Published:Updated:

எல்லாம் ஒரு விளம்பரம்தேன்!

எல்லாம் ஒரு விளம்பரம்தேன்!

டி.எம்.டி. கம்பி விளம்பரத்தில் நமீதாவை நடிக்கவைத்தவர்கள் உண்மையில் பெரும் கலைஞர்களாகத்தான் இருக்க முடியும். (மச்சான்ஸ் மறந்துடாதீங்க... கிஸ் கிஸ் கிஸ்கால்!)  இதோ நம் பிரபலங்கள் எந்தெந்த விளம்பரங்களில் நடித்தால் அம்சமாய்... பொருத்தமாய் இருக்கும்? வாங்க அதையும் ஒரு பார்வை பார்ப்போம்!

எல்லாம் ஒரு விளம்பரம்தேன்!

ராமதாஸ்: ''என்னோட மாம்பழத் தாகத்துக்கு கூஸாதான் தீர்வு. சீசனில்லா சீசனிலும் சீசாவுக்குள் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் அசல் மாம்பழத்தின் சுவை. புத்தம் புதிய மஞ்சள் பேக்கில் உங்கள் கைகளில். குடித்த பிறகு மறக்காமல் மாம்பழ பட்டனில் ஓட்டுப் போடுங்க!''

ஞானதேசிகன்: ''கட்டுறுதியான காளையர்களுக்கு காம்ராஜ் வேட்டிகள். சண்டையில் கிழியாத கம்பீரமான வேட்டிகளுக்கு 100 சதவிகித பாலியெஸ்டர். ஜீரோ சதவிகித வெட்கம் மானம் உள்ளவர்களுக்காகப் பிரத்யேகமாய் வடிவமைக்கப்பட்ட உன்னத வேட்டிகள். சல்யூட் சோனியாவுக்கு சே... சல்யூட் காம்ராஜுக்கு சல்யூட்!''  

விஜயகாந்த்: ''சென்னைக்குப் பக்கத்தில விருத்தாசலம் தாண்டி நாம நின்னுக்கிட்டு இருக்கிற கொல்லக்காடு சைட்டுக்குப் பேரு அருள்மிகு கள்ளழகர் ரியல் ப்ரொமோட்டர்ஸ் டிலைட் சிட்டி. இந்த அருமையான சைட்டுல ஒரு அடி வாங்கினா, 50 அடி ஃப்ரீ. சைட்டுல  நீங்க வாங்குற ஒவ்வொரு அடிக்கும் ஒரு அடி ஸ்கேல் வீட்டுக்கு வந்து கொடுக்கிறதா அறிவிச்சிருக்காங்க. அப்புறம் என்ன... புத்திசாலித்தனமா 400 சதுர அடியில இடம் வாங்கிப்போடுங்க. ஆங்!''

கருணாநிதி: ''கறை நல்லது. ஈழக் கறையானாலும் சரி... கீழக்கரையானாலும் சரி... பர்ஃப் எக்செல் சோப்புப் போட்டா, சரியாகிடும். எல்லாக் கறையையும் அஞ்சே நிமிஷத்தில் வெளுத்து வாங்கி, அடுத்த எலெக்ஷனில் உங்களை அப்பழுக்கில்லாத மனிதராக மாற்றிவிடும் அற்புதமான சோப் இது. இனி அந்தக் கறை இந்தக் கறைனு கவலை வேண்டாம். ஏன்னா கறை நல்லது!''

ஜெயலலிதா: ''பாசம் ஐ கேர்... நாங்க இருக்கோம். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலும் அதற்கு அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலும் உங்க கண்ணுக்குத் தெரியலேனாலும் பரவாயில்லை. எங்க கண்ணுக்கு நல்லாவே தெரியுது. தி.மு.க. கட்டிய கட்டடத்தை இந்தியாவிலேயே சிறப்பு வாய்ந்த பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றிவைத்திருக்கிறோம்!''

நாராயணசாமி: ''உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா? என்னது இல்லையா... என் டூத் பேஸ்ட்ல உப்பு, மொளகாப் பொடி, மல்லிப் பொடி, சாம்பார் பொடி எல்லாம் இருக்கு. அப்புறம் என்ன 15 நாளுக்கு ஒருவாட்டி பல்லு வெளக்கினாப் போதும். நீங்க வாயாலேயே வடை என்ன, அடைகூட சுடலாம். ஏன்னா, நானும் டென்டிஸ்ட்தான், நானும் டென்டிஸ்ட்தான்!''

வைகோ: ''டெலி பிராண்ட்ஸ். வாக் இன் ஹோம். எவ்வளவு நீண்ட நடைப்பயணமானாலும் நீங்கள் வீட்டுக்குள்ளேயே நடக்கலாம். இதுல பக்கவாட்டுல பிடிச்சுக்கிட்டே வணக்கம் போட்டு நடக்கிற வசதியும் இருக்கு. இதை நீங்க ஈஸியா மடக்கி உங்க சூட்கேஸுக்குள்ளேகூட வெச்சுக்கலாம். இனி நீங்க வீட்டுக்குள்ளேயே நடை பயணம் போகலாம்... இன்னும் சிம்பிளா. இதோட விலை... 99,999 மட்டுமே!''

- ஆர்.சரண்