Published:Updated:

“நான் நடிச்ச படத்தை நானே பார்க்கலை!”

க.ராஜீவ் காந்தி

“நான் நடிச்ச படத்தை நானே பார்க்கலை!”

க.ராஜீவ் காந்தி

Published:Updated:
##~##

தெருவில் இறங்கினாலே தீப்பிடிக்கும் வெயிலுக்குப் பயந்து ஊரே ஒளிந்துகிடக்க, ஜிம்மில் தடதட விறுவிறுவென வியர்வை மழையில் இருந்தார் ஷக்தி. 'அரபு நாடே’ என்று சொன்னாலே மனதில் வந்துபோகும் அந்தப் புன்னகை முகத்தில் இப்போது பாடி பில்டர் வேகம். இயக்குநர் பி.வாசுவின் மகன் என்று ஷக்தி அறிமுகமான 'தொட்டால் பூ மலரும்’ படத்தில் எளிமையாக வசீகரித்தார். ஆனால், அறிமுகமான ஐந்து வருடங்களுக்குப் பிறகும் அவரது கேரியர் அங்கேயே நிற்பது ஏன்?

''சினிமா பிரபலத்தின் வாரிசா இருக்கிறது ப்ளஸ்னு நினைக்கிறாங்க. ஆனா, அதுதான் பெரிய மைனஸ். ஒரு அறிமுகத்துக்கு வேணும்னா 'வாரிசு’ங்கிற அடையாளம் பயன்படும். ஆனா, நிலைச்சு நிக்க நாம தேர்ந்தெடுக்கும் சரியான படங்கள்தான் கைகொடுக்கும். வாரிசுங்கிறப்ப அந்தச் சுமை இன்னும் ஜாஸ்திதான். எப்பவும், 'அவர் வாரிசாச்சே’ங்கிற கேள்வி துரத்திட்டே இருக்கும். என் அப்பா சக்சஸ்ஃபுல் இயக்குநரா இருந்தாலும், அது என் கேரியருக்கு எந்தவிதத்திலும் பலன் அளிக்கலை!''  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எங்கே தப்பு?''

''நான் நடிச்ச படங்களில் தியேட்டருக்குப் போய் நான் பார்த்தது ரெண்டே படங்கள்தான். 'தொட்டால் பூ மலரும்’, 'நினைத்தாலே இனிக்கும்’. மத்த படங்கள்ல நடிக்கும்போதே அதோட ரிசல்ட் என்னன்னு எனக்குத் தெரியும். அதே மாதிரி படம் ரிலீஸான பிறகு பேச்சு கிளம்புறப்போ, கொஞ்சம் மனசு வலிக்கும். கதை சொல்லும்போது நல்லா சொல்வாங்க. ஆனா, பாதி எடுக்கும்போதே கதை அப்படியே மாறும். 'இந்தப் படத்துல இருந்து வெளிய வந்துடலாம்’னு பார்த்தா, 'ஒரு டைரக்டர் பையனா இருந்துக்கிட்டு எங்க கஷ்டம் தெரிஞ்சும் இப்படிப் பண்றீங்களே தம்பி’னு தயாரிப்பாளர் சொல்ற ஒரு வார்த்தைக்காக எல்லாத்தையும் பொறுத்துக்க வேண்டியிருக்கும். ஒரு இயக்குநர், 'சார்... இதுலதான் என் கேரியரே இருக்கு’னு என் கால்ல விழுந்தாரு. இதுபோல சில தவறான முடிவுகள், வழிகாட்டுதல்கள், நண்பர்கள்தான் என் தோல்விக்குப் பாதி காரணம். மீதிப் பாதிக்கு... நானேதான் சார் காரணம்!''

“நான் நடிச்ச படத்தை நானே பார்க்கலை!”

''இனி என்ன?''

''அந்த அனுபவங்கள்தான் எனக்குப் பெரிய படிப்பினைக் கொடுத்திருக்கு. சினிமாவில் யாரையுமே முழுசா நம்பக் கூடாதுனு புரிஞ்சுக் கிட்டேன். இங்கே நல்லவங்களும் இருக்காங்க. ஆனா, எனக்கு அப்படி யாரும் பக்கத்துல இல்லாமப்போயிட்டாங்க. இந்தச் சிக்கல்களுக்கு நடுவில் என் குடும்பம் எனக்குக் கொடுத்த ஆதரவும் தைரியமும்தான் என் நம்பிக்கை சிதையாம இருக்கக் காரணம். இப்போ நான் நடிச்சுட்டு இருக்கும் 'படம் பேசும்’ படத்தின் சப்ஜெக்ட் எனக்கே எனக்குனு அமைஞ்ச மாதிரி இருந்தது. கத்துக்கிட்ட அத்தனை பாடங்கள் உண்டாக்கிய வலியை இந்தப் படத்தின் உழைப்பில் கொட்டியிருக்கேன்!''

“நான் நடிச்ச படத்தை நானே பார்க்கலை!”

'' 'படம் பேசும்’ எப்படி இருக்கும்?''

''இந்தப் படத்தைப் பத்தி நாம யாரும் பேச வேணாம். முக்கியமா நான் பேசக் கூடாது. படமே பேசும்கிற நம்பிக்கையிலதான் அந்த டைட்டில் வெச்சோம். படத்தைப் பத்தி இதுக்கு மேல வேண்டாம். பெர்சனல் பேட்டியாகவே இது இருக்கட்டுமே!''

''இவ்வளவு நடந்திருக்கு... அப்பா முன்னாடியே உங்களுக்கு வழிகாட்டலையா?''

''சார், இந்தப் பக்கம் சூப்பர் ஸ்டார், இந்தப் பக்கம் கமல் சார்னு அவங்க கையால் என்னை அறிமுகப்படுத்திவெச்சதைவிட பெருசா அவர் எனக்கு என்ன பண்ணியிருக்க முடியும்? நான் நடிக்கிற படத்தோட கதை என்னன்னுகூட அவர் கேட்டதில்லை. அதை எனக்குக் கொடுத்த சுதந்திரமா அவர் நினைச்சிருக்கார். நான் சோர்ந்திருந்த நேரத்தில் எனக்கு அவ்ளோ நம்பிக்கை கொடுத்தது அவர்தான். 'எல்லாமே நல்லதுக்குனு எடுத்துக்க ஷக்தி’னு அவர் சொன்னது இன்னும் எனக்குள் கேட்டுக்கிட்டே இருக்கு!''