைக்கதை தொய்வை மறந்து படத்தோடு நம்மை ஒன்ற வைப்பதில் கேமராவுக்குப் பெரும் பங்கு.

தமிழ் சினிமாவின் மறக்க முடியாத பயண அனுபவம்... இந்த 'நந்தலாலா’!

- விகடன் விமர்சனக் குழு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு