நெஞ்சத்தைக் கிள்ளுகிறார் மகேந்திரன்க.நாகப்பன், படங்கள்: கே.ராஜசேகரன்
##~## |
பிரார்த்தனையிலும் காமத்திலும்தான் ஐம்புலன்களும் ஐக்கியமாகி ஒரு புள்ளியில் குவியும்னு சொல்வாங்க. நான் அதில் படைப்புத் தொழிலான சினிமாவையும் சேர்த்துக்கிறேன்!'' - கண்களைச் சுருக்கிச் சிரிக்கிறார் மகேந்திரன். 'முள்ளும் மலரும்’, 'உதிரிப்பூக்கள்’, 'நெஞ்சத்தைக் கிள்ளாதே’, 'ஜானி’ உட்பட 12 படங்களில் தமிழ் சினிமாவின் திசையைப் புரட்டிப்போட்ட யதார்த்த இயக்குநர் இப்போது மீண்டும் களத்தில். சத்யராஜ் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கும் வேலைகளில் இருந்தவரைச் சந்தித்தோம்...
'' 'முள்ளும் மலரும்’ படம் வெளிவந்து 35 ஆண்டு களுக்குப் பிறகும் அந்தப் படம்குறித்த சிலாகிப்பும் சிலிர்ப்பும் இருக்கிறது. ஆனால், படம் உருவான காலகட்டத்தில் என்ன மாதிரியான அனுபவம் கிடைத்தது?''
''நான் சினிமா டைரக்டர் ஆகணும்னு ஊசிமுனை அளவுகூட விரும்பியது இல்லை. 'முள்ளும் மலரும்’ நாவலில் எனக்குப் பிடிச்ச சின்னச் சின்ன விஷயங்களை எடுத்து விஷ§வலுக்கு ஏத்த மாதிரி திரைக்கதை அமைச்சேன். எந்த சினிமாவிலும் பொதுவா படம் முழுக்கச் சண்டை போடுறவங்க, க்ளைமாக்ஸ்ல 'மன்னிச்சிடு’னு சொல்லி சமரசம் ஆகிடுவாங்க. ஆனா, 'முள்ளும் மலரும்’ படத்தில் நான் அப்படி ஒரு வழக்கமான க்ளைமாக்ஸ் வைக்கலை. காளி கொஞ்சம் மனசைச் சமாதானப்படுத்திக்குவானே தவிர, கடைசி வரை தன் இயல்பில் இருந்து மாற மாட்டான். தங்கச்சி கல்யாணத்துக்குச் சம்மதிச்ச பிறகும்கூட, 'இப்பவும் எனக்கு உங்களைப் பிடிக்கலை சார்’னு சரத்பாபுகிட்ட சொல்வான். மனித சுபாவம் அப்படித்தான்.

ரொம்ப ரசிச்சு ரசிச்சு... இழைச்சு இழைச்சு அந்தப் படத்தை எடுத்தேன். ஆனா, படத்தோட டபிள் பாசிட்டிவ் பார்த்துட்டு, 'அங்கே ஒரு டயலாக்... இங்கே ஒரு டயலாக் இருக்கு. என் தலையில மண்ணை வாரிப் போட்டுட்டியே’னு தயாரிப்பாளர் வேணு செட்டியார் கன்னாபின்னானு திட்டினார். செட்டியார் பையன் என்னை அடிக்கவே வந்தார். ஆனா, படம் வெளியாகி மூணு வாரத்துக்கு அப்புறம் பிளாக்ல டிக்கெட் விக்கிற அளவுக்கு ஹிட் ஆச்சு. 'இந்தா பிளாங்க் செக். எவ்வளவு பணம் வேணும்னாலும் எடுத்துக்கோ’னு சந்தோஷமாக் கொடுத்தார் வேணு செட்டியார். 'வேணாம்ணே... எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தீங்க. அது எத்தனையோ கோடிக்குச் சமம். அதுவே எனக்குப் போதும்’னு செக்கைத் திருப்பிக் கொடுத்துட்டேன். அந்தப் படத்தில் நடிச்சதுக்குத்தான் ரஜினிக்கும் ஸ்டேட் பெஸ்ட் ஆக்டர் விருது கிடைச்சது. ரஜினிக்குக் கிடைச்ச முதல் விருது என் படம் மூலமாக் கிடைச்சதில் எனக்கு டபுள் சந்தோஷம். அந்த 'முள்ளும் மலரும்’ நினைவுகள் இன்னும் எனக்குள் சந்தோஷத்தை விதைச்சிட்டுதான் இருக்கு!''
''அப்போதைய சினிமா சூழல் பிடிக்காமல்தான் நீங்கள் படம் இயக்கியதாக முந்தைய பேட்டிகளில் குறிப்பிட்டு இருந்தீர்கள். இப்போது தமிழ் சினிமா சூழல் எப்படி இருக்கிறது?''
''காளி சொன்ன அதே வசனம்தான்... 'இப்பவும் எனக்குப் பிடிக்கலை சார்!’ ஆரம்ப கால தமிழ் சினிமாவையே என்னால் ஏத்துக்க முடியலை. அப்போ புராண, இதிகாசக் கதைகளையும், நாடகங்களையும் மட்டுமே படங்களா எடுத்தோம். ஆனா, இப்பவும் டிராமா வடிவத்திலேயேதான் சினிமா இருக்கு. 1955-லேயே 'பதேர் பாஞ்சாலி’ படம் எடுத்துட்டார் சத்யஜித் ரே. அந்தக் காலகட்டத்தில்தான் அதீத நடிப்பு, அளவில்லாத பாடல்கள் வெச்சு ஹரிதாஸ், அசோக்குமார் படங்கள் எடுத்துட்டு இருந்தோம். 'பராசக்தி’, 'மனோகரா’ படங்களில் ரசிகர்களுக்கே வாய் வலிக்கிற அளவுக்கு வசனம் பேசுவாங்க. பல படங்கள் அழுவாச்சிக் காவியங்களா இருந்தன. கட்டாயக் கல்யாணமா இருந்தாலும் சேடிஸ்ட் புருஷனா இருக்கக் கூடாது. மனைவியின் உணர்வுகளுக்கு மரியாதை தர்ற நல்ல கணவனா இருக்கணும். இதைத்தான் நான் சினிமாவிலும் எதிர்பார்க்கிறேன்!''
''ஏன் இவ்வளவு விரக்தி. அப்படி தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடிக்காத அம்சம் என்ன?''
''ஏங்க... இந்தியாவுல எவ்வளவு ஊழல் நடக்குது. நிலக்கரி ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், மின்வெட்டுனு நாட்டுல எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், அது எதையுமே கண்டுக் காம, காதலை மட்டுமே படமா எடுத்துத் தள்றோம். வெளிநாட்டு மக்கள் இந்திய சினிமாக்களைப் பார்த்துட்டு, 'ஒவ்வொரு நாட்டுக் கும் ஒரு பிரச்னை இருக்கு. உங்க நாட்டுல 'ஐ லவ் யூ’ சொல்றது மட்டும்தான் சார் பிரச்னையா இருக்கு’னு கேலி பேசும் அளவுக்குத்தான் தமிழ் சினிமா இருக்கு. காதல் சொல்ல மெனக்கெடுறதுதான் சினிமாவா? லாஜிக் இல்லாத ஆக்ஷனும் டூயட்டும் எங்கேயும் ரீச் ஆகாது!''
''சரி... நல்ல சினிமாவா இருக்க எது அவசியம்?''
''வழக்கமான பாதையில் இருந்து கொஞ்சம் விலகினாலே அது நல்ல சினிமாதான். நல்ல சினிமாவுக்குப் பெரிய பட்ஜெட், பெரிய ஆர்ட்டிஸ்ட் தேவை இல்லை. மனசுதான் தேவை. உதாரணம் சொல்லி விளக்கும் அளவுக்குக்கூட இங்கே சூழல் இல்லை. பல மராட்டிய, இரானிய, கொரியன் படங்கள் தென்னிந்திய ரசிகர்களின் பார்வைக்கே வர்றதில்லை. மல்டிஃப்ளெக்ஸ் தியேட்டர்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் படங்களை மட்டும்தான் திரையிடுறாங்க. டி.வி, டி.வி.டி., திரைப்பட விழாக்கள்னு எங்கேயும் அப்படியான யதார்த்த சினிமாக்களைப் பார்க்க வாய்ப்பு இல்லாத சாமான்ய ரசிகனுக்கு, நாம காட்டுவதுதான் சினிமா. பாட்டு, டான்ஸ், ஃபைட் இருக்கும் மசாலாப் படம் பார்த்துட்டு, இதுக்கு மேல சினிமானு ஒண்ணு கிடையாதுனு நினைப்பாங்க. இப்படி ஒரே மாதிரி படங்கள் வர்றதால, மக்கள் அதைத்தான் விரும்பிப் பார்க்கிறாங்கபோலனு ஒரு கருத்துப் பிம்பம் உருவாகும். ஆனா, உண்மை என்ன? கேரளாவுல கமர்ஷியல் படங்களுக்கு நடுவில் பரீட்சார்த்த முயற்சிகளிலும் ஈடுபடு றாங்க. அதுக்கு மிக முக்கியக் காரணம், அங்கே தரமான இலக்கிய ரசனையின் மேல் சினிமா கட்டமைக் கப்பட்டு இருக்கு. மக்கள் மன நிலையை ஆரோக்கியமான திசை களை நோக்கி மோல்டு பண்ற கலை தான் சினிமா. சும்மா ரசிகர்களுக்குப் பிடிக்கும்னு தியேட்டர்ல அரட்டை அரங்கம் நடத்தக் கூடாது!''
(மேலும் மேலும் மகேந்திரன் உணர்ச்சிவசப்பட்டதால், உரையாடலைத் திசை திருப்பினேன்...)
''எம்.ஜி.ஆருக்கும் உங்களுக்கும் இடையில் நெருக்கமான அலைவரிசை இருந்ததே?''
''அழகப்பா கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் எம்.ஜி.ஆர். அவருக்கு முன்னால் நான் தமிழ் சினிமாவின் அபத்தங்களைப் புட்டுப்புட்டு வெச்சுப் பேசினேன். அப்பவே என்னைக் கவனிச்சிருக்கார் அவர். அப்புறம் சென்னைக்கு வந்து அவரோட அறிமுகமாகி, சினிமா வாய்ப்புகளில் எனக்கு பிரேக் கிடைக்காம மூணு தடவை நான் ஊருக்கே போயிரலாம்னு முடிவெடுத்தப்போ, 'வேண்டாம்’னு தடுத்து நிறுத்தியவர் அவர்தான். 'நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படம் மூணு தேசிய விருதுகள் ஜெயிச்சது. விருதுகளைப் பெற்றுக்கொள்ள டெல்லிக்குப் போனோம். அப்போ அங்கே எம்.ஜி.ஆரும் இருந்தார். அவர் கால்ல விருதைவெச்சு, 'இந்த விருதுக்கு நீங்கதான் காரணம்’னு சொன்னேன். 'குடத்துல இருக்குற விளக்கை எடுத்து வெளியேவெச்சேன். பிரகாசமா எரியுறது மகேந்திரன் சாமர்த்தியம். நான் ஏன் சினிமாவுக்கு உங்களை இழுத்துவந்தேன்னு இப்போ தெரிஞ்சுக்கிட்டீங்களா?’னு சிரிச்சார். 'நாளைக்கு ராமாபுரம் தோட்டத்துக்கு வாங்க. ஒரு முக்கியமான பொறுப்பை உங்ககிட்ட ஒப்படைக்கப்போறேன்’னு சொன்னார். பெரிய பொறுப்பு எதுவும் கொடுத்துருவாரோங்கிற பயத்துல நான் போகவே இல்லை. ஒருவேளை நான் அன்னைக்கு எம்.ஜி.ஆரைச் சந்திச்சிருந்தா என்ன நடந்திருக்கும், இப்போ நான் எங்கே இருப்பேன்னு என்னால் யூகிக்க முடியலை!''

''இப்போதைய தமிழ் சினிமாவில் உங்களை ஈர்த்திருக்கும் இயக்குநர்கள் யார்?''
''முதல் படம் நல்லா பண்ணியிருக்கார்னு ரொம்ப ஆர்வமா சிலருக்கு போன் பண்ணிப் பாராட்டுவேன். ஆனா, அறிமுக வாய்ப்பில் புதுமுகங்களை வெச்சு நல்ல படம் தருபவர், அடுத்த படத்திலேயே பெரிய ஆர்ட்டிஸ்ட், பெரிய பட்ஜெட்னு ரூட் மாறிடுறார். யாரையும் நம்ப முடியலை. உலக சினிமா டிரெண்ட் தெரிஞ்ச சின்சியர் இயக்குநர்களும் இங்கே இருக்காங்க. முதல் படத்துல திரும்பிப் பார்க்க வைத்த ஒரு இயக்குநர், அடுத்த படத்துலயும் சிந்திக்கவெச்சார். ஒரு படம் தோல்வி அடைஞ்சாலும் அலட்டிக்காமத் தன் பாணியைத் தொடர்ந்து சினிமா பண்ணிட்டு இருக்கார் இன்னொருத்தர். இப்படி ரெண்டு, மூணு இயக்குநர்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதே சமயம், ஒண்ணு, ரெண்டு படங்கள் மட்டும் நல்லா வர்றது தமிழ் சினிமாவுக்கு நல்லது இல்லையே!''
''உங்களுக்குப் பிறகு ரஜினிக்குள் இருக்கும் நடிகனை வேறு யாரும் கண்டுகொள்ளவே இல்லையே?''
''இன்னைக்கும் ரஜினி மகா நடிகன்தான். அதுல சந்தேகம் வேண்டாம். ரசிகர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாம் ரஜினி இப்படித்தான் இருக்கணும், நடிக்கணும்னு முடிவுபண்ணிட்டாங்க. ஆக்ஷன் படங்களில் நடிப்பது புலி வாலைப் பிடிச்ச மாதிரி. அதை ரஜினியாலும் விட முடியலை. சாண்டில்யனின் சரித்திர நாவல் ஜலதீபம். அதன் மூன்றாவது பாகத்தில் 'என் வழி தனி வழி’னு கடல் தளபதி கன்னோஜி சொல்வான். அதைத்தான் இப்போ ரஜினி செய்துட்டு இருக் கார். அமிதாப் பச்சன் நடிப்பை ரொம்ப சுலபமா கிராஸ் பண்ற திறமையும் சக்தியும் ரஜினிக்கு இருக்கு. ஆனா, அதுக்கு அவரோட ரசிகர்கள் வழிவிடணும்!''
''நீங்கள் இயக்கும் பட வேலைகள் எப்படிப் போய்க்கொண்டு இருக்கின்றன?''
''குடும்ப உறவுகளை மையமாவெச்சு சத்யராஜ் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் ஒரு படம் இயக்குகிறேன். கொடைக்கானல்தான் லொகேஷன். ரெட் ஒன் கேமராவில் ஷூட் பண்ணலாம்னு திட்டம். பழைய உற்சாகத்தை உணர்றேன்!''