Published:Updated:

அஞ்சலி... ஐந்து உண்மைகள்!

ஷாதனா

அஞ்சலி... ஐந்து உண்மைகள்!

ஷாதனா

Published:Updated:
##~##

'காணவில்லை’ என்று மீடியாக்கள் அலற, 'எங்கே?’ என இரண்டு மாநில போலீஸும் அலைய, ஃபேஸ்புக்கில் பலரும் அஞ்சலி படத்தை புரொஃபைல் பிக்சராக வைக்க... கடந்த வாரம் தென்னிந்தியாவின் தேடு பொருளாக இருந்தவர் நடிகை அஞ்சலி! பரபரப்புக் கிளப்பிய அஞ்சலி பற்றிய ஐந்து ரகசியங்கள் இங்கே...

அஞ்சலி... ஆனந்தி ஆனது எப்படி?

உண்மையில் அஞ்சலி சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்க வேண்டியவர். இளமை துள்ளிய படத்துக்கு முதலில் புக் செய்யப்பட்டவர் அஞ்சலிதான். ஆனால், இயக்குநரின் அப்பா தந்த தொல்லையால் படத்திலிருந்து விலகிவிட்டார். அதன் பின்னர் மாடலிங் செய்துகொண்டிருந்தவர், 2006-ல் தெலுங்குத் தயாரிப்பாளர் சிவநாகேஸ்வர ராவ் கண்களில் பட, தெலுங்கு பட வாய்ப்பு தேடி வந்தது. ஆனால், அஞ்சலி நடித்து வெளியான இரண்டு தெலுங்கு படங்களுமே ஃப்ளாப்தான். அப்போதுதான் 'கற்றது தமிழ்’ வாய்ப்பு வந்தது. கண்களில் ஆசை, ஏக்கம் எல்லாவற்றையும் தேக்கிவைத்துக் கொண்டு வீட்டுச் சிறைக்குள்ளேயே புழுங்கித் தவிக்கும் அபலைப் பெண் ஆனந்தியாகவே அந்தப் படத்தில் பரிமளித்தார் அஞ்சலி. அதுதான் அஞ்சலியைத் தமிழ் சினிமாவுக்கு அழகாக அறிமுகப்படுத்தியது. கிட்டத்தட்ட அது அவருடைய சொந்த வாழ்க்கையாக இருக்கும் என்பதெல்லாம் யாரும் யோசிக்காத ட்விஸ்ட்.

அஞ்சலி... ஐந்து உண்மைகள்!

எப்படி தொடங்கியது சித்தி டார்ச்சர்?

அஞ்சலி இதுவரை சுமார் 20 படங்களில் நடித்திருந்தாலும் அவருடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியது 'கற்றது தமிழ்’, 'அங்காடித் தெரு’, 'எங்கேயும் எப்போதும்’ ஆகிய மூன்று படங்கள்தான். இன்றும் ஆண்களைத் தாண்டி பெண்களுக்கும் பிடித்த, இப்போது உள்ள தமிழ் நடிகைகளில் நடிக்கத் தெரிந்த நடிகைகளில் ஒருவர் என்கிற சிறப்போடு இருப்பவர் அஞ்சலி. அவரைச் சுற்றி இருந்தவர்கள் அவரை வைத்து அறுவடை செய்ய நினைத்ததுதான் பிரச்னைகளுக்குக் காரணம். அஞ்சலிக்கு நல்ல நடிகையாக பெயர் எடுக்க வேண்டும் என்பது மட்டுமே ஆசை. ஆனால், அஞ்சலியைச் சுற்றி உள்ளவர்களோ பணத்தையே பிரதானமாக நினைத்தார்கள். அதனால் அவரை கிளாமர் ரோலிலும் நடிக்க வற்புறுத்தினார்கள் என்கிறார்கள். ஒரு ஹீரோவிடமோ, இயக்குநரிடமோ அஞ்சலி சிரித்துப் பேசினாலே அவருடைய சித்தி டென்ஷனாகிவிடுவாராம். இதனாலேயே அஞ்சலியிடம் பேசவே யோசிப்பார்களாம் ஹீரோக்களும் இயக்குநர்களும்.

எங்கே இருந்தார் அஞ்சலி?

'காணாமல் போன நான்கு நாட்களும் அஞ்சலி ஹைதராபாத்தை விட்டு எங்கேயும் செல்லவில்லை’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். திங்கள் கிழமை காலை சித்தப்பா சூரியுடன் ஏற்பட்ட வாக்குவாதம், சித்தப்பா அஞ்சலியை அடிக்கும் வரை நீள, 'இனி, இவர்களோடு இருந்தால் நம் உயிருக்கு ஆபத்து’ என்பதை உணர்ந்த அஞ்சலி அப்போதே வெளியேறிவிட்டார். அப்போது கூட சித்தியைப் பற்றி மீடியாக்களிடம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லையாம். அஞ்சலி வெளியேறிவிட்டார் என்று அறிந்த சித்தியின் வட்டாரம் 'அவர் ஒரு ஹீரோவுடன் சேர்ந்து ஓடிவிட்டார்’ எனச் செய்தியை கிளப்பிவிட திட்டமிட்டது. இதை அறிந்தே மீடியாவை அணுகி அஞ்சலி குமுறியிருக்கிறார். சித்தப்பாவிடம் இருந்து தப்பி, உடன் படித்த தோழி ஒருவரின் வீட்டிலேயே தங்கிவிட்டாராம் அஞ்சலி.

அஞ்சலி... ஐந்து உண்மைகள்!

யார் பிடியில் அஞ்சலி?

எல்லோருமே கைகாட்டுவது தெலுங்கு ஹீரோ வெங்கடேஷைதான். வெங்கடேஷ் கேரியர் அதல பாதாளத்துக்குச் சென்றுகொண்டிருந்தபோது அஞ்சலியுடன் அவர் ஜோடி சேர்ந்து நடித்த 'சீதம்மா வகிட்லோ சிரிமல்லே சேட்டு’ படம் ஹிட் ஆனது. இதனாலேயே சென்டிமென்ட்டாக அஞ்சலியை வெங்கடேஷ§க்குப் பிடித்துப்போனது. அஞ்சலியையே தனது அடுத்த படமான 'போல் பச்சான்’ படத்துக்கும் பரிந்துரைத்தார். அஞ்சலியை காணவில்லை என்றதுமே  'அஞ்சலியால் எனது படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டுள்ளது’ என்று காட்டமாக பேட்டி கொடுத்தார் வெங்கடேஷ். வெங்கடேஷின் இந்தப் பேச்சு அனைவருக்கும் ஆச்சர்யம் கொடுத்தது. இதுபோன்ற சூழலில் யாராக இருந்தாலும் அஞ்சலிக்கு ஆதரவாகவே பேசுவார்கள். 'தன் மீது எந்த சந்தேகமும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே அப்படி பேசி இருக்கலாம்!’ என்று சந்தேகம் கிளப்புகிறார்கள் சினிமா வட்டாரத்தில்.

இனி, சினிமாவில் நடிப்பாரா?

'ஆம்’ என்று சொன்னதோடு மீண்டும் நடிக்கவும் தொடங்கிவிட்டார். முன்பு பார்த்ததை விட இப்போது  இரண்டு மடங்கு சந்தோஷத்தில் அஞ்சலி இருப்பதாக பட யூனிட் சொல்கிறது. இப்போது அஞ்சலி ஏங்குவது ஒரு விஷயத்துக்கு மட்டும்தான். 'தனக்கும் தன் குடும்பத்துக்கும் சித்தியிடம் இருந்து எதிர்காலத்தில் எந்த அச்சுறுத்தலும் வரக்கூடாதே?’ என்பதே அது. இத்தனை நாட்கள் தங்களை வாழ வைத்த அஞ்சலியை நிம்மதியாக வாழவைப்பது அந்த சித்தியின் கையில் மட்டுமே இருக்கிறது!