Published:Updated:

“இங்கே லேபிள்தான் முக்கியம்!”

க.நாகப்பன்

“இங்கே லேபிள்தான் முக்கியம்!”

க.நாகப்பன்

Published:Updated:
##~##

"நான் படிச்சு வளர்ந்தது நார்த் மெட்ராஸ் ராயபுரத்தில். ப்ளஸ் டூ முடிச்சுட்டு லயோலாவில் விஸ்காம் சேர முயற்சி பண்ணேன். சீட்டு கிடைக்கலை. 'நீ சினிமாவுல நடிக்கலாமேடா’னு பசங்க கொளுத்திப்போடவும், நேராக் கிளம்பி கோடம்பாக்கம் வந்துட்டேன். என்ன பண்றது? யாரைப் பார்க்கிறதுனு தெரியாம, பாலுமகேந்திரா சார் ஆபீஸ் முகவரியை ஒரு ஆட்டோக்காரர்கிட்ட கேட்டேன். 'ரெண்டு ரூபா கொடுத்தா, பஸ்ல போயிடலாம். இருபது ரூபா கொடுத்தா, என் ஆட்டோவுல போயிடலாம்’னு சொன்னார். நல்லவேளையா அப்போ என்கிட்ட இருபது ரூபா இருந்துச்சு!''- சீரியஸாகச் சொல்லிவிட்டு, அதிர அதிரச் சிரிக்கிறார் தினேஷ். 'அட்ட கத்தி’ அடையாளத்துக்குப் பின் மளமளவெனப் படங்களில் நடித்துக்கொண்டு இருப்பவரை 'வாராயோ வெண்ணிலாவே...’ படப்பிடிப்பில் பிடித்தேன்...  

''பாலுமகேந்திரா சார் இங்கிலீஷ்ல பேசிட்டே இருந்தார். ஒண்ணும் புரியலை. நடிக்கச் சொன்னார்; நடிப்பு வரலை. சிரிக்கச் சொன்னார்; சிரிக்கவும் வரலை. 'மொக்கை ஆகிடுச்சே’னு ஃபீல் பண்ணிட்டு இருந்தப்போ, பாலுமகேந்திரா சாரோட அசோஸியேட் ஒருத்தர், 'பிராக்டீஸ் பண்ணா எதையும் கத்துக்கலாம். கூத்துப்பட்டறையில சேர்ந்துடுங்க’னு ஆலோசனை சொன்னார். அவர்தான் வெற்றிமாறன். கூத்துப்பட்டறைப் பயிற்சிக்குப் பிறகும் எங்கேயும் கதவு திறக்கலை. ஒரு டீக்கடையில் நின்னு விரக்தியில புலம்பிட்டு இருந்தப்போ, அதைப் பக்கத்துல நின்னுட்டு இருந்தவர் கேட்டார். அவர்தான் ஜனநாதன் சார். 'ஈ’ படத்துல ஜீவாகிட்ட ஒரு பொண்ணு மேல ஆசிட் ஊத்தச் சொல்ற சின்ன கேரக்டர் கிடைச்சது. 'ஆடுகளம்’ படத்துல தனுஷ§க்குப் போட்டியா டாப்ஸியைக் காதலிச்சுக் கலங்கடிக் கிற சின்ன கேரக்டர்ல வெற்றிமாறன் நடிக்கவெச்சார். 'மௌன குரு’ படத்துல காலேஜ் பிரின்சிபால் மகனா திருடன் கேரக்டர்ல நடிச்சேன். அதுவரை வீட்லயும் சரி, ஃப்ரெண்ட்ஸ் மத்தியிலும் சரி... எனக்கு மரியாதையே கிடையாது. 'அட்டகத்தி’க்குப் பிறகுதான் என்னையும் மதிச்சு நின்னு பேச ஆரம்பிச்சாங்க. பத்து வருஷ வலி... பத்து வரியில் முடிஞ்சிருச்சுல்ல?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“இங்கே லேபிள்தான் முக்கியம்!”

''பிரபலத்தின் வாரிசாகவோ, பெரிய சினிமா பின்னணியோ இல்லாமல் இருக்கிறதுதான் இப்போ ஹீரோவா ஜெயிப்பதற்கான ஃபார்முலாவா?''

''நான் பிரபலத்தின் வாரிசா இல்லாமல் இருக்கலாம். ஆனா, வெற்றிமாறன், ஜனா சார், ரஞ்சித் அண்ணன்னு என்னைக் கொண்டாடவும் திட்டிக் கொட்டவும் ஒரு செட் இருந்தாங்க. அப்படி விஷயம் தெரிஞ்சவங்க வழிகாட்டினா, யாரும் இங்கே ஜெயிக்கலாம். 'இண்டஸ்ட்ரியில வேலைக்குக் காசு இல்லை. பேருக்குத்தான் காசு. லேபிள்தான் நமக்கு முக்கியம்’னு வெற்றிமாறன் அடிக்கடி சொல்வார். வதவதனு நிறையப் படங்கள்ல நடிக்கிறதைவிட, நாலே நாலு நல்ல படத்துல நடிச்சாக்கூடப் போதும். அந்த வைப்ரேஷனோட ஓடிட்டே இருக்கேன்! 'ஆரண்ய காண்டம்’, 'சூது கவ்வும்’ மாதிரியான படங்கள்ல நடிக்க ஆசை. ஆனா, 'நான் டூயட் ஆடமாட்டேன்... பஞ்ச் வசனம் பேச மாட்டேன்’னு இங்கே எதையும் உறுதியாச் சொல்ல முடியலை. ஏன்னா, அடுத்த படத்துலயே நம்மளை அதைப் பண்ணவெச்சிருவாங்க. அதனால வார்த்தைகளை விட்டுடக் கூடாது. அதுவே நாளைக்கு ஆயுதமாகி நம்மைத் தாக்கும்கிற ஆபத்தையும் நான் உணர்ந்திருக்கேன்!''  

''நார்த் மெட்ராஸ் பையன்னு சொல்றீங்க... காதல்ல படா 'ரூட்டு தல’யாத்தானே இருந்திருப்பீங்க?''  

''அட... நீங்க வேற. நிஜத்துலயும் நான் அட்டகத்திதாங்க. பஸ் ஸ்டாப்ல அழுதுட்டே நின்ன சோகம், பஸ்ஸுக்குப் பின்னாடியே ஓடிப் போன காலம்லாம் இன்னும் மனசுக்குள்ள ஓடிட்டே இருக்கு. எனக்குத் தாழ்வுமனப்பான்மை ஜாஸ்திங்க. பொண்ணுங்களை நிமிர்ந்து பார்க்கவே கூச்சப்படுவேன். ஆனா, இப்போ எந்தப் பொண்ணுகிட்டயும் முதல் சந்திப்பிலேயே நல்லாப் பேசுறேன்... சிரிக்கிறேன். சினிமா கத்துக்கொடுத்த பெரிய பாடம் இது. தேங்க்ஸ் டு சினிமா!''