Published:Updated:

தந்தை ராமசாமி

கவிப்பேரரசு வைரமுத்து

தந்தை ராமசாமி

கவிப்பேரரசு வைரமுத்து

Published:Updated:
தந்தை ராமசாமி
##~##

ரணக் கணக்கு சொல்கிறது: 'உன் தந்தையார் இன்றில்லை.’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனக் கணக்கு சொல்கிறது: ''இன்னும்  இருக்கிறார் எனக்குள்!''

'ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பின் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினுள் மூழ்கி நினைப் பொழிந்தார்களே!’

என்று பாடிய திரிகால ஞானியே... திருமூலரே!

நினைப்பொழிய முடியவில்லை; நெஞ்சின் பாரம் வடியவில்லை.

சுடவில்லை; புதைத்தோம்.

மண்டியிட்டு மண் தள்ளியபோது ஆழ்குழிக்குள் எட்டிப் பார்த்தேன் என் உடலுக்கு உயிர்மூலம் தந்தவனின் உடலை.

முடி கழிந்த முதுபெரும் தலை.

அறிவின் வெற்றிபோல் ஒரு நெற்றி.

சாத்திவைத்த வாள்போல் நேர்த்தியான நாசி.

சொல்லும் பொருளும்போல இணைந்து மூடிக்கிடந்த இதழ்கள்.

ஒரு தென்னைமரம்போல் தொப்பை விழாத வயிறு;

வெட்டியானின் கணக்குக்கு உட்படாத நீண்ட உடல்.

கடைசியில் என் கண்கள் நின்று நிலைத்து அழுததெல்லாம் அந்த நெடுங்கைகளில்.

காந்திக்கும் காமராசருக்கும் அமைந்ததுபோல் முழங்கால் கடக்கும் நீண்ட நெடுங்கைகள்.

அந்தக் கைகளுக்கும் எனக்குமான பந்தம் அற்புதமானது.

சின்ன வயதில் சில சமயம் என் மேல் சாட்டைபோல் விழுந்து சாத்திய கைகள்.

என்னைப் பள்ளிக்கூடம் சேர்த்தபோது பை சுமந்து வந்த கைகள்.

கிணற்றில் நீச்சல் பழகித் தந்தபோது என் அடிவயிறு தாங்கி ஆதரவு தந்த கைகள்.

பங்காளிச் சண்டையில் அவர் அரிவாள் எடுத்து ஆஜானுபாகுவாய் நின்றபோது ஒன்பது வயதுச் சிறுவனான நான் ஓடிப் போய் அவர் அரிவாள் உருவ, 'நீ சின்னப் பய, உனக்கொண்ணும் தெரியாதுடா' என்று என்னை உதறிய கைகள்.

தந்தை ராமசாமி

பதினொரு வயதில் என் முழங்காலில் வெறிநாய் கடிக்க, கால்விரல் இடுக்குவரை  ரத்தம் தேங்கி வழிய, வடுகபட்டி வீதியில் என்னை ஏந்திச் சுமந்து நடந்து குதிரை வண்டி ஏற்றிய கைகள்.

பச்சையப்பன் கல்லூரியில் சேர பெரியகுளத்தில் பேருந்தில் நான் அமர்ந்திருக்க, தாசில்தாரிடம் சண்டையிட்டு வாங்கி வந்த சாதிச் சான்றிதழை நகரும் பேருந்தில் இருக்கைக் கம்பிகளுக்குஇடையில் நுழைத்த கைகள்.

கபிலன் திருமணத்தில் நாங்கள் நான்கு தலைமுறைகள் வணங்கி வரவேற்ற நிகழ்வில், முதல் தலைமுறையாய் நின்று, 360 டிகிரி சுற்றி, வாழ்த்த வந்தோரை வணங்கிய கைகள்.

கடைசியாய் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் செயற்கைச் சுவாசக் கருவிகளோடு சிறைபட்டுக்கிடந்த வேளையில் என்னைப் பார்த்ததும், 'வந்துட்டியா. வா’ என்று ஜாடையில் அசைந்த கைகள் -

இப்போது ஆடாமல் அசையாமல்.

தந்தை ராமசாமி

ஒவ்வொரு பிறப்பும் கற்றுக்கொள்ளவருகிறது;

ஒவ்வோர் இறப்பும் கற்றுத்தந்து போகிறது.

இயல்பான மரணம் மூன்று நிலைகளைத் தாண்டுகிறது.

உறுப்புகள் தாமாகவே இயங்குவது ஒரு நிலை.

உறுப்புகள் மருந்துகளால் இயங்குவது இரண்டாம் நிலை.

உறுப்புகள்  எந்திரங்களால் இயங்குவது மூன்றாம் நிலை.

உறுப்புகள் எந்திரங்களால் இயங்கத்தொடங்கிவிட்டால், மரணம் பெரும்பாலும் வார்டுக்கு வெளியே வராண்டா வில் நிற்கிறது என்று பொருள்.

சிறுநீரகம் செய்த வேலையை எந்திரங்கள் செய்யத் தொடங்கியபோதே, நம்பிக்கையில் பாதி நசிந்துபோனது.

தந்தை ராமசாமி

இந்த மரணம் என் கர்வத்தின் மீதும்  கல்லெறிந்து போய்விட்டது.

இழவு வீட்டு வாசலில் பந்தலிட்ட தெருவில் உட்கார்ந்திருக்கிறேன்.

பாசமிக்க உறவுகளும் பண்புமிக்க நண்பர்களும் கூடிக் குவிந்துகொண்டே இருக்கிறார்கள்.

அந்தக் கூச்சல், அழுகை, கதறல்  தாண்டி இழவு வீட்டு ஒலிபெருக்கி பழைய பாடல் பாடுகிறது.

'மங்கல மாலை குங்குமம் யாவும்
தந்ததெல்லாம் நீதானே
மணமகளைத்  திருமகளாய்
நினைத்ததெல்லாம்  நீதானே!
என் மனதில் உன் மனதை
இணைத்ததும் நீதானே!
இறுதி வரை துணையிருப்பேன்
என்றதும் நீதானே!
இன்று சொன்னது நீதானா...?’

தேவிகா முத்துராமனைப் பார்த்துப் பாடுவது மறந்து போய் என் தாய் அங்கம்மாள், என் தந்தையைப் பார்த்துப் பாடுவதாகவே தோன்றியது.

நாதஸ்வரக்காரர் சுதி விட்டு அழுதுகொண்டிருந்தார்.

கண்ணீரைக் கைக்குட்டையில் துடைத்துக்கொண்டு கவனித்தேன்.

அவர் வாசித்த பாடலின் வார்த்தைகளைக் கண்டறிந்து மௌனத்தில் பாடியது மனது.

'மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு
பாவம் மனிதனென்று’

விஸ்வநாதனும் கண்ணதாசனும் கல்யாண வீட்டில் அட்சதை அரிசியாய்; இழவு வீட்டில் வாய்க்கரிசியாய்க் கட்டாயம் இடம் பெறுகிறார்கள்.

என் தந்தையின் மரணத்தில் என் பாடல் ஒன்றுகூட இடம்பெறவில்லை.

8,000 பாட்டெழுதியும் தந்தைக்கு ஓர் ஒப்பாரி எழுதவில்லை.

என்ன எழுதிவிட்டோம்? என்ன கிழித்துவிட்டோம்?

சாதித்துவிட்டோம் என்பதெல்லாம் சும்மா.

தந்தை ராமசாமி

எல்லாச் சத்தங்களும் என் செவிகளில் அழிந்து போக... இறந்துபோனவரின் குரல் மட்டுமே மனச்செவிகளில் ரீங்கரித்துக்கொண்டே இருந்தது.

சொற்களின் முதல் எழுத்தும் கடையெழுத்தும் தேயாத அவரது உச்சரிப்பு; சொற்களால் எதிராளியை மயக்கிவிடும் சூத்திரம். பேசும் பொருளுக்கேற்ற ஒலிப் பரிமாணம். எல்லாம் என் நினைவுகளில் கசிந்தன.

ஒருமுறை வடுகபட்டியில் அவரோடு உரையாடிக்கொண்டிருந்தபோது நண்பர் ரஜினிகாந்த் என்னைத் தொலைபேசியில் அழைத்தார்.

நான் பேசி முடித்துவிட்டு, 'ரஜினிகாந்த் பேசுகிறார்’ என்று என் தந்தை யாரிடம் தொலைபேசியைக் கொடுத்தேன்.

இரண்டு முறை மட்டுமே மேடைகளில் அவரைச் சந்தித்த என் தந்தை 50 வருடம் பழகியவரைப் போல அன்பு பாராட்டினார்.

'என்னப்பா ரஜினி... சௌக்கியமா? சுவரை வைத்துதான் சித்திரம். உடம்பை வைத்துதான் நீங்க. கண்ணும் கருத்துமா உடம்பைக்

கவனிக்கணும். இப்பவெல்லாம் கேளம்பாக்கம் பண்ணைக்கு அதிகமான போக்குவரத்து

இல்லையோ?'' என்றதும் நான் வியந்துபோனேன்.

எனக்கே தெரியாத செய்திகள் இவருக்கு எப்படித் தெரிகின்றன? இப்படித்தான் ஒவ்வோர் உறவு குறித்தும் ஆழ்ந்து அறிந்து அக்கறை காட்டுவார்.

தந்தை ராமசாமி

தந்தைக்கும் மகனுக்குமான உறவு தமிழ்ச் சமூகத்தில் எப்போதும் ஒரு பெரும் பிரச்னையாகவே திகழ்கிறது.

''நீ எங்கே பறந்தாலும் நூல் என் கையில் இருக்கட்டுமே!'' என்று தகப்பன் நினைக்கிறான்.

''என்னை விட்டுவிட்டால் இன்னும் கொஞ்சம் உயரப் பறப்பேனே!'' என்று மகன் தவிக்கிறான்

'விதைத்தவன் நான்தானே’ என்ற தினவு தந்தைக்கும், 'விளைந்தவன் நான்தானே’ என்ற திமிர் மகனுக்கும் எல்லாத் தலைமுறைகளிலும்  இருந்தேவருகிறது.

குடும்பம், அரசியல், தொழில் என்று எல்லா நிலைகளிலும் இதுவே நீள்கிறது.

இதனால் என் தந்தையும் நானும் சந்தித்த பிரச்னைகள் அதிகம்.

பல ஆண்டுகள் இருவரும் பேச்சுவார்த்தை இல்லாமலே இருந்திருக்கிறோம்.

அவருக்கு நன்மைகளைத் தவிர வேறெதுவும்  நான் செய்ததில்லை; ஆனால் அவரோ வைராக் கியத்தில் என்னை வதைத்திருக்கிறார்.

இப்போது மரணம் என் கன்னத்தில் அறைந்து சொல்கிறது:

''வைரமுத்து! உன் தந்தை இன்னும் கொஞ்சம் ஈரமுள்ளவராய் இருந்திருக்கலாம்.  நீ இன்னும் கொஞ்சம் இரக்கமுள்ளவனாய் இருந்திருக்கலாம்.'

நாங்கள் திருந்துவதற்குரிய வாய்ப்பைக் காலம் பறித்துவிட்டது.

இருக்கும் தலைமுறையாவது...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism