Published:Updated:

இது 'ஈசன்' குடும்பம்!

ரீ.சிவக்குமார், படம்: கே.ராஜசேகரன்

இது 'ஈசன்' குடும்பம்!

ரீ.சிவக்குமார், படம்: கே.ராஜசேகரன்

Published:Updated:
##~##
ந்து படங்கள் வெளியானால், அதில் மூன்று படங்களில் இருக்கிறார் ஜெயப்பிரகாஷ். குணச்சித்திர வேடம், மிரட்டாத வில்லத்தனம் என்று ஒரு பக்கம் ஜெயப்பிரகாஷ் ரவுண்டு கட்ட, மறுபுறம் ஜெயப்பிரகாஷின் மகன்கள் நிரஞ்சன், துஷ்யந்த் இருவரும் 'வந்தோமம்மா வந்தனம்!’ என்று ஆஜராகிறார்கள் 'ஈசன்’ திரைப்படத்தில். ''அப்புறம்... கலைக் குடும்பம் ஆகிட்டீங்க!'' என்றால், ''ஐயையோ... அப்படி எல்லாம் இல்லைங்க!'' என்று மென்மையாகச் சிரிக்கிறார் ஜெயப்பிரகாஷ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஒரு தயாரிப்பாளரா படங்கள் தயாரிச்சு, அப்புறம் சினிமாவில் இருந்து விலகி... கொஞ்சம் ஊசலாட்டமான ஒரு வாழ்க்கை. சேரன்தான் முதலில் 'மாயக் கண்ணாடி’ படத்தில் நடிக்க அழைத்தார். 'பொற்காலம்’ படம் தயாரித்த காலத்தில் இருந்து சேரனைத் தெரியும். 'சார், வேணாம்... இத்தனை வருஷ நட்பு கெட்டுடும்’னு சொன்னேன். ஆனால், பிடிவாதமா என்னை நடிக்கவைத்தார். என்னைப் பிடிச்சுப்போய் 'நாடோடிகள்’ படத்தில் வில்லனா நடிக்கவெச்சார் சசிகுமார். 'நாடோடிகள்’ படம் முடியும் சமயம், என்னைக் கூப்பிட்ட சசிகுமார், 'தாடியை எடுக்கச் சொன்னா, எடுப்பீங்களா?’னு கேட்டார். 10 வருஷமா வளர்த்த தாடி. பிரிய மனசே இல்லை. இருந்தாலும், சசிகுமார் மேல் இருந்த நம்பிக்கையில் சரி சொன்னேன். பாண்டிராஜ் 'பசங்க’ கதை சொன்னார். சொக்கலிங்க வாத்தியார் கேரக்டர். தாடியை எடுத்துட்டேன். ஒரு வாரம்... ஏதோ சட்டை இல்லாம தெருவில் இறங்கி நடக்குற மாதிரி குறுகுறுன்னு இருந்தது. ஆனா, சொக்கலிங்கம் வாத்தியார் கேரக்டர் என்னைக் கடைசி ரசிகர்களிடமும் கொண்டுசேர்த்தது. இப்போ பெங்களூருக்குப் போயிருந்தப்போ, தமிழ் சரியாகப் பேச முடியாத ரசிகர்கள்கூட, 'நான் மகான் அல்ல பார்த்தோம். சூப்பர் சார்’னு பாராட்டுறாங்க. 'பசங்க’, 'நாடோடிகள்’, 'நான் மகான் அல்ல’, 'யுத்தம் செய்’னு தமிழின் முக்கியமான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைச்சதில், ரொம்ப சந்தோஷம்.

இது 'ஈசன்' குடும்பம்!

பாண்டிராஜின் இரண்டு படங்களில் நடிச்சிருக்கேன். அவ்ளோ சுலபமா யாரையும் பாராட்ட மாட்டார். 'வம்சம்’ பட ஷூட்டிங் சமயம், 'சார், நான் சரியாப் பண்ணி இருக்கேனா? டைரக்டர் ஒண்ணுமே சொல்லலையே’ன்னு அருள்நிதி புலம்பிட்டே இருப்பார். 'பாண்டிராஜ் டேக் ஓ.கே-ன்னு சொல்றதே பாராட்டுதான் அருள். அதுக்கு மேல அவர்கிட்ட எதிர்பார்க்காதே’ன்னு சொன்னேன். மிஷ்கின் அதற்கு அப்படியே நேர் எதிர். ஒரு லைட்மேன் சிறப்பாகச் செய்தால்கூட, ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லாரையும் கை தட்டச் சொல்லி உற்சாகப்படுத்துவார். இப்படி ஒவ்வொரு இயக்குநரிடம் இருந்தும் ஒவ்வொரு விஷயம் கத்துக்கிறேன். மகன் காதலை எதிர்க்கும் அப்பாவாக நடிச்சுக்கிட்டே இருப்பதில் எனக்கு இஷ்டம் இல்லை. இப்போ 'கம்பன் கழகம்’ படத்தில் அரசியல்வாதி கேரக்டர். சிரிச்சுக்கிட்டே கழுத்தறுக்கும் நயவஞ்சக கேரக்டர். என்ஜாய் பண்ணி நடிக்கிறேன்!'' என்று மெலிதாகச் சிரித்துவிட்டுத் தொடர்கிறார்.  

'' 'பசங்க’ பட ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷனுக்கு என் ரெண்டு பசங்களும் வந்திருந்தாங்க. அப்போ அவங்களைப் பார்த்த சசிகுமார் 'ஈசன்’ படத்தில் நடிக்க துஷ்யந்தை அனுப்பச் சொன்னார். 'முதல் பையன் நிரஞ்சனை நடிக்கவைங்க. துஷ்யந்த் வேணாம்’னு மறுத்தேன். அவர் ரெண்டு பேரையுமே நடிக்கவெச்சுட்டார்!'' -ஜெயப்பிரகாஷ் நிறுத்த... தொடர்கிறார் நிரஞ்சன்.

''நான் பி.ஏ., எகனாமிக்ஸ் முடிச்சிருக்கேன். அப்பா சினிமாவில் நடிச்சுட்டு வர்றதைப் பார்க்கிறப்போ, எனக்கும் ஆசையா இருக்கும். அவர்கிட்ட சொன்னப்போ, 'வாய்ப்பு வந்தா பார்க்கலாம்’னு சொன்னார். எதிர்பார்க்காம 'ஈசன்’ல நடிக்கும் வாய்ப்பு. இப்போ 'முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்தில் நடிச்சுட்டு இருக்கேன். 'ஒரு வருஷம் சினிமாவில் இரு. நடிக்கப் பழகி தாக்குப்பிடிக்க முடியும்னா அங்கேயே செட்டில் ஆகிடு. இல்லைன்னா, எம்.பி.ஏ படிக்கப் போ’ன்னு அப்பா சொல்லி இருக்கார். 'ஜெயப்பிரகாஷ் மகன் நிரஞ்சன்’கிற அடையாளம் 'நிரஞ்சன் அப்பா ஜெயப்பிரகாஷ்’னு மாறும் வரை சினிமாவை விடுறதா இல்லை!'' என்று சிரிக்கிறார் நிரஞ்சன்.

இது 'ஈசன்' குடும்பம்!

''நான் நடிக்க வருவேன்னு நினைக்கவே இல்லை. அப்பா சொன்னார், நடிச்சேன்'' என்கிறான் 'ஈசன்’ துஷ்யந்த். ''அண்ணன் என்னை வீட்ல அடிச்சுட்டே இருப்பான். படத்தில் அவனை பைக்ல இருந்து தள்ளிவிட்டுப் பழிவாங்கிட்டேன். ஆனால், ஸ்க்ரீன்ல பார்க்கும்போது பாவமா இருந்துச்சு!'' என்பது துஷ்யந்தின் வருத்தம்.

''ஈசனுக்குப் பிறகு துஷ்யந்தை நடிக்கக் கேட்டு பல வாய்ப்புகள் வந்தன. ஆனா, நான்  மறுத்துட்டேன். இப்போ அவனுக்கு விடலைப் பருவம். வளர வேண்டிய பருவம். அவன் படிச்சு முடிச்சு, நல்லது கெட்டது தெரிந்த பிறகு ஒரு முடிவுக்கு வரட்டும்!'' எனும் ஜெயப்பிரகாஷின் குரலில் ஒரு தந்தையின் பொறுப்பு உணர்ச்சி!