Published:Updated:

ஒரு நாள்... ஓர் ஆள்!

க.நாகப்பன்

##~##

''நான் சினிமா இயக்குநர் ஆகணும்னு ஆசைப்பட்டதுக்குக் காரணம், என் மாமா ப.திருப்பதிசாமி. விகடன்ல மாணவப் பத்திரிகையாளரா இருந்து,  இயக்குநரா உயர்ந்து, விபத்தில் அவர் இறந்தப்ப அவரைப் பார்த்து அத்தனை பேரும் கதறி அழுதாங்க. பாதியில முடிஞ்சுபோன அவரது கனவை நனவாக்கணும்னு நினைச்சேன். இதோ இப்போ இயக்குநர் ஆகிட்டேன்!''- அமைதியாகச் சிரிக்கிறார் ஆனந்த கிருஷ்ணன். 'ஆள்’ படத்தின் மூலம் அறிமுக இயக்குநராகக் களம் இறங்கியிருக்கிறார். 

'' 'ஆள்’... டைட்டிலே வித்தியாசமா இருக்கே?''

''காலை 9 மணியில் இருந்து 6 மணி வரைக்கும் ஒரு ஆளோட ஃபீலிங்ஸ்தான் கதை. ஒரு கதைன்னா காமெடி, காதல், சென்டிமென்ட்னு எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணித் தருவாங்க. நான் படத்துக்குத் தேவையானதை மட்டும் தந்திருக்கேன். 'ஆமிர்’னு ஒரு இந்திப் படத்தோட ரீமேக்தான் 'ஆள்’. ஆமிரை விடக் கொஞ்சம் கூடுதலாக் கதை சேர்த்திருக்கோம். முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் படம். ஆமிர் பார்த்தப்ப இதை இப்படியெல்லாம் பண்ணியிருக்கலாமேனு தோணுச்சு. அதைச் சேர்த்து 'ஆள்’ பண்ணியிருக்கேன்!''

ஒரு நாள்... ஓர் ஆள்!

''எல்லாம் சரி... முதல் படமே ஏன் ரீமேக் பண்றீங்க?''

''நான் முதல்ல பண்ண ஸ்க்ரிப்ட்டை மதன் கார்க்கிகிட்ட கொடுத்து வசனம் எழுதவெச்சேன். பட்ஜெட் கொஞ்சம் அதிகம்னு தயாரிப்பாளர் கிடைக்கலை. அடுத்துப் பண்ணின காமெடி ஸ்க்ரிப்ட்டுக்கு கார்க்கி ஸ்க்ரீன்ப்ளே பண்ணினார். அந்தக் கதையைத் தயாரிக்கவும் ஆள் கிடைக்கலை. அப்பதான் தயாரிப்பாளர் விடியல் ராஜு, 'உடனே படம் பண்ணணும். ஏழு மாசத்துல படம் முடிச்சுத் தர முடியுமா?’னு கேட்டார். அப்போதான் ஆமிர் பத்திச் சொன்னேன். உடனே, ஓ.கே. சொல்லிட்டார். ஆமிர்ல க்ளைமாக்ஸ் மிரட்டும். அதுதான் படத்துக்குப் பலம். தமிழுக்கு ஏத்த மாதிரி கதையில் சில மாற்றங்களைப் பண்ணியிருக்கேன்!''

''கிராமப் படங்களில் நடிச்சுட்டு இருந்த விதார்த் இதுக்கு செட் ஆகிட்டாரா?''

''விதார்த்கிட்ட கதை சொன்னதும் ரொம்பவே இம்ப்ரெஸ் ஆகிட்டார். எனக்காகத் தயாரிப்பாளரையும் தேடினார். விதார்த்தைக் கிராமத்து ஆளா பார்த்துப் பழக்கப்பட்டுட்டோம். ஆனால், இதில் சிட்டி வெர்ஷன் விதார்த்தைப் பார்க்கலாம். இந்த கேரக்டர் பண்றதுக்கு நிறைய ஹோம் வொர்க் பண்ணிஇருக்கார். படம் முழுக்க வர்ற கேரக்டர் அவருக்கு. அவரோட ஓட்டம் நமக்கும் தொத்திக்கும்!''  

ஒரு நாள்... ஓர் ஆள்!

''படத்துல புதுசா வேறென்ன எதிர்பார்க்கலாம்?''

''நல்ல முஸ்லிம், கெட்ட முஸ்லிம் இரண்டு பேருக்கு இடையில் நடக்கும் போராட்டத்தை நடுநிலைமையோட பதிவுபண்ணிஇருக்கேன். க்ளைமாக்ஸ் வரைக்கும் ஹீரோவும் வில்லனும் சந்திச்சுக்கவே மாட்டாங்க. ஹீரோவுக்கு வில்லனோட முகம் எப்படி இருக்கும்னுகூடத் தெரியாது. படம் சென்னையோட டிக்ஷனரி மாதிரி அவ்ளோ துல்லியமா இருக்கும். ஹார்த்திகா ஷெட்டி அறிமுக ஹீரோயின். ரிசர்ச் அசோசியேட்டா நடிச்சிருக்காங்க. படத்தில் ஸ்டெம்செல்லை வெச்சுக்கூட மெசேஜ் இருக்கு!''

''ஒரு நாளில் நடக்குற கதைகள் இப்போ நிறைய வருதே?''

''இந்தப் படம் சம்திங் ஸ்பெஷல். ஒரு சீன் சொல்றேன்... சென்னை ஏர்போர்ட்டுக்கு வர்ற விதார்த்தை ஒரு கும்பல் கடத்திருவாங்க. அதுவே வித்தியாசமா இருக்கும். நடந்து வர்ற விதார்த் கிட்ட பைக்ல வர்ற ஒருத்தன் போனைத் தூக்கிப் போடுவான். அவரும் என்ன பண்றதுனு தெரியாம அந்த போனைப் பிடிப்பார். அதுல போன்கால் வரும். கூட்டத்துல இருக்குற ஒருத்தர் 'போனை எடு’னு சொல்லிட்டுப் போய்டுவார். விதார்த் போன் அட்டென்ட் பண்ணும்போது, 'இந்த நம்பர் உள்ள டாக்ஸியில ஏறு’னு குரல் கேட்கும். 'தப்பான ஆள்கிட்ட பேசிக்கிட்டு இருக்கீங்க’னு விதார்த் சொல்லும்போது 'அப்படிப் பேசி எனக்குப் பழக்கம் இல்லை. உங்க லக்கேஜ் என் கார்லதான் இருக்கு. சீக்கிரம் கார்ல ஏறு. டிரைவர் உடனே கிளம் பிடுவான்’னு அலட்டலாப் பேசுவான். கார்ல ஏறி டாக்சி டிரைவர்கிட்ட 'இங்க என்ன நடக்குது?’னு புரியாமக் கேட்பார். 'எனக்குச் சொல்றதை நான் செய்றேன். உனக்குச் சொல்றதை நீ செய்’னு டிரைவர் சொல்லுவார். இந்த மாதிரி ஒவ்வொரு சீனும் 100 மீட்டர் ரன்னிங் ஓடுற மாதிரி இருக்கும்!''