Published:Updated:

“இன்னும் சில வருடங்களில்... சினிமாவில் இருக்கமாட்டேன்!”

சூர்யா ஷாக்க.ராஜீவ் காந்தி

“இன்னும் சில வருடங்களில்... சினிமாவில் இருக்கமாட்டேன்!”

சூர்யா ஷாக்க.ராஜீவ் காந்தி

Published:Updated:
##~##

மாற்றம் ஒன்றே மாறாதது. அந்த மாற்றம் விஜய் டி.வி-யின் 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’யின் தொகுப்பாளராக இருந்த சூர்யாவைப் போட்டியாளராக 'ஹாட் சீட்’டில் அமரவைத்தது. பிரபலங்களை அந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்கவைக்கும் சுற்றில் இந்த ரவுண்ட் சூர்யாவுக்கானது! சினிமாவில் முறைத்து விறைத்துக்கொள்ளும் 'ஹீரோ Vs வில்லன்’ சுவாரஸ்யத்துடன் அரங்கேறிய 'சூர்யா Vs பிரகாஷ்ராஜ்’ நிகழ்ச்சியின் பளிச் டிட்பிட்கள் இங்கே...

போட்டியில் ஜெயிக்கும் பணத்தைத் தனது அகரம் நிறுவனத்தின் பயிற்சிப் பணிகளுக்காக ஒரு கட்டடம் கட்டும் செலவுக்கு அளிக்கப்போவதாகச் சொல்லிவிட்டு விளையாடத் தொடங்கினார் சூர்யா. ஹாட் சீட்டில் அமர்ந்ததும் மெல்லிய பதற்றத்துடன் இருந்த சூர்யாவை சகஜமாக்குவதுபோலப் பேசினார் பிரகாஷ்ராஜ். ''ஷோவைக் கையில் எடுத்தப்ப, எனக்கு ரொம்பப் பதற்றமா இருந்துச்சு. 'சூர்யா அளவுக் குப் பண்ணிடுவியா நீ?’னு என் அம்மாவே சந்தேகமாக் கேட்டாங்க. 'அவர் மாதிரி பண்ண முடியாது. என் ஸ்டைல்ல பண்ணி ஏதோ சமாளிக்கப்போறேன்’னு சொன்னேன்!'' என்று பிரகாஷ்ராஜ் சொல்ல, ''இது ரொம்ப ஓவரா இருக்கே...'' என்று சூர்யாவே கூச்சப்பட்டார். கேள்விகள் சுவா ரஸ்யமாக ஒருபுறம் ஈர்க்க, மறு புறம் இருவரிடையிலான உரையா டலில் ஏகப்பட்ட உணர்வுப் பகிரல்கள்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சூர்யாவுக்கான முதல் கேள்வி... 'டி.ஆரின் வாடா மச்சி பாட்டில் அடுத்த வரியாக இடம்பெறும் சாப்பாட்டு அயிட்டத்தின் பெயர் என்ன?’ அதற்கு டி.ஆர். ஸ்டைலில் 'வாடா என் மச்சி... வாழக்கா பச்சி...’ எனப் பாடிக் காட்டி பதிலை லாக் செய்த சூர்யா இறுதியில், 'டி.ஆர். ஸ்டைல் ஒரு யுனிவர்சல் ஸ்டைல்... ஹி இஸ் எ ஆல்ரவுண்டர்’ என்று ஐஸ் வைக்கவும் மறக்கவில்லை.

“இன்னும் சில வருடங்களில்... சினிமாவில் இருக்கமாட்டேன்!”

ரஜினிக்கு ஜோடியாக, அண்ணியாக, அம்மாவாக, மாமியாராக நடித்த ஒரே நடிகை யார் என்ற கேள்விக்குத் திணறிவிட்டார் சூர்யா. தம்பி கார்த்தியைத் தொலைபேசியில் அழைத்து உதவி கேட்க, அவர் 'ஸ்ரீவித்யா’ என்று சரியான பதில் சொல்லி, 'தம்பி உடையான்’ பழமொழியை நிரூபித்தார். ஸ்ரீவித்யா ரஜினிக்கு அண்ணியாக நடித்தாரா என்பதில்தான் அண்ணன், தம்பி இருவருமே குழம்பிவிட்டார்கள்.

''நான் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிட்டு இருந்தப்போ, 'சினிமால ஒரே மாதிரி நடிக்கிறதைப் பார்க்கிறப்போ போரடிக்கும். ஆனா, டி.வி-ல நீங்க காட்டுற ரியாக்ஷன்களை சினிமாலகூடப் பார்த்ததில்லை’னு ஜோ சொல்வாங்க!'' என்று சூர்யா தன் நினைவை மீட்ட, பிரகாஷ்ராஜும் தன் பங்குக்கு மலரும் நினைவுகளில் மூழ்கினார்.

'' 'சந்திப்போமா’ படம் பண்ணும்போதுதான் முதன்முதலா உங்களைப் பார்த்தேன். அப்போல்லாம் செட்டுக்குள்ள வர்றதுக்கே பயப்படுவீங்க. 'டான்ஸ் ஆட வரலை... நடிக்கச் சிரமப்படுறீங்க’னு உங்களைப் பத்தி நிறையக் கிளப்பிவிட்டாங்க. ஆனா, அதை எல்லாம் தாண்டி, கடின உழைப்பால் நீங்க அடைஞ்ச அசுர வளர்ச்சி சாதாரணம் கிடையாது!'' என்று பிரகாஷ்ராஜ் சொல்ல, அது தொடர்பாக மேலும் மனம் திறந்தார் சூர்யா.

“இன்னும் சில வருடங்களில்... சினிமாவில் இருக்கமாட்டேன்!”

''சினிமாவில் நான் அறிமுகமான சமயம்தான் என் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான கால கட்டம். என்னை எந்த நேரத்துலயும் சினிமால இருந்து ரசிகர்கள் தூக்கி எறிஞ்சுடுவாங்கனு ஒவ்வொரு நாளும் பயத்தோட படுத்து, பயத் தோடவே எந்திரிப்பேன். ஏன்னா, எனக்கு நடிப்பு வரலை, வசனங்களை ஞாபகம்வெச்சுக்க மெமரி பவர் இல்லை, டான்ஸ் வரலை, சரியான டோன்ல பேசக்கூடத் தெரியலை. ஆனா, அப்போ என்னோட ஒரே ப்ளஸ், எதையும் சொல்லிக்கொடுத்தாப் புரிஞ்சுப்பேன். அந்த ஒரு திறமையை அடிப்படையா வெச்சுட்டு மத்த எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். சாதாரண சரவணனை ஹீரோ சூர்யாவா வடிவமைச்சதில் முக்கியப் பங்கு, பாலா, ரகுவரன் சாருக்கு உண்டு. தூங்கிட்டு இருக்கும்போது எழுப்பிவிடற மாதிரியே பேசுவாரு ரகுவரன் சார். 'என்ன புடுங்குன நீ? எப்ப வேணும்னாலும் உன்னை இங்கே இருந்து தூக்கி எறிஞ் சுடுவாங்க. அப்ப என்ன செய்வே?’னு கேட்டுக் கேட்டு என்னைச் சுதாரிக்கவெச்சார் அவர். ஆனா, இப்பவும் என் இடம் நிரந்தரம் கிடை யாது. இன்னும் சில வருஷத்தில் என்னை மக்கள் சினிமாவிலேயே இல்லாம வீட்ல உக்கார வெச்சிருவாங்க. அந்த உண்மையை நானும் உணர்ந்தே இருக்கேன். சுத்தியிருக்கிற போட்டி யைப் பத்தி எனக்குக் கவலையில்லை. நான் பண்ற சரி, தப்புதான் என் கண்ணுக்குத் தெரியும். நான் எப்படி இன்னும் பெட்டராப் பண்ணலாம்னுதான் யோசிப்பேனே தவிர, மத்தவங்களைப் பத்தி நினைச்சுப் பதற்றப்பட மாட்டேன்!'' என்று உருகினார் சூர்யா.

10-வது கேள்விக்கு ஹாட் சீட்டில் இருந்து தான் இறங்கிக்கொண்டு, பிரகாஷ்ராஜை விளையாடவைத்தார் சூர்யா. பாரதிராஜாவின் குரு பற்றிய அந்தக் கேள்விக்கு புட்டண்ணா கனகல் எனச் சரியான விடையளித்தார் பிரகாஷ்ராஜ். ''நல்லவேளை... இந்தக் கேள்வியை நான் விளையாடலை. எனக்கு அந்தக் கேள்விக்குப் பதில் தெரியாது. இத்தனைக்கும் பாரதிராஜா எனக்குப் பக்கத்து வீட்டுக்காரர்!'' என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்ட சூர்யாவை ரொம்பவே சுற்றலில் விட்டது அடுத்த கேள்வி.

“இன்னும் சில வருடங்களில்... சினிமாவில் இருக்கமாட்டேன்!”

பாரதியார் கல்கத்தா சென்றபோது சந்தித்த பெண்மணி யார்? 'ஆடியன்ஸ் போல்’ மூலம் பதிவான 48 சதவிகித பதிலான 'நிவேதிதா’ என்பதைத் தேர்ந்தெடுத்து அந்தக் கேள்வியை வெற்றிகரமாகக் கடந்தார் சூர்யா.

அப்துல் கலாமுடன் படித்த எழுத்தாளர் யார் என்ற கேள்விக்கு சூர்யா சட்டெனப் பதில் சொல்லிவிடுவார் என்று எல்லாரும் எதிர்பார்த்திருக்க, அவரோ '50-50’ ஆப்ஷனுக்குப் பிறகும் குழப்பத்திலேயே இருந்தார். 'சுஜாதா, ஆர்.கே.நாராயண்’ என்ற இரண்டே ஆப்ஷன்களுக்குப் பிறகும் குழம்பித் தவித்து ஆர்.கே.நாராயணாகத்தான் இருக்கும் என்று சொல்லிக்கொண்டிருந்த சமயம்...

முக்கியமான தொலைபேசி அழைப்பில் பேச, நான் அரங்கத்தைவிட்டு வெளியேறி விட்டேன். அந்தக் கேள்விக்கு சூர்யா என்ன பதில் சொன்னார், எவ்வளவு ஜெயித்தார் என்பது... நம்பினால் நம்புங்கள்... எனக்கும் சஸ்பென்ஸாகத்தான் இருக்கிறது!