Published:Updated:

சினிமா விமர்சனம் - உதயம் NH4

சினிமா விமர்சனம் - உதயம் NH4

சினிமா விமர்சனம் - உதயம் NH4
##~##

காதலி, சட்டப்படி மேஜர் வயதை எட்ட... ஓர் இரவு காத்திருக்க வேண்டும். அந்த இரவுக்குள் நடக்கும் ரேஸ், சேஸ் 'உதயமே’ படம்!

 தில் ஹீரோ, ஜில் ஹீரோயின், கல் நெஞ்சு வில்லன் என காதலுக்கு முன்னர் தோன்றிய கதையை 'ஹைவே ஸ்க்ரீன் ப்ளே’யில் ஓடவிட்டிருக்கிறார்கள். முதல் வரி வசனத்திலேயே படத்தைத் துவக்கி, பிரதான கதாபாத்திரங்களை 'நச் நச்’சென அறிமுகப்படுத்தி ஐந்தாவது நிமிடத்திலேயே படத்துக்குள் நம்மை இழுப்பதில் வெற்றிபெற்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் மணிமாறன். ஆனால், தென்னிந்தியாவின் பரபரப்பான நெடுஞ்சாலையில் முன்பாதியில் தீப்பிடிக்கும் திரைக்கதை, பின்பாதியில் காமாசோமா மோட்டல் டிபன்போல நமுத்துப் போகிறது.

தனது தோற்றத்துக்கு ஏற்ற ஆக்ஷன் கதையில், அதிகம் பேசாமல், சட்சட்டென முடிவெடுத்துக் காரியம்

சினிமா விமர்சனம் - உதயம் NH4

சாதிக்கும் நேர்த்தியில் சித்தார்த் 'ஆஹா! அண்டர்ப்ளே’. ஆனால், அதற்காக அஷ்ரிதா காதலில் உருகும் சமயங்களில்கூட அத்தனை 'உர்’என்று இருக்க வேண்டுமா பாஸ்? ரசிக்க ரசிக்கக் குறையாத அழகு ததும்புகிறது ஹீரோயின் அஷ்ரிதாவிடம். ஆனால், அழகை மட்டுமேதான் ரசிக்கவும் முடிகிறது. சித்தார்த்தின் 'மூவ்’களை முறியடிக்கும் மதியூகத்தை யும், அவசரத்தில் மலையாளம், கன்னடம், தமிழ் மொழிகளைக் கலந்து பேசும் பதற்றத்தையும் கச்சிதமாக ப்ளே செய்கிறார் வில்லன் கே.கே.மேனன். எதிர் காலத்தில் சில பல படங்களில் இனி இவர்தான் தல, தளபதிகளை எதிர்ப்பார் என எதிர்பார்க்கலாம். ஹீரோவின் நண்பர்களை 'செட் பிராப்பர்ட்டி’கள் ஆக்காமல், கலகல காமெடிக்குப் பயன்படுத்தியது படத்தின் பெரிய ரிலாக்ஸ்!

அத்தனை விரட்டல், மிரட்டல், பில்ட்அப்போடு வரும் இடைவேளைக்குப் பிறகு ஏன் அவ்வளவு குழப்பம்?

மூன்று மாநில எல்லைகளில் உலவும் உணர்வைக் கொண்டுவருவதில் வெற்றி அடைந்திருக்கிறது வேல்ராஜின் ஒளிப்பதிவும் கிஷோரின் எடிட்டிங்கும். 'யாரோ இவன்’, 'ஓரக் கண்ணாலே’ பாடல்களை 'ஹிட் நம்பர்ஸ்’ ஆக்கிவிட்ட ஜி.வி.பிரகாஷின் இசை, பின்னணி இசையில் 'சேஃப் கேம்’!

'மத்தது எல்லாத்தையும் கூடப் பொறுத்துக்குவேன்டா... ஆனா, 'கதவைத் தட்டிட்டு வந்திருக்கலாம்ல’னு கேட்ட தைத்தான் என்னால தாங்கிக்க முடியலை!’, 'அந்த டெடிபியர் எனக்குக் கொடுத்த சேஃப் ஃபீலிங், உன்கூடப் பேசுறப்போ எனக்குக் கிடைக்குது!’, 'நீ ரொம்ப போரிங்டா. உன்கிட்ட பேசுறப்பலாம் தனியாப் பேசிட்டு இருக்குற மாதிரியே இருக்கு!’ - பழக்கமான திரைக் கதைப் பின்னணியிலும் பளிச் சென ஈர்க்கிறது வெற்றிமாறனின் வசனங்கள்.

அந்த ஈர்ப்பை திரைக்கதையிலும் பின்னியிருந்தால், 'ஜெட் ரைடு’ ஆக இருந்திருக்கும் இந்தப் பயணம்!

- விகடன் விமர்சனக் குழு