Published:Updated:

இமானுவேல் டு இமான் அண்ணாச்சி!

க.ராஜீவ் காந்தி, படங்கள்: பொன்.காசிராஜன், ஆ.முத்துக்குமார்

இமானுவேல் டு இமான் அண்ணாச்சி!

க.ராஜீவ் காந்தி, படங்கள்: பொன்.காசிராஜன், ஆ.முத்துக்குமார்

Published:Updated:
##~##

மானுவேல், 'இமான் அண்ணாச்சி’ ஆன கதை என்ன?

 ''ஏயப்பா... அது 30 வருஷத்துக் கதையாச்சே... மொத்தத்தையும் கேக்குதீயளா? சொல்லிப்போடுறேன்... கேட்டுக்கிடுங்க!'' என்று வசதியாகச் சாய்ந்து அமர்ந்துகொள்கிறார் இமான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தூத்துக்குடி ஏரல் பக்கத்துல திருவழுதிநாடார்விளைதாம்ணே நம்ம கிராமம். எனக்கு 12 வயசா இருந்தப்போ, அப்பா

தவறிட்டாரு. நமக்குச் சின்ன வயசுல இருந்தே நாடகம்னா உசுரு. எந்த ஊர்ல நாடகம் போட்டாலும் முதல் வரிசைல நிப்பேன். 10 வயசுல நான் முதல் நாடகம் நடிச்சேன். அப்போ ஆனந்த விகடன்ல வந்த ஜோக்குகளைச் சேர்த்துவெச்சுக்கிட்டு அதுக்கு ஒரு இன்ட்ரோ கொடுத்து, 'ஏலேய்... சிரிக்கலைன்னா விடமாட்டேம்ல’னு நடிப்பேன். அப்படியே நடிப்பு ஆசை முத்தி, காமராஜர் கலைக் குழுனு ஒண்ணு ஆரம்பிச்சு, ஊர் திருவிழாக்கள்ல கெஞ்சிக் கூத்தாடி அனுமதி வாங்கி நாடகம் போடுவோம். சம்பாத் தியத்துக்காக மளிகைக் கடை வேலையும் பார்த்தேன்.

அப்ப என் நாடகங்களைப் பார்த்தவங்க சும்மா கெடக்காம, 'எலே... நீ சூப்பரு. சினிமால நடிக்கப் போடே’னு கிளப்பிவிட்டுட்டாங்க. 1984-ல என் மொத முயற்சி ஆரம்பிக்குதுண்ணே... மளிகைக் கடை சம்பளத்துல 500 ரூபாய் கைல சேர்ந்துச்சு. உடனே மெட்ராஸுக்குக் கிளம்பி வந்து பாரதிராஜா சார் ஆபீஸ் வாசலுக்குப் போய் நின்னுட்டேன். ஆனா, அங்கே யாருமே நம்மளைக் கண்டுக்கிட மாட்டாங்க. அப்ப டிரெய்ன் டிக்கெட் 35 ரூபா. அந்த அமவுன்ட் தீர்ற வரை மெட்ராஸ்ல இருந்துட்டு, அப்புறம் ஊருக்கு டிரெய்ன் ஏறிடுவேன். திரும்ப 500 ரூபா சேர்ந்ததும் மெட்ராஸ் விசிட். இப்படியே ஓடுச்சு பொழப்பு.

இமானுவேல் டு இமான் அண்ணாச்சி!

ஒரு கட்டத்துல மெட்ராஸ்லயே தங்கி வாய்ப்பு தேடினேன். சின்னச் சின்னதா நிறைய சினிமா கம்பெனிகள்ல வேலை பார்த்தேன். கார் கழுவ, சாப்பாடு வாங்க, வீட்டு வேலை பார்க்கனு மாசம் கரைஞ்சுதே தவிர, வேற எதுவும் உருப்படியா ஆகலை. அண்ணன்கிட்ட பணம் வாங்கி, ஒரு பழைய டிரை சைக்கிள் வாங்கி காய்கறிக் கடை போட்டேன். கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு எதிர்லதான் முதல் போணி. இன்னிக்கு இப்படிக் கூச்சம் பார்க்காமப் பேசுற இமான், அன்னைக்குக் காய்கறியைக் கூவி விக்கக் கூச்சப்பட்ட காலம் அது. வியாபார நேரம் போக மத்த நேரம்லாம் சினிமா தேடல்தான்.

இமானுவேல் டு இமான் அண்ணாச்சி!

2002-ல கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் ஆகிடுச்சு. வீட்டுக்காரி நகைகளைக் கொஞ்சம் கொஞ்சமா 'வெச்சு வெச்சு’ குடும்பச் செலவைச் சமாளிச்சேன். 'பாஸ்போர்ட் இருந்தா ஃபாரின் நிகழ்ச்சிகளுக்குப் போகலாம்... நிறையக் காசு வரும்’னு ஒரு நண்பர் சொல்ல, பொண்டாட்டியோட தாலியும் சேட்டுக் கடைக்குப் போச்சு. ஆனா, ஃபாரின் சென்ட் கூடக் கைல சிக்கல.

கிட்டத்தட்ட 16 வருஷம் இப்படியே போயிடுச்சு. அப்பதான் விஜய் டி.வி-ல 'கலக்கப்போவது யாரு?’ நிகழ்ச்சி ஆரம்பிச்சது. அதுல நமக்கே நமக்குனு ஒரு அடையாளம் வேணும்னு நெல்லை ஸ்லாங்ல பேச ஆரம்பிச்சேன். அப்பதான் இமான் அண்ணாச்சிங்கிற பேரு வந்துச்சு. அதுல கிடைச்ச அறிமுகங்கள் மூலமா, மக்கள் டி.வி-ல என்னைக் கூப்பிட்டுவிட்டாங்க.

ஏதோ ஒரு நிகழ்ச்சினு நினைச்சுப்போனா, 'கொஞ்சம் அரட்டை... கொஞ்சம் சேட்டை’னு நேரடி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பு. '38 வயசுல அட்டைக் கறுப்பா இருக்கேன். என்னை யாராவது காம்பியரா ஏத்துப்பாங்களா’னு யோசிச்சு வேணாம்னுட்டேன். இயக்குநர் ப்ரியன் சார்தான் விடாம நம்பிக்கை கொடுத்து, என்னை அந்த நிகழ்ச்சி பண்ண வெச்சார். ரொம்ப நல்ல பேர் கிடைச்சது. அப்படி அப்படியே சினிமாவிலும் சின்னச் சின்ன வாய்ப்புகள் வந்தன. இப்ப நாலு படங்கள்ல ஸோலோ காமெடியனா நடிச்சுட்டு இருக்கேன்.

இமானுவேல் டு இமான் அண்ணாச்சி!

சினிமால எனக்கு மூணு பேர்தான் ரோல் மாடல். 'டணால்’ தங்கவேலு, பாலையா, வி.கே.ராமசாமி... இவங்க மூணு பேரோட இடமும் தமிழ் சினிமால இன்னும் காலியாத்தான் இருக்கு. அந்த இடத்தை லேசாத் தொட்டாலே போதும். நம்மளை ஸ்க்ரீன்ல பார்த்தாலே சிரிப்பு வரணும்... அவ்வளவுதான்.

என்னதான் சினிமா ஆசைல திரிஞ்சாலும், இந்தக் குழந்தைங்க நிகழ்ச்சி பண்றது எனக்கே பெரிய சந்தோஷமா இருக்குங்க. எப்படித்தான் என் நம்பரைக் கண்டுபிடிக்கிறாங்களோ தெரியலை... திடீர் திடீர்னு என் லைன்ல சுட்டிக் குழந்தைங்க வந்து, 'அங்கிள்... ஹவ் ஆர் யூ? குளிச்சீங்களா? கவுண்டமணி ஆபீஸ் கம்பவுண்டர் நீங்கதானே’னு கலாய்க்குறாங்க!'' என இமான் சொல்ல, அருகில் நின்றுகொண்டு இருந்த அவரது மகள் ஜெஃபி ஷைனி, ''அப்பா நான் என் கிளாஸ்ல நாலே நாலு ஃப்ரெண்ட்ஸுக்கு மட்டும்தான் உங்க நம்பர் கொடுத்தேன். அதுவும் அவங்க கெஞ்சிக் கேட்டதாலதான் கொடுத்தேன். இனிமே யாருக்கும் கொடுக்க மாட்டேன்!'' என்று சிரித்தாள்.

''அடி வாலு... நீதான் என்னைய மாட்டிவிடறதா?'' என்று இமான் ஷைனியைத் துரத்த... அப்பா - மகள் ஆட்டத்தை ரசிக்கிறார் இமானின் மனைவி ஆக்னஸ் ப்ரியா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism