Published:Updated:

''நாங்களும் த்ரீ இடியட்ஸ்தானுங்கோ!''

ம.கா.செந்தில்குமார், இர.ப்ரீத்தி, படம் : என்.விவேக்

''நாங்களும் த்ரீ இடியட்ஸ்தானுங்கோ!''

ம.கா.செந்தில்குமார், இர.ப்ரீத்தி, படம் : என்.விவேக்

Published:Updated:
##~##
''அ
ந்த த்ரீ இடியட்ஸ் முடியிறப்போ, முடியட்டும். அதுக்கு முன்னாடி நாம ஒரு 'த்ரீ இடியட்ஸ்’ மீட்டிங் போடுவோம்... ஓ.கே-வா?'' சிவா, சாந்தனு, ஷக்தி மூவருக்கும் மெசேஜ் தட்டினோம். பச்சைப் பூங்கா ஹோட்டலின் நீச்சல் குளக்கரையில் நிகழ்ந்தது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''வழக்கமா பொண்ணுங்களைத்தானே இப்படி மீட் பண்ண வெச்சு விரட்டி, மிரட்டி, வெரைட்டி போட்டோஸ் எடுப்பீங்க. என்ன பசங்க மேல திடீர் பரிவு!'' என்று ஓப்பனிங்கிலேயே சந்தேகம் கேட்டார் சாந்தனு. ''கூல் மச்சி... ஏதோ மறதியா ஏற்பாடு பண்ணிட்டாங்க. இப்ப அவங்களைச் சுதாரிக்கவெச்சு ஆட்டையைக் கலைச்சு விட்ராதப்பா!'' என்று அவரை அடக்கினார்கள் ஷக்தியும் சிவாவும்.

''நாங்களும் த்ரீ இடியட்ஸ்தானுங்கோ!''

''ஓ.கே. ஓ.கே... மீட்டிங்கை 'அகில உலக சூப்பர் ஸ்டார்’ தொடங்கிவைப்பார்!'' என ஷக்தி அறிவிக்க, தொண்டையைச் செருமிக்கொண்டு பேசத் துவங்குகிறார் சிவா. ''நம்ம ஃப்ரெண்டுங்க அப்பப்ப போன் பண்ணி, 'நான் ரஜினி பேசுறேன்’, 'கமல் பேசுறேன்’, 'ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் பேசுறேன்’னு கலாய்ப்பானுங்க. அப்படித்தான் ஒருநாள், 'நான் இராமநாராயணன் பேசுறேன்’னு ஒரு போன். 'சொல்டா மச்சான்... என்ன விஷயம்’னு நானும் கேஷ§வலாப் பேசுனேன். 'நான் இராமநாராயணன்தான் பேசுறேன்ப்பா’னு எதிர்முனை அழுத்திச் சொன்னதும், 'ஐயோ... ஸாரி சார், சொல்லுங்க’ன்னு பவ்யமானேன். 'கலாபவன் மணி, திலீப் நடிச்ச ஒரு மலையாளப் படத்தோட டி.வி.டி அனுப்பிவைக்கிறேன். அந்தப் படத்தை தமிழ்ல ரீ-மேக் பண்றேன். படம் பார்த்துட்டுச் சொல்லுங்க’ன்னார்.

படம் பார்த்தேன். முழு நீள காமெடி காக்டெயில். உடனே ஓ.கே. சொல் லிட்டேன். 'சிவா பூஜையில் கரடி’... இதுதான் படத்தோட டைட்டில். இன்டர்வெல் வரைக்கும் நான் நானா வருவேன். அப்புறம் கரடியா மாறிடு வேன். ரெண்டு மூணு வாரம் ஷூட்டிங் போயி முடிச்சுட்டு வந்தோம். 'அடுத்த ஷெட்யூல் எப்ப சார்’னு கேட்டேன். 'மொத்தப் படமுமே முடிஞ்சுருச்சுங்க’ன்னார் இராமநாராயணன் சார். தட தடனு 25 நாள்ல மொத்தப் படத் தையும் முடிச்சிட்டார்!'' என்ற சிவா, ஸ்டைல் லுக் ஒன்றைப் பறக்கவிட, எழுந்து நின்று கை தட்டி மரியாதை செய்தார்கள் சாந்தனுவும் ஷக்தியும்.  

''உங்களுக்கு என்ன பாஸ்... காமெடி, கலாட்டானு எந்தப் பிரஷரும் இல்லாம நடிச்சிட்டுப் போயிட்டே இருக் கீங்க! ஆனா, 'சினிமா ஃபேமிலி’ங்கிற பிரஷர் பின்னணியோடுதான் நாங்க சிரிக்கக்கூட வேண்டி இருக்கு!'' என்று கோரஸில் இருவரும் வருத்தம் தொனிக்க... ஆறுதலாகப் பேசினார் சிவா. ''ஆமா பாஸ்... நீங்க சொல்றது உண்மைதான். 'வாசு சார் பையன்’, 'பாக்யராஜ் சார் பையன்’னு அவங்க மேல இருக்குற எதிர்பார்ப் போடுதான் உங்களையும் எதிர்கொள்வாங்க. கஷ்டம்தான். எப்படிப் பண்ணினாலும், ஏதாவது குறை கண்டுபிடிப்பாங்க. அதை எல்லாம் தாண்டித்தான் வரணும்!''

உடனே இருவர் கண்களிலும் உற்சாக பல்ப். 'நண்பேன்டா!’ என்று சிவாவின் தோளை இறுக்கிக்கொண்டார்கள்.

ஷக்தி தொடர்ந்தார்... ''இப்பவும் எப்பவும் எந்த பந்தாவும் இல்லாம இருக்கணும்கிறது மட்டும்தான் சினிமாவில் அதுக்குள்ள கத்துக்கிட்ட பெரிய பாடம். ரஜினி சார், கமல் சார்லாம் சின்ன ஹீரோ, பெரிய ஹீரோன்னு எந்தப் பாகுபாடும் இல்லாம ஃப்ரெண்ட்லியாப் பழகி ஆச்சர்யப்படுத்துவாங்க. 'சின்னத்தம்பி’, 'மன்னன்’னு அப்ப நான் குழந்தை நட்சத்திரமா நடிச்சிட்டு இருந்த சமயம், 'வாங்க ஹீரோ என்ன படம் பண்ணிட்டு இருக்கீங்க?’ன்னு ரஜினி சார் அப்போ கலாய்ப்பார். கமல் சாரும் என் மேல் அக்கறையா இருப்பார். எனக்கு ஏழு வயசு இருக்கும்னு நினைக்கிறேன். ஒரு ஷூட்டிங் ஸ்பாட்ல கமல் சார் என்னை மடியில் தூக்கி உக்காரவெச்சுக் கொஞ்சிட்டு இருந்தார்.திடீர்னு, 'உனக்கு நீதானே டப்பிங் பேசுற?’ன்னு கேட்டார். நான் இல்லைன்னு சொன்னேன். சட்டுனு அவருக்குக் கோபம் வந்துருச்சு. உடனே, என்னை மடியில் இருந்து இறக்கிவிட்டுட்டு, 'உனக்கு வேற யாரோ ஒருத்தங்க டப்பிங் பேசுறாங்கனு சொல்ல வெட்கமா இல்லையா?’ன்னு கேட்டார். குழந்தையா இருந்தாலும் நடிப்புன்னு வந்துட்டா, பெர்ஃபக்ஷன் முக்கியம்னு அப்பவே அவர்கிட்ட பாடம் கத்துக்கிட்டேன்!

இதைச் சொன்னா சோனு (சாந்தனு) கோச்சுக்குவான். ஏன்னா, அவன் விஜய் ஃபேன். நான் அஜீத் ஃபேன். 'தொட்டால் பூ மலரும்’ சமயத்தில் ரஜினி சார் என்கிட்ட, 'நீ அஜீத் மாதிரி வருவ’ன்னு சொன்னார். 'நினைத்தாலே இனிக்கும்’ படம் பார்த்துட்டு, 'ஷக்தி உன் கேரக்டர் எனக்கு ரொம்பப் பிடிச்சு இருந்துச்சு. இந்த மாதிரி ஸ்க்ரிப்ட் தேடித் தேடிப் பண்ணு’ன்னு சொன்னார். அதே மாதிரி அஜீத் சாரும், 'அரபு நாடே’ பாட்டு பார்த்துட்டு என் டான்ஸை மனசு விட்டுப் பாராட்டினதை மறக்க முடியாது!'' என்று ஷக்தி சொல்ல, அவசரமாக இடை மறித்தார் சிவா.

''நாங்களும் த்ரீ இடியட்ஸ்தானுங்கோ!''

''இங்கே ஓர் அகில உலக சூப்பர் ஸ்டார் இருக்கேன்கிறதையே மறந்துட்டு ரஜினி, கமல்னு ஆளாளுக்கு ஃபீலிங்ஸ் வுடுறீங்க. என் டான்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் பத்தி உங்களுக்குத் தெரியும்தானே! சாம்பிளுக்கு ஒண்ணு சொல்றேன்... கேளுங்க! மலேசியா வுல ஒரு பாட்டு ஸீன். ரொம்பப் பிரபலமான டான்ஸ் மாஸ்டர். காலையில் இருந்து சாயங்காலம் வரை என்னை ஆடவைக்க முயற்சி பண்ணி... அப்புறம் ஆட்டிவைக்க முட்டி மோதி... நொந்து நூடுல்ஸாகி உட்கார்ந்துட்டார். அப்போ பார்த்து சென்னையில இருந்து அவர் பையன் அவருக்கு போன் பண்ணான். 'அப்பாஸ்கூல்ல ஒரு டான்ஸ் காம்பெடிஷன். அதுக்கு சிவாதான் ஜட்ஜா வரணும்னு ஸ்கூல்ல ஆசைப்படுறாங்க. அவர்கிட்ட பெர்மிஷன் வாங்கித் தர்றீங்களா?’ன்னு கேட்குறான் பையன். கட் பண்ணா, அந்த மாஸ்டர் செல்போனையும் என் ஸ்டெப்ஸையும் சிங்க் பண்ணிப் பார்த்துட்டு 'போனை வைடா’ன்னு பையனைக் கன்னாபின்னானு திட்டிவுட்டார். ஒவ்வொரு தடவையும் வேற வேற மாதிரி எப்படி ஆடுறதுன்னு என்கிட்டதான் கத்துக்கணும்னு கோடம்பாக்கத்துல எல்லா டான்ஸ் மாஸ்டர்களும் சொல்வாங்க தெரியும்ல!'' என்று சிவா பஞ்ச் வைக்க, அதற்கு அப்பீலே இல்லை இருவரிடமும்!