Published:Updated:

பவர்ஃபுல்லா எரியுதுல்ல பல்பு!

பவர்ஃபுல்லா எரியுதுல்ல பல்பு!

''மறக்க முடியாத பல்பு வாங்கிய அனுபவங்களைக் கொஞ்சம் பகிர்ந்துக்க முடியுமா பாஸ்?'' என மிமிக்ரியில் வெரைட்டி காட்டும் படவா கோபியிடம் கேட்டேன். ''நான் வாங்குன பல்புகளை வெச்சு அண்ணா சாலையில ஒரு எலெக்ட்ரிக் ஷாப்பே போடலாம் பாஸ்'' என்றவர், ''இருந்தாலும் சில பல்புகளை இங்கே எரியவிடுவோம்'' எனக் கடகடவென பல்பு அனுபவங்களைச் சொன்னார்.

பல்பு 1: ''மதுரைக்காரய்ங்களுக்கு குறும்பு ஜாஸ்தினு கேள்விப்பட்டு இருக்கேன். அன்னிக்கு அனுபவிச்சேன். ஒரு காலேஜ் ஃபங்ஷன். ஐயாதான் சீஃப் கெஸ்ட். செமத்தியா மிமிக்ரி பண்ணி அப்ளாஸ் அள்ளிட்டேன். கீழே இறங்கினதும் ஒரே ஆட்டோகிராஃப்,  விசிட்டிங் கார்டுனு ஐயா ரொம்ப ரொம்ப பிஸி. ஒருத்தன் ஓடியாந்தான். என் விசிட்டிங் கார்டைக் கேட்டான். சந்தோஷமாக் கொடுத்தேன்.

பவர்ஃபுல்லா எரியுதுல்ல பல்பு!

வாங்கினவன் என் கண் எதிரிலேயே என் பெயர் இருக்குற பக்கத்தை அடிச்சுட்டு, கார்டைத் திருப்பி எதையோ கிறுக்கி, 'மாப்ளே சுந்தரு. இந்தா இதுல என்னோட போன் நம்பர் எழுதி இருக்கேன். மறக்காம கால் பண்ணு’னு சொல்லிட்டு எனக்கும் அவனுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி அவன் பாட்டுக்கு நடையைக் கட்டிட்டான். எனக்கு பப்பி ஷேம் பல்பு அது!''

பல்பு 2: ''போன வருஷம் சி.சி.எல்-லுக்கு கிரிக்கெட் காம்பியரிங் பண்ண துபாய் போனேன். அப்போ செம நார்த் இண்டியன் ஃபிகர் ஒண்ணு மேட்ச் ஸ்டார்ட் ஆகுறதுக்கு முன்னாடி பவ்யமா வந்து பேசி என் காலர்ல மைக்கெல்லாம் மாட்டி 'டேக்’, 'ரிகர்சல்’னு என்னை ட்ரில் வாங்குச்சு. நானும் சந்தோஷத்தோடு சமத்துப்பையனா கமென்ட்ரி பாக்ஸ்ல உட்கார்ந்து, சொல்லிக்கொடுக்குறதை எல்லாம் செஞ்சுட்டு இருக்கேன். மேட்ச் தொடங்குறதுக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடி திடீர்னு கமென்ட்ரி பாக்ஸுக்குள்ள சாரு சர்மாவும் ரோஹன் கவாஸ்கரும் வந்தாங்க. 'ஹலோ இது எங்க சீட்... ப்ளீஸ் வெளியில போக முடியுமா?’னு கேட்டாங்க. அப்புறமாத்தான் தெரிஞ்சது என்னோட கமென்டரி பாக்ஸ் வேற எங்கேயோ இருந்ததுன்னு. அவங்களுக்கு ரிகர்சல் பார்க்க வேண்டிய க்யூட் கேர்ள் என்னை அவங்கன்னு நினைச்சு இவளோ நேரம் சொல்லிக்கொடுத்துருக்கு. அப்புறம் என்ன நான் அபூர்வ சகோதரர்கள் குள்ளக் கமல் மாதிரி ஒரு எக்ஸ்பிரஷனோட வெளியில வந்தேன்!''

பல்பு 3: ''ஒரு ஃபங்ஷனுக்குப் கூப்பிட்டப்பவே பயங்கர பில்ட் -அப்போடு, 'சார் ஃப்ளைட் டிக்கெட் லாம் போட்ருக்கோம் சார்’னு அசத்துனாங்க விழாக் கமிட்டி மக்கள். 'சூப்பர்டா கோபி’னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டேன். விழா முடிஞ்சதும் மேடையில இருந்தவங்களும் கூட்டமும் அஞ்சே நிமிஷத்துல எஸ் ஆகிட்டாங்க. விடுவேனா நானு. அந்த டயலாக் விட்ட தடியனைப் பிடிச்சு,'ஏ, எங்கேப்பா ஃப்ளைட் டிக் கெட்?’னு கேட்டேன். 'சார், கடைசி நேரத்துல ஃப்ளைட் கேன்சல் ஆகிருச்சு. செகண்ட் ஏ/சி ரயில்ல டிக்கெட் போட்ருக்கேன். டிக்கெட் இப்போ வந்துரும். வெயிட் பண்ணுங்க’னு சொன்னான். என்னை ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் கூட்டிட்டுப் போய் வாட்ச்சைப் பார்க்குறான். பிளாட்பாரத்தைப் பார்க்குறான். எவனும் வந்தபாடில்லை. ரயில் மெதுவா கிளம்பறப்போ ஒருத்தன்  எங்களைப் பார்த்து ஓடியாந்தான். 'சார், நீங்க இந்த ஏ/சிப் பெட்டியில் ஏறிடுங்க... டிக்கெட்டைத் தந்துர்றோம்’னு என் லக்கேஜைத் தூக்கி உள்ளே போட்டான் அந்தத் தடியன். நான் வண்டியில ஏறிட்டேன். ரயில் வேகமெடுத்திருச்சு. வந்தவனும் தடியனும் ரயிலோடு பிளாட்ஃபார்ம் முடியுற வரைக்கும் தமிழ் சினிமா ஹீரோவாட்டம் ஓடிவந்து படியில நின்ன என் கையில டிக்கெட்டைக் கொடுத்துட்டானுங்க. 'அப்பாடா ஒரு வழியா டிக்கெட் கெடைச்சாச்சு’னு ஓப்பன் பண்ணிப் பார்த்தா, அது அன்ரிசர்வ்டு டிக்கெட். அப்புறம் என்ன, கோவை டு சென்னை கக்கூஸ் பக்கத்துல நின்னுக்கிட்டே டிராவல் பண்ணேன். அந்தத் தடியன் என்னிக்காச்சும் சிக்கட்டும், அவன் மண்டையில சீரியல் பல்பைக் கட்டிவெச்சுட வேண்டியதுதான்!''

- ஆர்.சரண்