Published:Updated:

“மிஸ்டர் பிள்ளைவாள் யாருன்னு மறந்துபோச்சே...!”

க.ராஜீவ் காந்தி, படம்: கே.கார்த்திகேயன்

##~##

“என்னாது... என்கிட்ட ஜாலி பேட்டியா? உன் கேள்விலாம் ஜாலியா இருக்குமா? என் வயசுக்கு உன்னால மல்லுக்கட்ட முடியுமா? என் உடம்புக்குத்தான் 89 வயசு. மனசுக்கு 19தான்... புரிஞ்சுதா?'' என்று அதட்டி மிரட்டியபடியே கேமரா முன் அமர்ந்தார் 'மிஸ்டர் பிள்ளைவாள்’ புகழ் வி.எஸ்.ராகவன்.

''சென்னை கிறிஸ்டியன் காலேஜ்ல படிச்சப்ப சைட் அடிச்சிருக்கீங்களா?''

''ஹா... ஹா... ஹா! எங்கேப்பா..? எனக்கு இன்னமுமே சைட் அடிக்கத் தெரியாது. அப்பெல்லாம் கோலி விளையாண்டே காலத்தைப் போக்கிட்டேன். ஆனா, இப்ப சைட் அடிக்க ஆசையா இருக்கு. கண்ணுதான் நல்லா இருக்கே... ரசிச்சுக்க வேண்டியதுதான்!''

''அந்த 'மிஸ்டர் பிள்ளைவாள்’ யாரு?''

''அது சிவாஜியா, எம்.ஜி.ஆரான்னுகூட மறந்துபோச்சே. ஏதோ ஒரு படத்துல 'மிஸ்டர் பிள்ளைவாள்’னு பேசியிருக்கேன். அது மட்டும் ஞாபகம் இருக்கு. அதுக்காக இப்போ பார்க்கிற எல்லாருமே 'பிள்ளைவாள்... பிள்ளைவாள்’னு கூப்பிடுறாங்க. கூப்பிடட்டுமே!''

''உங்க குரல்ல மிமிக்ரி பண்றவங்கள்ல யாரு பெஸ்ட்?''

“மிஸ்டர் பிள்ளைவாள் யாருன்னு மறந்துபோச்சே...!”

''யாருமே பெஸ்ட் இல்லை. இமிடேட் பண்றது தப்பில்லை. ஆனா, சரியா இமிடேட் பண்ணணும். என் குரல் எவ்வளவு தெளிவா இருக்கு? எவ்வளவு கணீர்னு இருக்கு? ஆனா, என்னை இமிடேட் பண்றவங்க நடுக்கமான குரலோடவே பேசுறாங்க. அடேய் தம்பிகளா... இந்த வீடியோவைப் பார்த்தாவது திருந்துங்கடா! நம்பியார், பாரதிராஜா குரல்களை எல்லாம் நல்லா இமிடேட் பண்றீங்க. என் குரலை மட்டும் ஏண்டா இப்படி நாஸ்தி பண்றீங்க?''

''ஏன் சார்... ஏன் இவ்ளோ கோபம்? கூல்... கூல்! அது சரி, அதென்ன... அந்தக் காலத்துப் படங்கள்ல ஆரம்பத்துல நல்லவரா இருந்துட்டு, க்ளைமாக்ஸ்ல படீர்னு வில்லனா ஆகிடுறீங்க... ஏன்?''

''அதுதானே ட்விஸ்ட்? நான் வாழ்க்கையிலேயே நல்லவன் இல்லை. வில்லன்தான். அப்புறம் சினிமா வில்லன் கேரக்டருக்கு எதுக்குக் கவலைப் படப்போறேன்?''

''எல்லா 'விவரமும்’ தெரியிறதுக்கு முன்னாடியே அப்பா கேரக்டர்ல நடிக்க ஆரம்பிச்சுட்டீங்க... அதுக்காக எப்பவாவது வருத்தப்பட்டுருக்கீங்களா?''

''இல்லைப்பா! ஒரு நாடகத்துல சின்னதா அப்பா வேஷம் போட்டேன். நம்ம சினிமாவுலதான் எல்லாமே ஈயடிச்சான் காப்பி ஆச்சே! டிராமாவுல ஒரு சீன்ல நாய் வந்தா, அதே சீன்ல படத்துலயும் நாய்... அதுவும் அதே நாய் வரணும்னு சொல்வாங்க. அது மாதிரி அந்த நாடகத்தை சினிமாவா எடுத்தப்ப அதே வேஷத்தை எனக்குக் கொடுத்துட்டாங்க.  கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முன்னாடியே சினிமால அப்பா ஆகிட்டேன். நல்ல அப்பா, கெட்ட அப்பா, பணக்கார அப்பா, ஏழை அப்பானு அப்பப்பா... எத்தனை அப்பா. ஆனாலும், எனக்குச் சந்தோஷம்தான். ஏன்னா, ஹீரோவைவிட, அப்பா கேரக்டருக்குத்தான் ஹீரோயினைக் கட்டிப்பிடிக்கிற சந்தர்ப்பம் ஜாஸ்தி!''

''இப்பத்தான் பிரபலமா இருக்கீங்களே... ஒரு படத்துல ஹீரோவா நடிக்கலாமே?''

''ஏய்... நல்லாத்தான் இருக்கும். ஆனா, சின்ன வயசு ஹீரோயினா இருந்தா நல்லா இருக்கும். வயசான கிழவனுக்கு சின்னப் பொண்ணைக் கட்டிவைக்கிற மாதிரி கதை ரெடி பண்ணுங்க. எந்த ஹீரோயினா இருந்தாலும் எனக்கு ஓ.கே!''

''கருணாநிதி... ஜெயலலிதா யாரு பெஸ்ட்?''

''பெஸ்ட்டுன்னா எதுல பெஸ்ட்?''

''ஆக்டிங்ல..?''

''சினிமாலயா? நான் ஜெயலலிதாவின் தீவிர ரசிகன். அவங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும்!''

''கொடுத்த காசுக்கு அதிகமா நடிக்கிறீங்கனு உங்களை யாரும் சொல்லி இருக்காங்களா?''

''ஆக்டிங்னாலே எதையும் மிகைப்படுத்திப் பண்றதுதானே! ஒரு வகையில, ஓவர் ஆக்டிங்தாங்க சினிமா. எங்க ஆக்டிங்கைக் குறை சொல்றீங்களே... படத்துல எல்லாம் டூயட் வைக்கிறாங்க... நிஜ வாழ்க்கைல யாரு அப்படிலாம் ஓடி ஆடிப் பாடுறாங்க? அது மாதிரிதான் நடிப்பும். ஒருத்தன் அழுறதைக்கூட ரசிக்கிற மாதிரி காட்டணும்னா, ஓவர் ஆக்டிங் பண்ணாத்தான் முடியும்!''

“மிஸ்டர் பிள்ளைவாள் யாருன்னு மறந்துபோச்சே...!”

''எம்.ஜி.ஆர். கூட உங்களுக்கு நல்ல பழக்கம் இருக்கா?''  

''அவர் சினிமால நடிச்சுட்டு இருந்த காலத்துல இருந்துச்சு. அவர் இப்ப இருந்தா அரசியல், சினிமா ரெண்டுமே நல்லா இருக்கும். எப்பேர்ப்பட்ட வள்ளல் அவரு. காலைல திட்டின ஒருத்தன் சாயங்காலம் உதவினு கேட்டா, அள்ளி அள்ளிக் கொடுப்பாரு. ஒரு ஷாட்ல புது துணை நடிகர் எம்.ஜி.ஆர்கிட்ட 'சார்... போஸ்ட்’னு தபால் கொடுக்கணும். இதுதான் சீன். அந்த ஷாட்ல அந்தத் துணை நடிகர் எம்.ஜி.ஆர். கூட நடிக்கிற பதற்றத்துல, 'சார்... பேஸ்ட்’டுன்னுட்டார். நாங்க எல்லாரும் சிரிச்சுட்டோம். எம்.ஜி.ஆருக்கு வந்ததே கோபம்... 'நாம எல்லாரும் ரொம்ப ஒழுங்கா? அவரும் மனுஷன்தானே’னு எங்களுக்கு அட்வைஸ் பண்ணிட்டு, அந்தத் துணை நடிகருக்குத் தைரியம் கொடுத்தாரு. அப்பேர்ப்பட்ட நல்ல மனுஷன். அந்த நல்ல மனுஷன் குரலையும் காமெடிங்கிற பேர்ல மிமிக்ரி பண்றதுதான் எனக்குப் பிடிக்கலை!''