முட்டைனா கேவலமா?

அம்மா சிறுவயதில் அவித்த முட்டையோடு சேர்த்து நமக்கு புவ்வா ஊட்டுவார்களே, அப்போதிலிருந்து பள்ளிக்கூட பரீட்சைத்தாள், சத்துணவுக் கூடம், அரசியல் மேடைகள், டாஸ்மாக் கடை என இந்த முட்டையின் பயணம் நம்மோடு தொடர்ந்து நிகழ்ந்துகொண்டு இருப்பதைக் கவனியுங்கள். 'கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா’ என்பது தமிழர்கள் ரொம்ப நாளாகத் தலையைப் பிய்த்துக்கொள்ளும் கேள்வி. 'கோழி முன்னாடி வந்ததோ... முட்டை முன்னாடி வந்ததோ... கோழி முட்டை என்பது கோழிக்குப் பின்னாடி இருந்துதான் வரும்’ என்பது ஆய்வாளர்கள் கண்டறிந்த முடிவு.
நம்ம ஆட்கள் ஓட்டலுக்குச் சாப்பிடப்போனால் முட்டையில்தான் என்னென்ன விதமான அயிட்டங்கள் கேட்கிறார்கள் பாருங்கள், அவிச்ச முட்டை, முட்டை பொடிமாஸ், முட்டை மசாலா, முட்டைப் பொறியல், ஆஃப் பாயில், ஒன் சைடு ஆம்லேட், ஆம்லேட், ஃபுல் பாயில், டபுள் ஆம்லேட், கலக்கி, கரண்டி ஆம்லேட்.....ஸ்ஸ்ஸ்ஸப்பா. முட்டையில் இருந்து ஆம்லேட் போடலாம் என்பதைக் கண்டுபிடித்தது வேண்டுமானால் வெள்ளைக்காரர்களாய் இருக்கலாம். ஆனால், அதில் இத்தனை அயிட்டத்தைக் கண்டுபிடிச்சது யாரு, நம்ம பயகதானே? அதுமட்டுமா, ஆம்லேட்டைத் தோசைக்கல்லில் மட்டுமல்ல, நடிகையின் தொப்புளிலும் போடலாம் என்று கண்டுபிடித்ததில்... அங்கதான் நிக்கிறான் தமிழன்!
சரி, அரசியலுக்கு வருவோம். காமராஜர் முதலில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தார். அதையே லைட்டாகப் பேர் மாத்தி, எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் கொண்டுவந்தார். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் 13 வருஷம் ஆட்சிக்கே வர முடியாமல் எதிர்க்கட்சித் தலைவராகவே இருந்த கலைஞர், எம்.ஜி.ஆர் இறந்த பிறகு ஆட்சிக்கு வந்தார். 'எப்டிறா எம்.ஜி.ஆரை பீட் பண்றது?’னு யோசிச்சவர் போட்டார்ல... சத்துணவில் முட்டை. அப்புறம் அது பாட்டுக்கு வாரத்துக்கு ஒண்ணு ரெண்டுனு போய்க்கிட்டே இருக்குல்ல!
தமிழகத்தில் பல அரசியல் மேடைகளில் முட்டை எறியப்பட்டு அதில் அடி வாங்கியவர்கள்தான் இன்று மூத்த அரசியல்வாதிகளாக மாறியுள்ளனர் என்பதை யாராலும் மறுக்க முடியுமா? இவர்களில் பலர் பள்ளிக்கூட பரீட்சையில்கூட முட்டை வாங்கியவர்கள்தான். அதனால், புதிய கட்சி தொடங்குபவர்கள் யாராவது முட்டையைத் தனது சின்னமாக வைத்து நன்றி செலுத்துங்கள்.
வணிகத்தை எடுத்துக்கொள்ளுங்கள், நாமக்கல் மாவட்டத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுசென்றது இந்த முட்டைதான். ராணா டார் முறுக்குக் கம்பிகள் வருவதற்கு முன் ஆதிகால வீடுகளுக்குக் கம்பீரத்தையும் வலிமையையும் சேர்த்தது இந்த முட்டைதான். ஜிம்மிற்குச் செல்லும் இளைஞர்களைக் கேளுங்கள், இந்த முட்டை எத்தனை தடகள வீரர்களையும் மல்யுத்த வீரர்களையும் வார்த்தெடுத்திருக்கிறது என்று. முட்டை மந்திரிக்கும் நம்ம ஊர் டுபாக்கூர் சாமியார்களைக் கேளுங்கள், முட்டை எங்கள் குலசாமி என்பார்கள். முட்டை என்று ஒன்று இல்லாவிட்டால்... இன்று கணிதம் இல்லை, கால்குலேட்டர் இல்லை, கம்ப்யூட்டர் இல்லை, ஏன் உனக்கும் எனக்கும் சம்பளமே இல்லையே, ஆக முட்டைக்கு ஒரு முட்டை (ஷீ) போடு!
- சத்யா சுரேஷ்