Published:Updated:

''அம்பது பைசா எத்தினாத் தப்பா?''

ரண்டக்க ரண்டக்க ரகளை!

ப்பு நடக்கிற இடத்துல எல்லாம் இந்தியன் தட்டிக் கேட்காட்டியும் அந்நியன் தட்டிக்கேட்பானில்லையா? அதுமாதிரி, மன்மோகன் முன்னால் வந்து 'அந்நியன்’ தட்டிக்கேட்டால் எப்படி இருக்கும்? ரண்டக்க... ரண்டக்க... போலாமா?

மன்மோகன் சோபாவில் அமர்ந்து ஆழ்ந்த யோசனையில் இருக்கிறார்.

அப்போது முன்னந்தலையில் கொத்துக் கொத்தாக முடி தொங்க ஓர் உருவம் அசைந்தபடி, அவருக்கு அருகே வருகிறது.

''அம்பது பைசா எத்தினாத் தப்பா?''

"ஐயோ, மாறுவேஷத்துல வந்திருக்கிறது யாரு? அண்ணா ஹசாரேவா? அத்வானியா? ராம்தேவா? நான் யாருக்கும் பயப்படமாட்டேன். அதாவது, சோனியாவைத் தவிர யாருக்கும் பயப்படமாட்டேன்!"

"நான் அந்நியன். நாட்டுல எங்கே அநியாயம் நடந்தாலும் தட்டிக்கேக்குற தமிழன்.''

''தமிழனுக்கு எது நடந்தாலும் யாரும் தட்டிக்கேட்க மாட்டாங்களே. ஆமா, இப்ப என்ன அநியாயம் நடக்கலை? ஓ, ஐ’ம் ஸாரி.. என்ன அநியாயம் நடந்துடுச்சு?"

" 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், ஹெலிகாப்டர் ஊழல்னு எதுதான் நடக்கலை? ஆனா, இது எல்லாத்தையும்விட பெரிய அநியாயம் டீசல் விலையை மாசா மாசம் உயர்த்துறதா தீர்மானிச்சிருக்கீங்களே, அதுதான்."

''அம்பது பைசா எத்தினாத் தப்பா?''

''வெறும் 50 காசுதானே? இது பெரிய அமௌன்ட்டா?"

" ஒரு மாசத்துக்கு 50 காசுன்னா, ஒரு வருஷத்துல ஒரு லிட்டருக்கு ஆறு ரூபாய் அதிகரிச்சிருக்கும். பண வீக்கத்தைவிட இது ஜாஸ்தி. இது சின்ன அமௌன்ட்டா?"

"அது வந்து..."

''ஒரு லிட்டருக்கு 50 காசு. ஒரு நாளைக்கு இந்தியாவில் குறைந்தபட்சம் 100 கோடி லிட்டர் விக்கிறதா வெச்சிக்கிட்டாலும் 50 கோடி. இது சின்னத் தொகையா? முதல் மாசத்துக்கு 1,500 கோடி. அடுத்த மாசம் 3,000 கோடி. இப்படி மாசாமாசம் அதிகரிச்சிக்கிட்டே போகும். ஒரு வருஷத்துக்கு 18,000 கோடி அதிகரிச்சிருக்கும். இப்ப சொல்லுங்க இது சின்னத் தொகையா?"

"கொஞ்சம் பெரிய தொகை மாதிரிதான் தெரியுது."

"மாசாமாசம் விலைவாசியும் சேர்ந்து உயரும். பணவீக்கம் அதிகமாகும். பல்கேரியாவில பால் விலை, சிங்கப்பூர்ல சீனி விலை, கொரியாவில் கொண்டக் கடலை விலை, துருக்கியில துவரம் பருப்பு விலை, இத்தாலியில இட்லி அரிசி விலை. இதெல்லாம் தெரியுமா... தெரியுமா? இல்லை, ஸ்லைடு போட்டுக் காட்டவா?''

"நீ யாரு? இவ்வளவு விவரமா எகனாமிக்ஸ் பேசுறியே? ப.சிதம்பரத்துக்குத் தெரிஞ்சவனா?"

''நீங்களே ஒரு எகனாமிக்ஸ் கிங்குதானே? அப்புறம் ஏன் நாட்டோட பொருளாதாரம், அம்பியோட குடுமி மாதிரி 'ரண்டக்க ரண்டக்க’னு  டான்ஸ் ஆடுது? பேசிப் பிரயோஜனமில்லை. உங்களை இப்ப என்ன பண்றேன் பாருங்க..."

''அனன்யா, ஸாரி... அந்நியா, நான் சொல்றதைக் கேளு. நான் பொருளாதார நிபுணரா இருந்தது உண்மைதான். ஆனா, எனக்கு இப்ப வேற ரோல். பொருளாதாரத்துல பயில்வானா இருந்த நான் அரசியலில் டம்மி பீஸ் ஆயிட்டேன். ஏதோ பொம்மலாட்டத்துல டெம்ப்ரவரியா ஆடிக்கிட்டிருக்கேன். உனக்குப் புரியுறமாதிரி சொல்றேன். நீ அம்பியா இருக்கும்போது, அந்நியன் இருக்க மாட்டான். ரெமோவா இருக்கும்போது, அம்பி வரமாட்டானில்லையா... அது மாதிரிதான். ஆளை விட்டுடு!"

''அதெல்லாம் முடியாது. புருடாபுராணத்தின்படி நீங்க தமிழ்நாட்டுக்கு வந்து காலையில 'உளியின் ஓசை’, மதியம் 'விருதகிரி’, சாயந்தரம் 'லத்திகா’ மூணு படத்தையும் மூணு ஷோ 30 நாள் பார்க்கணும்!''

''ஐயோ, ஐயோ. இப்படி ஒரு கொடுமையான தண்டனையைக் காதாலகூட கேட்க விரும்பலை. சொன்னாக் கேளு. நான் உன்னோட நண்பன். இப்போகூட 'சில்லறை வணிகத்தில அந்நிய முதலீடு’தானே கொண்டுவரப்போறோம். வேணும்னா உனக்கு எவ்வளவு கமிஷன் வேணுமோ அதை வாங்கிக்க'' என்றபடி நைஸாக நாராயணசாமிக்கு போன் போட முயல, தெறித்து ஓடுகிறான் அந்நியன்.

- ரகோத்தமன்