Published:Updated:

பூவரசம் பீப்பீ!

க.நாகப்பன்

##~##

“எந்தக் கவலையும் இல்லாம இயல்பா கோடை விடுமுறையைக் கொண்டாடுற குழந்தைகள் சந்தோஷத்தின் உச்சிக்குப் போகிறபோது ஒரு வன்முறை நடக்குது. அதைப் பார்க்கிற குழந்தைகள் என்ன ஆகுறாங்க?னு சொல்ற படம்தான் 'பூவரசம் பீப்பீ’ ''- எளிய வார்த்தைகளில் வசீகரிக்கிறார் ஹலிதா ஷமீம். சமுத்திரக் கனி, மிஷ்கின், புஷ்கர் - காயத்ரியிடம் சினிமா கற்று வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகும் இளம் இயக்குநர்.  

''அதென்ன 'பூவரசம் பீப்பீ’?''

''இப்போ இருக்கிற சூழல்ல யாரும் விடுமுறையைக் கொண்டாடுறது இல்லை. நகரத்துக் குழந்தைகள்னா சம்மர் கோர்ஸ் போயிடுறாங்க. முன்னாடி விடுமுறைன்னாலே, ஊர்ல இருக்கிற உறவினர்கள் வீட்டுக்குப் போறது, பொன்வண்டு, தும்பி, ஈசல் பிடிக்குறது, தீப்பெட்டில நூல் கட்டி தூரமா நின்னு பேசுறது, பட்டம் விடுறது, ஆத்துல குளிக்கிறது, நீச்சல் பழகுறது, சைக்கிள் கத்துக்கிறதுனு பல அனுபவங்கள் கிடைக்கும். பூவரசம் இலையில பீப்பி செய்து ஊதுறது எல்லாக் குழந்தைகளுக்கும் ரொம்பப் பிடிச்ச விஷயம். முதல் காதல், முதல் நட்பு, முதல் முத்தம்னு எல்லாத்தை யும் அனுபவிக்கும் அந்தப் பருவத்துலதான் இன்னொசென்ஸ் தொலையும். சமூகம் சில விஷயங்களைக் கத்துக்கொடுக்கும். அந்த 12 வயசுப் பசங்களோட நல்ல குணங்களையும், ஒற்றுமையையும் படத்துல சொல்லியிருக்கேன். எல்லார் வாழ்க்கையிலயும் மறக்க முடியாத அந்தப் பருவத்தை உணர்த்தத்தான் 'பூவரசம் பீப்பீ’னு டைட்டில்வெச்சேன்!''

பூவரசம் பீப்பீ!

''குழந்தைகள் படம் எடுக்கணும்னு எப்படித் தோணுச்சு?''

''எனக்குக் குழந்தைப் பருவம் ரொம்பப் பிடிக்கும். 'பசங்க’ படம் வர்றதுக்கு முன்னாடியே குழந்தைகள் படம் பண்ற ஐடியாலதான் இருந்தேன். ஆனா, அதுக்கான வாய்ப்புகள் அமையலை. கௌதம் மேனன் சார் தயாரிப்புல அப்பா-மகன் உறவுபத்திப் படம் எடுக்கத்தான் முதல்ல கமிட் ஆகியிருந்தேன். அப்போ அதுக்கு ஏத்த ஆர்ட்டிஸ்ட் கிடைக்கலை. அப்போதான் குழந்தைகள்பத்தி ஒரு குறும்படமோ, டெலி ஃபிலிமோ எடுக்கலாம்னு ஒன் லைன் ரெடி பண்ணேன். ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா கிட்ட ஒன் லைன் சொன்னதும் 'இதை ஃப்யூச்சர் ஃபிலிமாவே’ பண்ணலாம்’னு சொன்னார். திரைக்கதையா டெவலப் பண்ணிப் பார்த்தப்ப, ரொம்ப அழகா வந்துச்சு. உடனே, ஷூட்டிங் ஆரம்பிச்சிட்டோம். இப்போ எந்தத்  திரைப்பட விழாவை எடுத்துக்கிட்டாலும், அதுல குழந்தைகள் படங்கள்தான் வருது. ஈரான்ல குழந்தைகளை மையப்படுத்தி அழகழகான படங்கள் நிறைய வந்திருக்கு. அந்த மாதிரி தமிழ்ல என்னால் ஆன முயற்சி இது!''

''பொதுவா, தமிழ் சினிமாவில் குழந்தைகள் இயல்புக்கு மீறி ஓவராப் பேசுறது மாதிரி காட்டுவாங்களே?''

''இதில் குழந்தைங்களை அதிபுத்திசாலியாகவோ, மேதாவியாகவோ காட்டலை. உண்மையில் குழந்தைங்க உலகம் வேற. அதுக்குள்ள நிறையவே பயணம் செஞ்சு வசனங்கள் எழுதியிருக்கேன். காட்சிகள் வெச்சிருக்கேன். பொன்வண்டு பிடிச்சு சந்தையில விற்கிறது மாதிரியான குழந்தைகளின் குட்டிக் குட்டி சந்தோஷங்களைப் பதிவுசெய்திருக்கேன். இந்தப் படம், இயக்குநர் பார்வையில குழந்தைங்க வாழ்க்கையைச் சொல்லலை. குழந்தைங்க பார்வையிலேயே அவங்க வாழ்க்கையைச் சொல்லியிருக்கோம்!''

பூவரசம் பீப்பீ!

''பெண் இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் நிலைச்சு இருக்க மாட்டேங்கிறாங்களே ஏன்?''

'' 'ஐயாம் சாம்’ படம் இயக்கின ஜெஸ்ஸி மாதிரி சர்வதேச அளவில் நிறையப் பெண் இயக்குநர்கள் தொடர்ந்து படம் பண்ணிட்டுதான் இருக்காங்க. இப்பவும் தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்களுக்கான இடம் அப்படியேதான் இருக்கு. படங்களைச் சரியா, ரசனையா, நல்லபடியா தந்தா நிச்சயம் நிலைக்கலாம். என் படங்கள் சரியா இருக்கும். இனிமேல் இந்தக் கேள்வியை இன்னொரு பெண் டைரக்டர்கிட்ட கேட்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது!''