க.நாகப்பன்
##~## |
‘நேரம்’ என்ற அறிமுகமான ஒரே படத்திலேயே நஸ்ரியாவை தமிழகத்தின் ரசனை இளைஞர்கள் (அலைஸ் ஜொள்ளு மன்னர்கள்!) கொண்டாடுவதுபோல, மலையாளத்தில் 'தட்டத்தின் மரயத்து’ என்ற ஒரே படத்தில் நடித்த இஷா தல்வாரை கேரளா கொண்டாடியது. அறிமுகமான அந்தப் படத்திலேயே ஐந்து விருதுகளை வென்ற அந்த மும்பை தேவதை, இப்போது கோடம்பாக்கத்துக்கு 'தில்லுமுல்லு’ காட்ட வந்திருக்கிறார்...
''இஷா தல்வார்... புரொஃபைல் ப்ளீஸ்..?''
''இஷா தல்வார்தான் என் நிஜப் பேர். ஆனா, கேரளாவில் என்னை எல்லாரும் ஆயிஷா, உம்மாச்சிக்குட்டின்னுதான் கூப்பிடுவாங்க. 'தட்டத்தின் மரயத்து’ படத்துல என் கேரக்டர் பேர் அது. நான், மும்பைப் பொண்ணு. என் அப்பா வினோத், 30 வருஷமா நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்னு பல ரோல் பண்ணவர். பி.ஏ. எகனாமிக்ஸ் படிச்சுட்டு பாலே, ஜாஸ், ஹிப்-ஹாப், கதக்னு பல டான்ஸ் ஸ்டைல் கத்துக்கிட்டேன். அப்போ ஹ்ருத்திக் ரோஷனோட ஒரு டான்ஸ் வீடியோவில் நடிச்சேன். அதுக்கு நல்ல வரவேற்பு. அப்படியே ஷாஹித் கபூர், ஜான் ஆப்ரஹாம், குணால் கபூர்னு பல ஸ்டார்களோட ஆல்பம், விளம் பரங்கள்னு கலந்துகட்டி நடிச்சேன். ஒரு இந்திப் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்குத் தங்கச்சியா நடிச்சேன். இதுல எங்கேயோ என்னைப் பார்த்துப் பிடிச்சு மலையாளப் படத்தில் நடிக்க வெச்சுட்டாங்க. கேரள ரசிகர்கள் மனசுல இடம் பிடிச்சுட்டு, இப்போ தமிழ்நாட்டுக்கு வர்றேன்!''
''முதல் ஐந்து படங்களை நாலு மொழிகளில் நடிச்ச முதல் நடிகை நீங்களாத்தான் இருப்பீங்கபோல?''
''ஹா... ஹா... ஆமாம்! எனக்கே ஒவ்வொரு நாளும் வெரைட்டியான அனுபவங்களா இருந்தது. மும்பையில் 'பார்க்க பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரி ஹோம்லியா, சிம்பிளா இருக்கே’னு சொல்வாங்க. திருவனந்தபுரத்தில், 'வாவ்... அப்படியே வானத்துல இருந்து இறங்கி வந்த தேவதை மாதிரி இருக்காங்க இஷா’னு ரெவ்யூஸ் எழுதுவாங்க. ஆந்திராவில் 'பார்பி டால்’னு கொஞ்சு வாங்க. தமிழ்நாட்டுல என்ன சொல்லப்போறாங்களோ?!''

''தென்னிந்திய ஹீரோயின்களுக்கு மும்பையில் செட்டில் ஆக ஆசை. ஆனா, நீங்க அங்கே இருந்து இங்கே வந்திருக்கீங்களே?''
''அசின், இலியானா, ஸ்ருதி எல்லாம் பாலிவுட்டுக்கு வர்றாங்க. அதே சமயம் தீபிகா படுகோன், சோனம் கபூர், சோனாக்ஷி சின்ஹா எல்லாம் சவுத் சினிமாவுக்கு வர்றாங்க. ஹோம் கிரவுண்ட்ல ஜெயிக்கிறதைவிட, வெளி கிரவுண்ட்ல ஜெயிக்கிறதுதானே சவால்.
'தட்டத்தின் மரயத்து’ மாதிரி ஒரு சாஃப்ட் லவ் ஸ்டோரியில் நான் பாலிவுட்ல அறிமுகமாக முடியாது. எனக்கு ஒவ்வொரு படமும் வித்தியாசமா நடிக்கணும். மலையாளத்தில் அவ்ளோ ரிசப்ஷனுக்கு அப்புறம் 'ஐ லவ் மீ’ங்கிற படத்தில் நெகட்டிவ் கேரக்டர்ல நடிச்சேன். இப்போ தமிழ்ல 'தில்லுமுல்லு’ ரீமேக்ல காமெடி பண்ற ஹீரோயினா நடிக்கிறேன். தெலுங்கில் கலர்ஃபுல் ஹீரோயினா ஒரு படத்துல நடிக்கிறேன். இப்படி ஒவ்வொரு மொழியிலும் ஒரு படம் நடிச்சாலும், வித்தியாசமா நடிக்கத்தான் எனக்குப் பிடிக்கும்!''

''யார் உங்க ரோல் மாடல்?''
''தீபிகா, பிரியங்கா சோப்ரா... இவங்க ரெண்டு பேரும் ஸ்க்ரீன்ல இருக்கிற ஒவ்வொரு நொடியும் என்னை ஆச்சர்யப்படுத்திட்டே இருக்காங்க!''
''எதுவும் சென்டிமென்ட் இருக்கா?''
''இதுவரை இல்லை. ஆனா, நான் முதன்முதலா சம்பளமா வாங்கின 1,500 ரூபாயை இன்னும் பத்திரமா வெச்சிருக்கேன். அதை எப்படி, எதுக்காகச் செலவழிப்பேன்னு எனக்கே தெரியலை!''