Published:Updated:

சினிமா விமர்சனம் - அமீரின் ஆதி-பகவன்

சினிமா விமர்சனம் - அமீரின் ஆதி-பகவன்

சினிமா விமர்சனம் - அமீரின் ஆதி-பகவன்
##~##

டான் ஆதி vs டான் பகவான்தான்... 'அமீரின் ஆதி-பகவன்’!

 பொதுவாக, பஞ்சம் பிழைக்கத் தமிழர்கள் சிங்கப்பூர், மலேசியா, துபாய் என்றுதான் செல்வார்கள். ஆனால், படத்தில் அஜால் குஜால் சங்கதிகளுக்குப் பேர் போன பாங்காக்குக்கு அம்மா, தங்கையோடு ஜெயம் ரவி செல்லும்போதே உஷாராகி இருக்க வேண்டும்... இது வேறு அமீர் என்று. என்ன்ன்னா அடி!

'எ மாஃபியஸோ ஆக்ஷன் லவ் ஸ்டோரி’ என்று படத்தின் கேப்ஷனில் மட்டும் வித்தியாசம் காண்பித்திருக்கிறார் அமீர். கோட்-சூட், சுருட்டு, பப், கையில் துப்பாக்கி, சொகுசு கார்கள்... இவற்றோடு வெளிநாட்டு வீதிகளில் வாக்கிங் போனால், அவர் டானாகத்தானே இருக்க முடியும். தமிழ் சினிமாவில் அஜித் ஆரம்பித்துவைத்த மாஃபியா கலாசாரத்தை ஹீரோ ஜெயம் ரவி டிட்டோ அடிக்கிறார். தமிழில் வெளிவந்த டான் கதைகளில் பார்த்துச் சலித்த விஷயங்களை இயக்குநர் அமீர் டிட்டோ அடிக்கிறார்.

சினிமா விமர்சனம் - அமீரின் ஆதி-பகவன்

ஆண்டான், அரவாணி டான் என இரண்டு பாத்திரங்களில் வித்தியாசம் காட்ட நிறையவே மெனக்கெட்டு இருக்கிறார் ஜெயம் ரவி. லிப்ஸ்டிக் பூசி, நெளிந்து நடந்து வெட்கப்படும் மும்பை பகவானைக் காட்டிலும், கனத்த மீசையும் கம்பீர நடையுமாக ஆதி மிரட்டுகிறார். ஆனால், இரண்டு 'ரவி’க்களைவிடவும் திரையை அதிகம் ஆக்ரமித்து இருப்பது, நீத்து சந்திராதான். இருப்பினும், ஏனோ சோகம் அப்பிய கண்களுடன் எப்போதும் அசதியாகவே காட்சிஅளிப்பது ஏன் நீத்து? அட, பகவானோடு சேர்ந்திருக்கும்போதேனும் கண்களில் வில்லத்தனம் ஒளிர வேண்டுமே... அதுவும் நீத்துவிடம் லேது!

பாகவதர் தோன்றி எம்.ஜி.ஆர். தோன்றாக் காலத்து முன் தோன்றிய, ஹீரோ உடம்பில் இருக்கும் துப்பாக்கிக் குண்டை ஹீரோயின் கத்தி கொண்டு எடுக்கும் காட்சி இதிலும் உண்டு. ஹீரோவின் அம்மா நியாயத்தின் பக்கம் நின்று கொடி பிடிக்க வேண்டுமே? இதில் ரவியின் அம்மா சுதா சந்திரன் 'என் புள்ளை நல்லவனா இருக்கும்போதே செத்துட்டான்!’ எனக் கண்ணீர் சிந்துகிறார்.  

சினிமா விமர்சனம் - அமீரின் ஆதி-பகவன்

காதல் வில்லி நீத்து, அரவாணி வில்லன் பகவான்... இந்த இரண்டு டிவிஸ்ட்டும் படத்தைக் காப்பாற்றும் என்பது அமீரின் நம்பிக்கையாக இருந்திருக்கும்போல. ஆனால், இடைவேளைக்குப் பிறகான எந்தச் சம்பவமும் ஆர்வப் பரபரப்பைக் கிளப்பவில்லையே சார்? இன்ன காரணத்துக்காகத்தான் ஆதியைக் கடத்தியிருக்கிறார்கள் என்று தெரிந்த பிறகும் திரைக்கதையை ஜவ்வாக இழுத்துக்கொண்டே செல்வது... ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாவ் பகவன்!  

தேவராஜின் ஒளிப்பதிவில் பாங்காக் லொகேஷன்கள் பளிச். இசை யுவன்ஷங்கர் ராஜா... நோ கமென்ட்ஸ்!

காதலர்கள் இருவரும் ஈகோ சண்டை தான் போடுவார்கள். இதில் நிஜமாகவே கட்டிப் புரண்டு கராத்தே சண்டை போடுகிறார்கள். அது ஒன்று மட்டுமே படத்தில் வித்தியாசம்.

- விகடன் விமர்சனக் குழு