டி.அருள் எழிலன், படம்: கே.ராஜசேகரன்
##~## |
"ஒளிக்கும் உணர்வுகளுக்கும் இடையே ஆழமான தொடர்பு இருக்கிறது என்று நான் உணர்ந்ததை 'பரதேசி’ பட ஒளிப்பதிவில் முழுமையாக முயன்றுபார்த்திருக்கிறேன். இது ஒருவிதமான பரிசோதனைதான். அதற்குரிய பாராட்டுகளும் வெற்றியும் கிடைத்திருப்பதில் சந்தோஷம். அந்த வகையில் இதுதான் என் முதல் படம்!''- தன்னடக்கத்துடன் பேசுகிறார் செழியன்.
'பரதேசி’ படத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அவல வாழ்வை அதன் இருண்மைகளோடு ஒளிப்பதிவு செய்திருக்கும் செழியன், சிவகங்கைக்காரர். விகடன் வாசகர்களுக்கு 'உலக சினிமா’ தொடர் மூலமாக நன்கு அறிமுகமானவர்.
''பாலா என் மீதும் என் வளர்ச்சியின் மீதும் மிகுந்த அக்கறை உள்ளவர். என் சினிமா சார்ந்த தேடல்களை அறிந்தவர். ஒரு நாள் என்னிடம் 'ரெட் டீ’ ஆங்கில நாவலைக் கொடுத்து வாசிக்கச் சொன்னார். வாசித்துவிட்டுச் சென்றபோது, 'இருபதாம் நூற்றாண்டின் துவக்கக் காலம் என்பதாலும் தமிழர்களின் மறைக்கப்பட்ட வரலாற்றைச் சொல்வதாலும் ஒரு சர்வதேச முயற்சியாக இதைச் செய்துபார்க்கலாமா செழியன்?’ என்று கேட்டார். நான் விரும்பும் சினிமாவாக 'பரதேசி’ திரைக்கதை அமைந்திருந்தது எனக்குப் பிரமிப்பாக இருந்தது. அந்த நாளில் இருந்து ஒவ்வோர் இலையாகக் கதை வளர்கிற தருணங்கள் அனைத்திலும் பாலாவுடன் இருந்தேன். எப்போதும் கற்றுக் கொள்ளும் மனநிலையிலேயே இருந்தேன். 'ஷாட் ரெடி’ எனும்போதுதான் நான் ஒளிப்பதிவாளர் ஆவேன். அது வரை நான் ஓர் உதவி இயக்குநர்.

தேயிலைகுறித்த நிறைய ஆவணங்கள் சேகரித்தோம். அருங்காட்சியகங்கள் பார்த்தோம். இலங்கை வரை சென்று தேயிலைத் தோட்டங்களில் சுற்றினோம். நானும் தனியாக தோட்டத் தொழிலாளர் கள் குறித்து வாசித்தும் அதுகுறித்த நிழற்படங்களைச் சேகரித்தும் என்னைத் தயார்படுத்திக்கொண்டேன்!'' என்கிற செழியனுக்கு இது ஐந்தாவது படம்.

''பாலாவுடன் பணிபுரிகிறேன் என்று முடிவானதும் அவர் எடுத்த ஐந்து படங்களையும் திரும்பவும் ஒருசேரப் பார்த்தேன். முகபாவனையிலும் உடல்மொழியிலும் அவர் கவனம் செலுத்துகிறார். அதிகமான க்ளோஸ்அப்களைப் பயன்படுத்துகிறார். இந்த க்ளோஸ்அப்களைக் கொஞ்சம் தவிர்க்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். 'எந்த எக்யூப்மென்ட்டும் வாங்கிக்கங்க?’ என்று சுதந்திரம் அளித்தவர், 'இதுல புதுசா என்ன செய்யப்போறீங்க?’ என்று ஆர்வமும் எதிர்பார்ப்புமாக என்னிடம் விசாரித்துக்கொண்டே இருந்தார். 'இருள் என்பது குறைந்த ஒளி’ என்பதை உணர்வது வேறு. அதைச் செய்யத் துணிவது வேறு. அந்தத் துணிச்சலை பாலாதான் எனக்குக் கொடுத்தார். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்த நாள் எடுக்க வேண்டிய காட்சிகளைப் பற்றிப் பேசுவார். 'எப்படி எடுக்கலாம்..? எப்படி இருக்க வேண்டும்..?’ என்பதையெல்லாம் விரிவாகச் சொல்வார்.
'பரதேசி’யைப் பொறுத்தவரை இருவேறு நிலங்கள் இதில் வருகின்றன. ஒன்று, வறுமை மிகுந்த சாலூர். இன்னொன்று, பச்சை மலை. கிராமம் வறட்சியாக இருக்கும்... ஆனால், அவர்கள் சந்தோஷமாக இருந்தார்கள். தோட்டம் பசுமையாக இருக்கும்... அங்கே அவர்கள் துயரப்பட்டார்கள். இந்த வாழ்வின் முரணை எப்படிக் காட்சியாக்குவது? கிராமத்தில் கேமராவின் நகர்வுகள் ஒருவிதமான அமைதியுடன் இருக்கும். பயணப் பாடல் துவங்கியதில் இருந்து கேமராவும் தன் அமைதியை இழந்துவிடும். பச்சை என்பது வளத்தையும் சந்தோஷத்தையும் குறிக்கும் நிறம். அந்தப் பசுமையைப் பின்னணியாகக்கொண்டு ஒரு சோகக் கதையைச் சொல்ல வேண்டும். 'பரதேசி’யில் காட்சிரீதியாக எனக்கு இருந்த சவால் இதுதான்.
சினிமா என் தொழில். கொஞ்சம் தீவிரமாகச் சொன்னால் சினிமா, என் தியானம். மேலோட்டமாகச் சொன்னால், சினிமா என் விளையாட்டு. அதனால்தான் சினிமாவின் அஸ்திவாரமாகத் திரைக்கதையை ஆங்கிலத்தில் screen play என்று குறிப்பிடுகிறார்கள் என நினைக்கிறேன். 'பரதேசி’க்கு ரசிகர்களிடையே மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்திருக்கிறது. என் சினிமா ஆசிரியர் பி.சி.ஸ்ரீராம் சாரிடம் சென்று, 'சார்... நீங்கள் படம் பார்க்க வேண்டும்’ என்று அழைத்தேன். இந்தத் தைரியத்தை 'பரதேசி’தான் எனக்குக் கொடுத்தான். மற்ற எல்லாவற்றையும்விட மிகச் சிறப்பாக நான் நினைப்பது இதைத்தான்!''
''அடுத்து என்ன?''
'' 'உங்களுக்குப் பிடிக்காத எதையும் செய்யாதீங்க’ என்று சொல்லும் மனைவி. 'நல்ல படமே எடுப்பா’ என்று சொல்கிற குழந்தைகள் என்னுடன் இருக்கிறார்கள். எந்த ரயிலையும் ஓடிப் பிடிக்கிற அவசரம் எனக்கு இல்லை. நான்கைந்து வாய்ப்புகள் இருக்கின்றன. எது முதலில் என்று தெரியவில்லை. படப்பிடிப்பு இருந்தால் கேமரா. இல்லையென்றால் பேனா. எழுதுவதற்கு நிறைய இருக்கிறது. அதைவிடவும் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் நிறைய விஷயங்கள் இருக்கின்றனவே!''